வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் நுழைவாயிலில் உள்ள முற்றத்தில் வகுப்பறைகளுக்கு மத்தியில் வலைப் பந்து மைதானத்தை அமைப்பதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகளின் எதிர்ப்பையும் மீறி சுமார் 15 வரையான 200 வருடங்கள் பழமை வாய்ந்த பெரும் மர்ஙகளை பெக்கோ இயந்திரத்தின் மூலம் வெட்டி வீழ்த்தியதைத் தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆசிரியர்களாலும் பெற்றோர்களினாலும் படித்த பழைய மாணவர்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை அந்த அரசியல் வாதியின் தாளத்திற்கெல்லாம் ஆடிக்கொண்டிருந்த அதிபரையும் உடனடியாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையும் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் ஆளுநரின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக்கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு அமைய சனிக்கிழமை 21.01.2106 பிற்பகல் 1.00 மணிக்குக் கல்லூரி மண்டபத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற இருந்த வேளையில் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் இருவர் மட்டுமே கலந்து கொள்ளமுடியும் என்ற விதிமுறையையும் மீறி, பழைய மாணவர் சங்க உறுப்பினர் என்று கூறிக் கொண்டு கூட்ட மண்டபத்தினுள் க.சிவாஜிலிங்கம் நுழைந்ததும், அங்கு சமுகமளித்திருந்த ஆசரியர்களும், சில பெற்றோர்களும் வெளிநடப்புச் செய்தனர். அவர்களது செயலினால் அதிரிச்சி அடைந்த அதிபர், இந்த இக்கட்டான நிலையைத் தவிர்ப்பதற்காக உடனடியாகக் கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு கூட்ட மண்டபத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் கல்லூரியின் வளங்களை அரசியல் வாதிகளின் துணையுடன் அழித்து வரும் அதிபரை மாற்றுவதுடன் எந்த ஒரு அரசியல்வாதியும் கல்லூரிக்குள் நுழைவதைத் தடுக்கும் வரை தமது போராட்டம் ஓயப்போவதில்லை எனவும் ஒரு சிரேஸ்ட ஆசிரியர் தெரிவித்தார்.