பிரித்தானியாவில் வாழும் தமிழ்மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட சிறுவர்கள், ஆங்கில மொழியைத் தமது சொந்த மொழியாகக் கொண்ட சிறுவர்களை விட சிறப்பாகச் செயற்படுகிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
ஒரு ஆண்டில் இடம்பெறும் ஆறு பரீட்சைகளில் ஆங்கில மொழியைத் தமது சொந்த மொழியாகக் கொண்டுள்ள மாணவர்களை விட ஆசிய மொழிகளைப் பேசுகின்ற மாணவர்கள் மிகச் சிறப்பான முறையில் தேர்ச்சி அடைந்துள்ளதாக கல்வித் திணைக்களத் தகவல்கள் சுட்டிநிற்கின்றன.
பிரித்தானியாவில் ஆரம்பக் கல்வியை நிறைவுசெய்யும் மாணவர்களுக்காக இடம்பெறும் பரீட்சையில் சீன மற்றும் தமிழ் மொழி பேசும் மாணவர்கள் ஐந்து அல்லது அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெறுகின்றனர். 10 மற்றும் 11 வயது மாணவர்களுக்கான வாசிப்புப் பரீட்சைகளில் ஆங்கில மொழியைத் தமது முதலாவது மொழியாகக் கொண்ட மாணவர்களில் 50 சதவீதத்தினரே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெறுகின்றனர்.
இருப்பினும் தமது வீடுகளில் சீன மொழிபேசும் 60 சதவீதமான மாணவர்கள் ஆங்கில மொழி பேசும் மாணவர்களைப் போன்று வாசிப்புப் பரீட்சைகளில் உயர் புள்ளிகளைப் பெறுகின்றனர். சிறிலங்கா மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் பேசப்படும் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்ட 53 சதவீத மாணவர்கள் ஆங்கில வாசிப்புப் பரீட்சைகளில் உயர் புள்ளிகளைப் பெறுகின்றனர்.
கணித பாடப் பரீட்சையில் சீன மொழி பேசும் மாணவர்கள் 70 சதவீத உயர் புள்ளிகளையும், தமிழ் மாணவர்கள் 69 சதவீத புள்ளிகளையும் பெறுகின்றனர். கணித பரீட்சையிலும் ஆங்கில மொழி பேசும் மாணவர்களை விட தமிழ் மற்றும் சீன மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெறுவதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கணித பாடப் பரீட்சையில் 41 சதவீதமான ஆங்கில மாணவர்களே சித்தியடைகின்றனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தரநிலைப்படுத்தப்பட்ட பரீட்சைகளில் (SATS) சீன மொழியைப் பேசும் 1600 மாணவர்கள் சிறந்த புள்ளிகளையும் தமிழ் மொழி பேசும் 2800 மாணவர்கள் சிறந்த புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.
பிரித்தானியாவில் காலாதி காலமாக வாழும் மக்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் காண்பிக்கும் அக்கறையை விட, பிரித்தானியாவில் குடியேறியுள்ள மக்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறையுடன் செயற்படுவதுடன் தமது ஆதரவுகளையும் வழங்கி வருவதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆங்கிலத்தைத் தமது சொந்த மொழியாகக் கொண்டிராத பிரித்தானியப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கல்வித் திணைக்களம் பதிவு செய்துள்ளது.
பிரித்தானியாவில் 317 வேற்று மொழி மாணவர்கள் கல்வி கற்பதாகவும் இவர்களில் உருது மொழியை 144,000 மாணவர்களும் போலந்து மொழியை 113,000 மாணவர்களும் பஞ்சாப் மொழியை 105,000 மாணவர்களும் தமது தாய்மொழியாகக் கொண்டுள்ளதாக அண்மைய புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மாணவர்கள் ஒவ்வொருவரினதும் புறச்சூழலைப் பொறுத்தே அவர்களது கல்வித் தரமும் வேறுபடுவதை இந்தப் புள்ளிவிபரத்தின் மூலம் அறிய முடிகிறது. இந்த அடிப்படையில், சீன மற்றும் தமிழ் மொழி பேசும் மாணவர்கள் பாடசாலையில் பெறும் கல்வியறிவை விடத் தமது வீடுகளில் அதிகளவில் கல்வியறிவையும் அதற்கான புறச்சூழலையும் பெறுகின்றனர். இவர்களது பெற்றோர்கள் இவர்களது கல்விக்கு உறுதுணையாக விளங்குகின்றனர்’ என பிரித்தானியாவைச் சேர்ந்த சமூக ஆய்வாளரான அனஸ்ராசியா டீ வால் குறிப்பிட்டுள்ளார்.
‘பிரித்தானிய அரசாங்கமானது தனது நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பிள்ளைகளும் இளையோரும் அவர்களது புறச்சூழலுக்கு அப்பால் சிறந்த, தமக்குத் தேவையான கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியும்’ என பிரித்தானிய கல்வித் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
‘எமது பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக நாங்கள் பாரபட்சமற்ற கல்வியை வழங்கி வருகிறோம். இது எமது பிரதான திட்டமாகும். சில இனக்குழும மாணவர்களை விட வேறு சில இனக்குழும மாணவர்கள் கல்வியில் சிறப்பாகச் செயற்பட முடிவதை நாம் அறிவோம். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த மாணவர்களின் கலாசார, பூகோள மற்றும் பொருளாதாரக் காரணிகள் இதில் செல்வாக்குச் செலுத்துகின்றன’ என கல்வித் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வழிமூலம் – express
மொழியாக்கம்- நித்தியபாரதி