இறுதி விடை கொடுப்போம்
தென்னங்கீற்றும்
தெவிட்டாத தென்றலும்
வாசம் வீசும் பாலாவின் கனியும்
பசும் தழை பரப்பி
பார்ப்போரை பரவசமாக்கும்
பன்னெடுங்கால
பரந்த வேம்பும்
குடை விரித்த இத்தியும்
வனப்பு மிக வாழையும்
எங்கே? எங்கே?
முந்நூறு ஆண்டு
முதிர்ந்த மரங்கள்
மூன்று மணி நேரத்தில்
(இரு) பெக்கோவல்
முடிவாகிப்போனதே
பட்டங்கள் பல பெற்ற
சட்டம்பிமார்கள்
முப்பத்தைந்து பேர்கள்
இருந்தென்ன பயன்
பத்தாம் வகுப்பு பாலக அறிவிடம்
தோற்று விட்டனரே
சட்டாம்பிமார்களே!
உங்கள் பட்டங்களுக்கு
மூச்சை கட்டி
வானில் பறக்க விடுங்கள்
அதற்குத்தான் பயன்படும்
தம்பி
இருந்த இடம் தெரியாமல்
இருந்து விட்டு வாடா
என்றா வீட்டார் அனுப்பி
வைத்தனர்
மரங்கள் இருந்த இடம்
தெரியாமல் ஆக்கிவிட்டீர்களே
எல்லாம் முடிந்த பிறகு
கூட்டங்கள் போட்டு
கூப்பாடு போட்டு என்ன பயன் ?
வீழ்ந்த மரங்கள்
எழுந்து விடவா போகின்றது?
வேலியின் ஓணானை
வேட்டிக்குள் விட்டவர்கள்
நீங்கள் தானே
அப்போ
வேடிக்கைதானே
பார்க்க வேண்டும்
வாழ்வினை முடித்தவர்களின்
பேச்சினை முடியுங்கள்
பத்தாம் வகுப்பு பாலகன்
நடிகர் திலகத்துக்கும்
மூட்டை கட்டி
வழியனுப்புங்கள்
இறுதி விடை கொடுங்கள்.