தமிழ்த்தேசியம்-இரட்டை மெழுகுவர்த்தி-தமிழக அரசியல்! – ம.செந்தமிழ்.
உலகெங்கும் பல கோடி தமிழர்கள் பரவி வாழ்ந்துவந்தாலும் தமிழீழம் மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு இடங்களில்தான் ஆதி முதல் நிலம்சார்ந்த தமிழர்களுக்கான அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இரு நாடுகளில் இருந்தும் பல்வேறு தேவைகள் நிமித்தம் புலம்பெயர்ந்த தமிழர்களின் குடிப்பரம்பலின் தொடர்ச்சியே இன்று தமிழன் இல்லாத நாடில்லை என்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
வலிமையுடன் தொடரும் ஈழத்தமிழர் ஆதரவு நிலை!
தமிழீழத்தில் சிங்கள இனவெறி அரசுகளால் காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்பட்டு வந்த இனவழிப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொப்புள்கொடி உணர்வின் வெளிப்பாடாக அமைந்த இந்த ஆதரவு நிலையானது அரசியல் தளத்திற்கும் விரிவடைந்து ஆட்சி அதிகாரத்தை மாற்றியமைக்கும் வலிமைபெற்றதாக விளங்கிவருகின்றது.
தமிழ்நாட்டில் 2011 இல் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு தி.மு.க., காங்கிரசு கூட்டணியின் உலகமகா ஊழல் உள்ளிட்ட பல காரணங்கள் இருந்தாலும் தமிழினப்படுகொலையில் பிரதான பங்காளர்களாக இந்த இருகட்சி கூட்டணி இருந்தமையே முக்கிய காரணமாக இருந்தது என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
இன்றும் தமிழக அரசியலில் ஈழத்தமிழர் விடயம் செல்வாக்கு செலுத்திவருகின்றதென்பதையே மீண்டும் அ.தி.மு.க. அரசு அமைந்தால் தனித் தமிழீழம் அமைவதற்கும், அங்கு தமிழர்கள் முழுமையான சுதந்திரத்துடனும், தன்மானத்துடனும் வாழ்வதற்கும் தொடர்ந்து பாடுபடப்போவதாக தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளதுடன், தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளமை நிரூபித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் 16 ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தத்தமது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுவருகின்றன. அரசியலுக்காக தமிழக முதல்வர் ஈழம் சார்ந்த விடயத்தை பேசுவதாக சொல்பவர்களால் கூட அதே அரசியலுக்காக ஈழத்தை கைவிட்டுள்ளதன் மூலம் தம்மைத்தாமே அம்பலப்படுத்தியுள்ளார்கள்.
தமிழினத் துரோகத்தால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தொடர் வீழ்ச்சிகளை சந்தித்து வருகின்ற நிலையில் தமிழ்த்தேசிய அரசியலை முன்வைத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கும் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவில் ‘ஈழம் எங்கள் இனத்தின் தேசம்’ என்ற தலைப்பில் ஈழத்தமிழர் விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட கோட்டை மணல் கோட்டையாக தூர்க்கப்பட்டது!
ஈழத்தில் மாபெரும் இனப்படுகொலையை நடத்த இந்தியா-சிங்களம்-சர்வதேசம் கூட்டுசதியில் ஈடுபட்டிருந்த போது, எப்படியாவது போர் நிறுத்தத்தை கொண்டுவந்து ஈழத்தமிழ் சொந்தங்களை காப்பாற்ற வேண்டும் என்ற முடிந்த முடிவுடன் அக்கினிப்பிரவேசம் செய்த ‘வீரத் தமிழ் மகன்’ முத்துகுமார் உள்ளிட்ட தமிழகத்து உறவுகள் கட்டியெழுப்பிய எழுச்சி நிலையை சுயநல நீர் ஊற்றி அணைத்தவர்கள் தமிழ்த்தேசிய அரசியலில் முன்னவர்களாக இருந்தவர்களே.
இதனால், தமிழ்த்தேசியத்தை முன்வைத்து கட்டியெழுப்பப்பட்டிருந்த கோட்டை மணல் கோட்டையாகி தூர்ந்துபோனதன் வெளிப்பாடுதான் ஈழத்தில் தங்குதடையின்றி அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் பெருந்துயரமாகும். தமிழகத்து இளையவர்களின் ஆழ்மனதில் ஈழ ஆதரவு நிலை நீறு பூத்த நெருப்பாகத் தகித்துக்கொண்டிருக்கிறது என்பதை 2013 மாணவர் எழுச்சி பறைசாற்றியது. அப்போதும் அரசியல் வேடதாரிகள் உட்புகுந்து மடைமாற்றம் செய்தார்கள். அதன் பின்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலுக்குறைந்த முன்னெடுப்புக்களே ஈழம் சார்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
தமிழ்த்தேசிய அரசியலின் கையறு நிலையில் தோற்றுவிக்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி!
இந்நிலையில்தான் ஈழப்பிரச்சினையை பேசுபொருளாக்கி தமது அரசியல் முன்னெடுப்பை மேற்கொண்டுவரும் செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி உலகத்தமிழர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
தமிழர் நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும் என்ற சீமானின் முழக்கம் வெறுமனே ஆட்சி அதிகாரத்தின் மீதான அடங்காத ஆசையின் வெளிப்பாடாக பார்க்கமுடியாது. இந்தத் தேர்தலானது நாம் தமிழர் கட்சியின் கன்னி முயற்சியென்பதும் 2021, 2026 இல் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் களமே அவர்களுக்கான அரசியல் வாய்ப்பை பரிசோதிக்கும் களமாகும் என்பதையும் சீமான் உள்ளிட்டவர்கள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.
அப்படியிருந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், ஆண்டு அனுபவித்த இருபெரும் திராவிட அரசியல் சக்திகளுக்கு மத்தியில், சில பத்து ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற ஏனைய கட்சிகளுக்கு மத்தியில் தனித்து 234 தொகுகளிலும் போட்டியிடுவதுடன் வெற்றி தோல்விகளை கடந்து கடுமையாக பணியாற்றிவருகிறார்கள்.
செந்தமிழன் சீமான் அவர்களின் பின்னால் பேரெழுச்சியுடன் அணிதிரண்டு நிற்கும் இளைஞர்படை தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டின் வெளிப்பாடே. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நூறுபேருடன் ஈழ ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றுவரும் புறச்சூழலில் பல்லாயிரம் இளைஞர்களை ஈழ ஆதரவுத்தளத்தில் திரளவைக்கும் சீமான் அவர்களை விமர்சனங்கள் கடந்து ஆதரித்து பலப்படுத்துவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட 2008, 2009 காலகட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்கள் பின்னால் ஓடி ஓடி போராடிய சீமான் அவர்களின் இன்றைய நிலையில் சரி, தவறு என எதுவாக இருந்தாலும் அதற்கு தமிழகத்து தமிழ்தேசிய தளத்தில் முன்னவர்களாக இருந்தவர்களே முழுக்க முழுக்க காரணமாகும். அவரவர் அரசியல் நிலைப்பாட்டிற்குள் நின்றுகொண்டு ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் வேறுபாடுகளை காட்டிநின்றதுடன் சாதியின் பெயராலும், கட்சிகளின் பெயராலும் பிளவுபட்டு நின்றதன் வெளிப்பாடாகவே இன்றைய தமிழர் தேசத்தை தமிழர் தான் ஆழவேண்டும் என்ற தனித்தமிழ் முழக்கத்தினை முன்னிறுத்தியதான சீமானின் அரசியல் பயணம் அமைந்துள்ளது.
ஒடி ஓடி வந்தபோது இனநலனை முன்னிறுத்தி அரவணைக்கத் தவறியவர்கள் சீமானை தமது போட்டியாளராக பார்த்த இழிநிலையே அவரை தனிப்பாதையில் நடைபோடத் தூண்டியது. அன்று அரவணைத்து தமிழ்த்தேசியத்தளத்தை வலிமைப்படுத்த தவறியவர்கள் இன்றும் குற்றம் குறைகளை தேடித்தேடி கண்டுபிடித்து விமர்சித்துவருவதன் மூலம் அதே தவறையே மீண்டும் செய்துவருகின்றார்கள்.
தமிழர் நலன்சார் வாக்குவங்கியின் சின்னமே ‘இரட்டை மெழுகுவர்த்தி’!
நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தின் மீது புள்ளடியிடப்படும் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமாகும். தமிழகத்தில் ஆட்சியதிகாரத்தையே மாற்றும் வலிமைபெற்று விளங்கும் ஈழத்தமிழர் விடயம் எல்லோராலும் கிள்ளுக்கீரையாக பயன்படுத்தப்படுவதற்கு காரணம் ஈழத்தமிழர் விடயம் வாக்கு வங்கியாக நிரூபிக்கப்படமையே ஆகும்.
ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்திய தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி பெறும் வாக்குகளே தமிழக அரசியல் வரலாற்றில் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் கலை-கலாச்சாரம்-பண்பாடு சார்ந்த வாக்குவங்கியாகவும் ஈழ ஆதரவு வாக்குவங்கியாகவும் நிலைபெறும். தமிழக அரசியலில் ஒவ்வொரு கட்சியும் தேர்தலின் போதும் கூட்டணி பேரம் பேசுவதும், ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ மற்றக்கட்சிகளை தமது கூட்டணிக்குள் தக்கவைப்பதற்கு பேரம் பேசுவதும் அக்கட்சிகள் வைத்திருக்கும் வாக்குவங்கியின் அடிப்படையில்தானே தவிர கொள்கைசார்ந்தல்ல.
ஏழு கோடிக்கும் அதிகமான தமிழர்களைக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழர் நலன் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு தமிழர்களின் பலம் சாதி-மதம்-கட்சி எனப்பிரிக்கப்பட்ட வாக்குவங்கிகளாக பேனப்பட்டுவருவதே காரணமாகும். சாதி, மத, கட்சி அடிப்படையில் அவற்றின் நலன்களுக்கு விரோதமாக சிந்திக்கவே பயப்படும் நிலைக்கு அவைசார்ந்த வாக்குவங்கியே காரணமாக இருந்துவருகிறது.
சாதி, மதம், கட்சி ஆகியவற்றிற்கு இருக்கும் இந்தப் பாதுகாப்பு கவசம் இனம் சார்ந்ததாக மாறவேண்டும். அப்போதுதான் தமிழர் நலன்களுக்கு எதிராக சிந்திக்கவே ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் பயப்படும் நிலை உருவாகும். முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நதி நீர் விவகாரம், மீனவர் விவகாரம், கூடன்குளம் விவகாரம், மீத்தேன் விவகாரம், நியூட்றினோ விவகாரம், தாது மணல் விவகாரம், ஆற்று மணல் விவகாரம் என தமிழக மக்களின் வாழ்வுரிமை சார்ந்த விவகாரங்களிலும், ஈழத்தமிழர் விவகாரம், ஏழு தமிழர் விடுதலை ஆகிய உயிர் சார்ந்த விவகாரங்களிலும் தொடர்ந்தும் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதற்கு இந்நிலையே காரணமாகு.
ஆண்ட கட்சி, மீண்டும் ஆளத்துடிக்கும் கட்சி என இரண்டு கட்சிகள் தவிர்த்து தமிழர் உரிமைகளை மீட்டெடுத்து வாழ்வை வளப்படுத்துவோம் எனக்கூறி தம்மை மாற்றுத்தலைமையாக முன்நிறுத்தி அரசியல் பிரவேசம் செய்த மற்றக்கட்சிகளும் கால ஓட்டத்தில் இந்த இரு கட்சிகளின் நிழலில் அரசியல் பயணத்தை தொடர்ந்து அவர்களின் அனைத்து செயற்பாடுகளிலும் பங்காளர்களாகியதுதான் கொடுமை.
அவ்வாறு இந்த இரு கட்சிகளுடன் காலத்திற்கு காலம் மாறி மாறி கூட்டணிசேர்ந்த இந்தக் கட்சிகள்கூட தமிழர் வாழ்வுரிமை சார்ந்த எந்த விடயத்தையும் முன்னிறுத்தி வாக்குறுதிகளைப்பெறாது தொகுதிப்பங்கீடு உள்ளிட்ட தத்தமது அரசியல் சார்ந்த விவகாரங்களையே முன்னிறுத்தி கூட்டணிசேர்வதும் பிரிவதுமாக சந்தர்பவாத அரசியலில் காலங்கடத்திவருகிறார்கள்.
இவ்வாறாக கடந்த காலத் தேர்தல்கள் கசப்பான அனுபவங்களுடன் கடந்துபோன நிலையில் இம்முறை மாற்றம் என்ற முழக்கம் அதிகமாக எழுப்படும் தேர்தல் களமாக மாறியுள்ளது.
குழப்பகரமான கூட்டணியாக ஒட்டவைக்கப்பட்டிருக்கும் ம.ந.கூட்டணி-தே.மு.தி.க.-த.ம.க. கூட்டணி!
தமிழக மக்களின் வாவுரிமை சார்ந்த விவகாரங்கள், ஈழத்தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை விட்டுக்கொடுத்து ஒரு கூட்டணியை உருவாக்கி இரு பெரும் கட்சிகளால் கை கழுவிவிடப்பட்ட கட்சிகளையும் சேர்த்து தாம் தான் மாற்று என்று ம.ந.கூட்டணி-தே.மு.தி.க.-த.ம.க. கூட்டணி ஒருபக்கம். இவர்கள் மக்களுக்காகவோ கொள்கைக்காகவோ ஒன்றுசேராது முதலில் வெற்றி அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம் என்ற அடிப்படையில் குழப்பகரமான கூட்டணியாக ஒட்டப்பட்டுள்ளார்கள்.
சாதிய எல்லை கடந்து சிந்திக்காத பா.ம.க.!
ஆரம்பம் முதல் இந்த நொடிவரை தாம் சார்ந்த சாதி அடிப்படையிலான அரசியலை முன்னெடுத்துவரும் பா.ம.க. சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கும் அன்புமணி அவர்களும் தானே மாற்று என்று கூறிவருகின்றார். தமது அரசியல் நலனுக்காக சாதிய மோதல்களை திட்டமிட்டு உருவாக்கி அதில் குளிர்காய்ந்துவரும் இவர்கள் என்றுமே சாதி கடந்து சிந்தித்திருக்காதவர்கள். இன்று தாமே மாற்று என்ற முழக்கத்துடன் வருவது வேடிக்கையாகவே உள்ளது.
ஈழத்தைப் போன்ற இனம்சார் வாக்குவங்கியே தமிழர் வாழ்வுரிமையின் கவசமாகும்!
இவை ஒருபக்கம் இருக்க தமிழக அரசியலில் தமிழ்த்தேசிய வாக்குவங்கி பலப்படுத்தபட வேண்டியது காலத்தின் தேவையாகும். ஈழ அரசியலைப் பொறுத்தவரை தமிழர்களது வாக்கானது இன அடிப்படையில் ஒருமுகப்படுத்தப்பட்டு இருப்பதனால்தான் தமிழர் நிலத்தில் தமிழர் சார்ந்த கூட்டமைப்பு வாகைசூட முடிகிறது. மத்தியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் தமிழர் தேசத்துப் பிரதிநிதிகளாக தமிழர்களே இருக்கின்ற போதிலும் மக்களின் தெரிவானது தமது வாக்கு தம்மை தமிழ்த்தலைமை ஆளவா இல்லை தம்மை சிங்களத் தலைமை ஆளவா என்ற அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. அவ்வாறானதொரு நிலை தமிழகத்தில் உருவாகுவதற்கான அடித்தளமாக நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரம் அமைவதை உறுதிசெய்வதாக உங்கள் வாக்குகள் அமையட்டும்.
நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள ஈழத்தமிழர் தொடர்பான விபரங்கள்…
ஈழத் தேசம், ஒன்றுபட்ட நாடாக இலங்கை மாறியதற்கு முன்பிருந்தே தமிழர்கள் ஆண்ட பூமி. தமிழுக்கும் தமிழ் மக்களுக்குமான வரலாறு சிங்களவர்களுக்கும் முன்னதானது. அப்படி வாழ்ந்த இனம் இன்று இன அழிப்பிற்கு உள்ளாகி நாடற்ற இனமாக உலகத்தாரிடம் நீதி கேட்டு நிற்கிறது என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது…
ஈழம் எங்கள் இனத்தின் தேசம்!
• நாம் தமிழர் அரசு ஈழத்தை ஒரு தொலைதூரத் தீவாக, மூன்றெழுத்துச் சொல்லாகப் பார்க்கவில்லை. தமிழ்த்தேசிய இனத்தின் மூச்சாக, உயிராக, பெருங்கனவாகப் பார்க்கிறது. ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு தேசத்தை என்று அடைகிறதோ அன்று தான் முழுமையான விடுதலை அடையும்.
• உலகத்தில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மூத்த தொல்குடி இனமாகிய தமிழ்த் தேசிய இனம் 130 நாடுகளில் பரவி வாழ்கிறது.
• தமிழன் வாழாத நாடில்லை! ஆனால் தமிழனுக்கென்று ஒரு நாடில்லை. 4 இலட்சம், 5 இலட்சம், 20,000 எனத் தேசிய இன மக்களைக் கொண்ட நாடுகளும் 200 கி.மீ., 300 கி.மீ. சுற்றளவுக்குள்ளே வாழும் தேசிய இன மக்களும் விடுதலை பெற்றுப் பெருமையாக வாழ்கிறார்கள்..
ஈழத்தில் நடைபெற்றது விடுதலைப்போராட்டம்!
• ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தமிழ்க்குடி, 13 கோடிக்கு மேல் பூமிப்பந்தில் நிறைந்து வாழ்கின்ற ஒரு தேசிய இனத்தின் மக்கள், இந்த உலகில் தங்களுக்கென்று ஒரு தேசம் அடைந்து எல்லா மொழிவழித் தேசிய இனங்களைப் போல விடுதலை பெற்று, உரிமை பெற்று, உயர்ந்து, சிறந்து பெருமையோடு ஏன் வாழக்கூடாது? என்ற கனவோடுதான் அங்கே ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கியது. அதைத்தான் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமாக முன்னெடுத்தார்கள்.
• ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதை விடச் சுதந்திரமாகச் சாவது மேலானது. அதுவும் அந்தச் சுதந்திரத்திற்காகப் போராடிச்சாவது அதைவிட மேலானது என்ற முழக்கத்தை முன்வைத்துத்தான் அங்கே விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
• இதைப் பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் என்று பார்ப்பது வெறும் அர்த்தமற்ற தேவையற்ற ஒரு குற்றச்சாட்டாக நாம் தமிழர் அரசு பார்க்கிறது.
• இரஷ்ய புரட்சியாளர் இலெனின், ‘ஒடுக்குகின்ற தேசிய இனத்திடம் இருந்து ஒடுக்கப்படுகின்ற தேசியயினம் விடுதலை பெற விரும்புவது தன்னுரிமை, அந்தத் தன்னுரிமையைப் போராடிப் பெறவேண்டியது ஒவ்வொரு தேசிய இனத்தின் பிறப்புரிமை’ என்று சொல்கிறார்.
• ஒரு வீட்டில் வாழப்பிடிக்காத பெண் சட்டப்படி மணமுறிவு பெறுவதைக் குடும்ப உறவையே சிதைக்கின்ற ஒன்றாகப் பார்ப்பது எப்படிச் சரியாகாதோ அது போன்று, ஒரு நாட்டில் இருந்து ஒரு நாடு பிரிவதென்பதை தவறாகப் பார்ப்பது, பிரிவினைவாதமாகப் பார்ப்பது ஏற்க முடியாதென்று இலெனின் கூறியுள்ளார். அந்த அடிப்படையில் தமிழ்த் தேசிய இனமக்கள் பிறப்புரிமைக்காக நிற்கின்றோம். எங்கள் தாய் நிலத்திலே நாங்கள் பிறந்த இடத்திலே சுதந்திரமாக வளர்ந்து வாழ்வதற்கான உரிமையைத்தான் கேட்கின்றோம்.
• அந்தப் போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசு உலகப் பேராதிக்க நாடுகளின் துணையோடு நசுக்கி எமது நாட்டைச் சுடுகாடாக்கி நிறுத்தியிருக்கின்றது. எமது மக்கள் வீட்டை இழந்து, நாட்டை இழந்து, உயிரை இழந்து, இன்று ஏதிலிகளாகப் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள்.
• உலகத்தில் தன்மானத்திற்கு என்று இயக்கம் கண்டவன் தமிழன். இன்று அவமானச் சின்னமாக அலைகின்றான். ஈக்கும் எறும்புக்கும் இரையாக இருக்கட்டும் என்று அரிசிமாவில் கோலம் போட்ட இனம், அரைப்படி அரிசிக்குக் கையேந்தி நிற்கிறது. கோட்டை கட்டி ஆண்ட இனம் கோணித்துணி கட்டித் தூங்குகின்றது.
ஈழத்தில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை!
• இப்பிடிப்பட்ட இழிநிலையில் ஒரு அவமானத்தின் இழிவான சாட்சியாக எமது இனம் நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஒரு அரசியல் விடுதலைப் போராட்டத்தை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் முன்னெடுக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் இறுதியாக 2008 தொடங்கி 2009 மே 18 க்குள் 1,75,000 பேருக்கு மேல் மக்களைக் கொலைசெய்து, உலக வரலாற்றில் இப்பிடியொரு கொடூர இனப்படுகொலை நடக்கவில்லை என்கின்ற அளவிற்கு நடத்திக் காட்டியிருக்கின்றது சிங்கள அரசு.
• வரலாறே பதிவுசெய்யப் பயப்படுகிற அளவிற்கு மிகக்கொடுமையான போரை நிகழ்த்தித் தன் சொந்தநாட்டு மக்களைச் சிங்களப் பேரினவாத அரசு அழித்து ஒழித்து விட்டது. இதைப்பற்றிப் பேச உலகத்தில் ஒருவரும் இல்லை. இன்றைக்கும் அந்த நிலத்தில் 90,000 விதவைகள் இருக்கின்றார்கள்.
• பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் நச்சுக் குண்டுகளுக்கு இரையாகிக் கரிக்கட்டையாகக் கிடந்தார்கள். பல்லாயிரக்கணக்கான எம் குலப்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள்.
• இதைப்பற்றி பேச உலகத்தில் ஒருவரும் இல்லை. தங்கை இசைப்பிரியாவின் மரணத்தையும், தம்பி பாலச்சந்திரனின் மரணத்தையும் குறிப்பிட்டுப் பேச மானுட நேயம் பேசுகிற உலகத்தாரிடத்திலே ஒரு குரலும் உயரவில்லை என்பது வரலாற்றில் பெருந்துயரம்.
• உடலில் எங்கு காயப்பட்டாலும் முதலில் கண் அழுவதுபோல, உலகத்தில் எங்கு காயப்பட்டாலும் முதலில் எங்கள் மண் அழுதிருக்கிறது. அப்படிப்பட்ட நாம் கண்ணீர் வடிக்கும் போது அதைத் துடைக்கவோ, கை நீட்டவோ காயம்பட்டபோது அதற்கு மருந்திடவோ ஒருவரும் இல்லாதது பெரும்கொடுமை. நிற்கதியாக நிற்கிற எமது இனமக்கள், இந்த உலகத்தில் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச சமூகத்திலும், ஐ.நா. பெருமன்றத்திலும் நியாயம் கேட்டு நிற்கின்றார்கள். உலகத்தின் பெரும் நாடுகளும் தலைவர்களும் (இந்தியா உட்பட) அங்கு நடந்தது வெறும் மனித உரிமை மீறல்தான் என்றும், சிலர் போர்க்குற்றம்தான் என்றும் கூறினர். இதை நாம் தமிழர் அரசு ஏற்க மறுக்கிறது.
• மனித உரிமை மீறல் என்பது ஒரு மனிதன் உயிரோடு இருக்கும் போது அவன் உரிமையைப் பறிப்பது ஆகும். ஒரு மனிதனின் உயிரையே பறிப்பது உரிமை மீறல் அன்று அது கொலை.
• போர்க்குற்றம் என்றால் போர் சரியானது. அதில் சில குற்றங்கள் நடந்திருக்கிறது என்றாகிறது. ஆனால் நாம் தமிழர் அரசு அந்தப் போரையே குற்றமாகப் பார்க்கிறது. அங்கே நடந்திருப்பது வெறும் கொலை அன்று, இனப்படுகொலை. பச்சிளம் குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று மரபு இருக்கிறது. அதையெல்லாம் மீறி இவையெல்லாவற்றின் மீதும் தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டது.
• குறிப்பாக இது பாதுகாப்பான பகுதி எல்லோரும் வாருங்கள் என்று அழைத்து, அங்கே மக்களைக் குவித்து, அந்த இடத்திலேயே தாக்குதல் நடத்தி அழித்தது.
• சொந்த நாட்டின் மக்களின் மீது வான்வழி தாக்குதல் நடத்தக்கூடாது என்று போர் மரபு இருக்கிறது. அதை மீறி அனைத்துத் தாக்குதலையும் வான்வழி மூலமாகவே நடத்தியது சிங்கள அரசு. அதும் வெறும் படுகொலை அல்ல, இனப்படுகொலை. இறந்தது முழுக்க தமிழர்கள், கொன்றொழித்தவர்கள் சிங்களவர்கள். எனவே அது இனப்படுகொலை. வெறும் இனப்படுகொலை மட்டுமல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. வெறும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் இந்தப் போரை நடத்தி அவர்கள் அழித்தொழிக்கவில்லை. சிறுகச் சிறுகச் சதி செய்து அழிக்கப்பட்டார்கள் தமிழர்கள்.
• ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலாக எமது மொழியைச் சிதைத்து, எமது அதிகாரங்களைப் பறித்து, எமது வளங்களைச் சுரண்டி, எமது நிலங்களை ஆக்கிரமித்து எமது மக்களை சிறுகச் சிறுக அழித்து முடித்தனர். எனவே இதைத் திட்டமிட்ட இனப்படுகொலையாக நாம் தமிழர் அரசு பார்க்கிறது.
சுதந்திர தமிழீழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!
• எங்களைக் கொன்றொழித்த கூட்டத்தோடு இனி கூடி வாழ்வதென்பது சாத்தியமில்லை. இலங்கையில் இரண்டு இனங்கள் ஒன்று தமிழர் மற்றொன்று சிங்களர். இரண்டும் பகை இனங்களாக 60 ஆண்டுகளாக மாறி நிற்கிறது.
• என் தாய், தந்தையர், என் அக்காள் தங்கை, பெரியம்மா சின்னம்மா உள்ளிட்ட என் உறவுகளின் பிணத்தின் மீது ஏறிச் சென்று, எம் மக்கள் சிந்திய கண்ணீரிலும் இரத்தத்திலும் நனைந்து கொண்டு போய் எமது இனமக்களைக் கொன்று குவித்த சிங்களவனோடு ஆரத்தழுவி, அரவணைத்து வாழ்வதென்பது சாத்தியமில்லை.
• எனவே எனக்கிருக்கிற ஒரே ஒரு வழி நோர்வே, சுவீடன் பிரிந்தது போல், கிழக்குத் தைமூர், மேற்குத் தைமூர் பிரிந்தது போல், செர்பியா நாட்டில் இருந்து கொசோவா விடுதலை பெற்றதைப் போல், அண்மையில் தெற்குசூடான் விடுதலை பெற்றதைப் போல்…
• கனடாவில் கியுபெக் இன மக்கள் இரண்டுமுறை பொதுவாக்கெடுப்பிற்கு வந்து அந்த பொதுவாக்கெடுப்பு தோற்றுப்போய், இன்று கனடாவில் இணைந்து வாழ்வது போல, அண்மையில் ஸ்கொட்லாந்து இன மக்கள் தனியாக நாடு கேட்டு அதற்குப் பொதுவாக்கெடுப்பு நடக்கப்பெற்று இங்கிலாந்தில் வாக்கெடுப்பு தோற்றுப்போய், அவர்கள் இங்கிலாந்தோடு வாழ்வதுபோல்…
• எமக்கொரு அரசியல் வாய்ப்பு, ஜனநாயக வாய்ப்பு தந்தாக வேண்டும். கிளிக்குத் தங்கத்திலே கூண்டு வைத்தாலும் அதில் தங்குவதா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டிய உரிமை கிளிக்குத்தான் உண்டு. ஒற்றை இலங்கைக்குள் ஒரே ஆட்சிக்குள்தான் வாழ்ந்தாக வேண்டும், இரண்டு நாடாகப் பிரியக்கூடாது என்று பேசுகிற பெருமக்கள், கருத்தாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், ‘எம் மக்களிடத்தில் ஒரே இலங்கைக்குள் வாழ்கிறார்களா? தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா?’ என்ற கருத்தை வைத்து ஒரு வாக்கெடுப்பு நடத்துங்கள்.
• ஒரே இலங்கைக்குள் வாழ்கிறோம் என்று வாக்குச் செலுத்திவிட்டால் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் வாய் மூடி மவுனியாகின்றோம். தனித் தமிழீழமாக மீள்கிறோம் என்று வாக்களித்து விட்டால், அறிவார்ந்த பெருமக்கள் வல்லாதிக்கத் தலைவர்கள் எல்லோரும் மற்ற நாடுகள் எப்படி ஜனநாயக முறைப்படி பிரிந்ததோ அப்படி எமது நாட்டைப் பிரித்துச் சுதந்திர நாடாக, எல்லோரையும் போல சுதந்திரமாக பிறக்க – வாழ – இறக்க எங்கள் தாய்நிலத்தில் உரிமை பெற்றுத்தாருங்கள்.
இந்தியாவிற்கு தமிழீழமே பாதுகாப்பு!
• இந்தியா – பாகிஸ்தான் போரின்போது இலங்கை பாகிஸ்தான் பக்கமே நின்றது. பாகிஸ்தான் வானூர்திகள் கொழும்பு வானூர்தி நிலையத்தில் எண்ணெய் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
• இந்தியா – சீனா போரின்போதும் இலங்கை சீனாவின் பக்கமே நின்றது. ஒருபோதும் இந்தியாவின் பக்கம் உண்மையாக விசுவாசமாக இருந்ததில்லை.
• ஆனால் ஈழத் தமிழர்களோ, இந்தியா – இலங்கை கிரிக்கெட் விளையாடும்போது இந்தியாதான் வெல்லவேண்டும் என்று உணர்வோடு கையொலி எழுப்புவார்கள்.
• தேசியத் தலைவர் பிரபாகரன், உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டத் தலைவர்களுடைய வரலாற்றை வாசித்து, நேசித்து இருந்தாலும், இந்திய மண்ணின் விடுதலைக்குப் போராடிய நேதாஜி சுபாஸ்சந்திர போசைத் தான் தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார்.
• எத்தனையோ நாடுகள், உங்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்கின்றோம். உதவியாய் நிற்கின்றோம். அதற்குப் பதிலாக எங்களுக்குத் திருகோணமலை கடற்பரப்பை 30 ஆண்டு ஒத்திகையாகக் கொடுங்கள் எனக் கேட்டபோது பிரபாகரன் அதை ஏற்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவிற்கு ஒருபோதும் நாங்கள் எதிராக போகமாட்டோம் என்பதுதான். மிகப்பெரிய இந்தியப் பற்றாளராக இருந்தார்.
• இந்தியாவைத் தங்கள் தந்தையர் தேசமாக ஈழத்தமிழ் உறவுகள் நேசித்து நின்றனர். தந்தையின் விரலைப் பிடித்துக்கொண்டு நடந்து போகும் செல்ல மகனைப்போல இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஈழம் இருக்கும்.
• ஈழம் என்ற ஒரு நாடு இருந்தால்தான் இங்கு இரத்த உறவுகளை வைத்திருக்கிற இந்தியாவிற்குப் பாதுகாப்பாக இருக்கும். இந்தியாவிற்கு எப்போதுமே உண்மையாக இருக்கும் ஒரு நாடு உண்டு என்றால் அது ஈழமாகத்தான் இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பிற்கும் எதிர்காலத்திற்கும் எப்போதும் ஈழம் என்று ஒரு நாடு இருப்பதுதான் சரியாக இருக்கும். இதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்ள வைப்போம்.
• ஈழத்தில் உள்ள எம் மக்கள் இந்தியாவின் விடுதலைக்குப் போராடிய சுபாஸ் சந்திரபோஸ், நேரு, காந்தி, இந்திராகந்தி ஆகியோரின் புகைப்படங்களைத்தான் வைத்திருந்தனர். இந்தியாவின் தலைவர்களைத்தான் தங்களின் தலைவர்களாக ஏற்றிருந்தார்களே தவிர சிங்களத்தின் தலைவர்களை அல்ல. ஆனால் எந்தச் சிங்களவனும் இந்தியத் தலைவர்களை ஏற்றுக்கொண்டதில்லை, கொண்டாடியதுமில்லை. சீனாவையும், பாகிஸ்தானையும் நேசிக்கிறார்களே ஒழிய, இந்தியாவை எதிரி நாடாகத்தான் பாவித்திக் கொண்டிருக்கிறார்கள்.
• இவ்வளவிற்குப் பிறகும் தொடர்ந்து இந்தியா இலங்கைக்கு இராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது. கப்பல், இராணுவத் தளவாடங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை எந்த நாட்டுடன் சண்டை போடுவதற்கு வழங்கிக் கொண்டிருக்கிறது? தன் சொந்த நாட்டு மக்களையே கொல்வதற்கு இந்த உதவிகளைச் செய்வது கொடுமையானது. இதை முற்றும் தடுக்க நாம் தமிழர் அரசு போராடும்.
புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்.
• விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற தடையை நாம் தமிழர் அரசு தமிழ்த் தேசிய இனத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு அவமானமாகக் கருதுகிறது.
• தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்கும் உரிமைக்கும் போராடிய மக்கள் இராணுவம் தான் விடுதலைப் புலிகள் அமைப்பு. அப்படித் தான் நாம் தமிழர் அரசு பார்க்கிறது.
• இன்றைக்கு அந்த இயக்கம் முழுவதுமாய் ஒழிக்கப்பட்டதாக இலங்கை அரசே அறிவித்த பிறகும், இந்தியாவில் தடையைத் தேவையற்று நீடிப்பது தமிழின மக்களின் உரிமை, அரசியலாக முன்நகர்வதை பலவழிகளில் தடுக்கிறது.
• இன்றைக்குத் தங்கள் சொந்த நாட்டில் வாழமுடியாத ஏதிலிகளாக எம்மக்கள் இடம் பெயரும்போது வயிற்றுக்குள் கருவில் இருக்கும் குழந்தையையும் இடுப்பில் இருக்கிற ஒரு வயதுக் குழந்தையையும் சர்வதேச சமூகம் தீவிரவாதிகளாகத்தான் பார்க்கிறது. இனவெறி அரசுக்குத் தப்பி ஓடிவரும் அகதிகளாகப் பார்க்கவில்லை. இப்படி அனைத்திற்கும் காராணம் புலிகள் மீதான தடைதான். அதுதான் முட்டுக்கட்டையாக உல்ளது.
• எனவே நாம் தமிழர் அரசு மத்திய அரசுடன் போராடித் தடையை நீக்கும்.
• அறிவார்ந்த ஆளுமைகளை ஒன்று திரட்டிக் குழு அமைக்கப்படும். அந்தக்குழு, இந்தியாவின் பிற மாநில முகவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், அரசியல்வாதிகள், கருத்தாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்துப் பேசும். ஈழ இனப்படுகொலைக்கான காரணங்கள் என்ன, எதற்காகப் புலிகள் போராடினார்கள் என்பதையெல்லாம் ஆவணங்களோடு விளக்கிக் கூறுவார்கள். இப்படித் தொடர் அழுத்தங்கள், பிரச்சாரங்கள் மூலம் இந்தியாவின் பிற மாநில மக்களின், பிற தேசிய இனங்களின் ஆதரவைப் பெற்று மத்திய அரசின் போக்கை மாற்ற முயற்சிகள் எடுக்கப்படும்.
• அதே போன்று உலகளவில் அந்தந்த நாட்டுப் பிரதிநிதிகளை, அறிவார்ந்தவர்களைச் சந்தித்து, புலிகள் மீதான தடை, இனப்படுகொலை விசாரணை, பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட பலவற்றையும் எடுத்துரைத்து நீதியைப் பெற்றுத் தருவோம்.
தனித் தமிழீழ பொதுவுடமைக் குடியரசே நிரந்தரத் தீர்வாகும்.
• உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் பெருமக்கள், அறிஞர்கள், துறைசார் வல்லுனர்கள், அந்தந்த நாட்டு பிரதிநிதிகள், பிற மொழித் தேசிய இனத்தலைவர்கள், பிற மாநிலத்தில் உள்ள கல்வியாளர்கள், தலைவர்கள் மாந்தநேய பற்றாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட அனைவரையும் அழைத்து தமிழ்ப் பெருங்குடி மக்களை பல இலட்சக்கணக்கில் திரட்டி மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டில் தமிழ்த் தேசிய இனத்திற்கென்று பரந்து விரிந்து கிடக்கின்ற இந்தப் பூமிப்பந்தில் ஒரு தேசம் அது தனித் தமிழீழ பொதுவுடமை குடியரசே என்று நாம் தமிழர் அரசு பேரறிவிப்பு செய்யும்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
• நாம் தமிழர் அரசுக்கு உயர்ந்த நோக்கங்கள் பல இருப்பினும் மிக உயரிய உயிரான கொள்கை தமிழ்த்தேசிய இன மக்களுக்கென இந்தப் பூமிப் பந்தில் ஒரு நாடு அடைவதில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறோம். இதில் 60 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடிய எமது அன்னைத் தமிழ்ச் சமூகம் இரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து வீட்டை இழந்து நாட்டை இழந்து பல்வேறு நாடுகளில் பரவி வாழ்கின்ற தாய்த்தமிழ் உறவுகள் பன்னாட்டு அரசியலாக மாற்றி நிறுத்தியிருக்கிற தனித் தமிழீழச் சோசியலிசக் குடியரசை அடைவதே இறுதி இலக்காக வைத்திருக்கும். இன்று, இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற புனிதக் கனவோடு நாம் தமிழர் அரசு ஒவ்வொரு அடியும் மிகக்கவனமாக எடுத்துவைத்து வெல்லும்.
இதுதவிர தமிழகத்தில் ஏதிலிகளாக உள்ள ஈழத்தமிழர்களுக்கான தீர்வு குறித்து ‘ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு’ என்ற தலைப்பில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.
“வந்தவரை எல்லாம் வசதியாக வாழவைத்த தமிழினம், தன் சொந்த உறவுகளை அகதியாக வாழ வைத்திருப்பது பெருத்த அவமானம். இந்தத் துயரம் துடைத்தெறியப்படும்.” என்ற முன்னுரையுடன் ஆரம்பிக்கும் பகுதியில்…
ஈழ உறவுகளின் அவலம்!
• தமிழகத்தில் 34524 குடும்பங்களைச் சேர்ந்த 1,02,055 ஈழ உறவுகள், அகதிகளாக(ஏதிலிகளாக) இருக்கிறார்கள். அவர்களில் 19625 குடும்பங்களைச் சேர்ந்த 64924 பேர் 107 முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். 1987 முதல் 1989 வரை 25600 அகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். 1992 இல் இருந்து 1995 வரை ஏறக்குறைய 54,000 பேர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.
• இந்த 54,000 அகதிகள் அனைவரும் வவுனியாவின் சிதம்பரபுரம் முகாமில் பல வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள். அங்கும் பல கொடுமைகள் நீடித்திருந்தது. அதனால் பல அகதிகள் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பிவிட்டார்கள்.
•இவர்கள் அடையாளமற்று, போக்குவரவு முடக்கப்பட்டு, சுதந்திரமற்ற முகாம் கண்காணிப்பில் அவதிப்பட்டபோதும் 3500 பட்டதாரிகளையும் முதுநிலை பட்டதாரிகளையும் உருவாக்கிக் காட்டினார்கள்.
• சொந்த மண்ணில் இன்றும் நிலவிவரும் உயர்பாதுகாப்பு வளையங்கள், ஆயுதம் தாங்கிய இராணுவப் படையின் அதிகார இருப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டாத சூழல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், மீள் குடியமர்வைக் கேள்விக் குறியாக்கியுள்ளன.
தொடரும் துயரங்கள்!
• தமிழகத்தின் அகதிகள் முகாமில் அவர்களுடைய துயரங்கள் சொல்லித் தீராதவை. போதிய தங்குமிடம் சுகாதார வசதிகள் இல்லாத கொட்டில்களில் பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் நிலையில் இருக்கிறார்கள். ‘கியூ’ பிரிவுக் காவலர்களும், வருவாய் அதிகாரிகளும், ‘சொல்லமுடியாத’ பல்வேறு காரணங்களுக்காக முகாம் அகதிகளைத் துன்புறுத்தி வருகிறார்கள். குடும்பத்தாரையே பிரித்து சிறப்பு முகாமில் போட்டுவிடுவோம் என்ரு பணம் கேட்டு மிரட்டுவது பாலியல் தொந்தரவுகளைக் கொடுப்பது எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.
திபெத், வங்க அகதிகளுக்கு இராஜபாட்டை விரிக்கும் இந்தியா ஈழ அகதிகளை இரக்கமற்று நடத்துகிறது!
• அகதிகள் சார்ந்த நடவடிக்கையில் ஒரு தேசம் இரண்டு விதமாய் நடந்து கொண்டு வருவது உலகத்தில் இந்தியாவில் மட்டுமேதான். கருணைக்கும் அகிம்சைக்கும் பெயர் பெற்ற இந்தியா எமது ஈழ அகதிகள் நிலைப்பாட்டில் மட்டும் இரக்கமற்று நடந்துகொள்கிறது.
• அஸாம், மேகாலயா, மிசோரம் மாநில உறவுகள் வருத்தப்படக் கூடாது என்று வங்கதேச அகதிகளை இராஜமரியாதையுடன் நடத்துகிறது. காரணம் அந்த அகதிகள் இங்கே இருக்கும் மூன்று மாநிலத்திற்கும் உறவுக்காரர்கள் என்பதால்.
• அருணாச்சலப் பிரதேசத்து மக்கள் வருத்தப்படக்கூடாது என்று திபெத்திலிருந்து வந்த அகதிகளுக்கு இங்கே இராஜபாட்டை விரிக்கிறார்கள். காரணம் திபெத் அகதிகளுக்கு அருணாச்சல பிரதேச மக்கள் உறவுக்காரர்கள் என்ற காரணம்தான்.
• ஈழ அகதிகளின் இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் தமிழக ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அதிகாரத்தைச் சுவைத்திருந்த திராவிடக் கட்சிகளின் துரோகம்தான். தங்களின் ஊழல் முறைகேடுகளில் இருந்து தப்பிக்கொள்ள மத்திய அரசின் கண்ணசைவுக்கு ஏற்றார்போல் சட்டங்களைக் கொண்டு வந்து ஈழ உறவுகளைப் பழிதீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அகதிகளாக வந்தவர்களை தீவிரவாதிகள் போல் நடத்துகிறார்கள்!
• சொந்த மண்ணில் போர்க்கொடுமைகளில், தொடர்ந்து அச்சுறுத்தலாய் இருக்கும் இராணுவக் கொடுமைகளில் இருந்து தப்பி, அடைக்கலம் கேட்டு வந்தவர்களைத் தீவிரவாதிகளைப் போல் அடைத்து வைத்துள்ளது. அவர்கள் சுதந்திரமாக எங்கும் வேலைக்குச் செல்ல முடியாது. மாலை ஆறுமணிக்குள் முகாமிற்குள் திரும்பிவிட வேண்டும். அடைக்கலம் கேட்டுவந்த மண்ணிலும் கொடுமை என்றால் எங்குபோய் முறையிடுவது.
• ஆனால் ஈழத்தில் இருந்து வரும் தமிழ் அகதிகளை மட்டும், மூன்றம் தரக்குடி மக்களாக அல்ல, ஐந்தாம்தரக் குடிமக்களாக நடத்துகிறது இந்தியா. காரணம் இங்கிருக்கும் எட்டுக்கோடி தமிழர்களையும் மூன்றாம்தரக் குடிகளாகப் பார்க்கிறது.
• திபெத் அகதிகளையும் வங்கதேச அகதிகளையும் வசதியான காலனிகளுக்குள் வைத்து, அனைத்து உதவிகளையும் செய்துகொடுத்துச் சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கும் இந்திய அரசு, ஈழ அகதிகளை முகாம்களுக்குள், ‘கொத்தடிமைகளைப்’ போல் நடத்திக்கொண்டிருக்கிறது.
ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்!
• நாம் தமிழர் அரசு அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையை மத்திய அரசிடம் பேசிப்பெற்றுத்தரும். ஈழ உறவுகள் விரும்பும் வரை இங்கே இருக்கலாம். தேவை எந்தக் சொந்த நாட்டிற்குச் செல்லலாம்.
• இதுவரை காலமும் அவர்களுக்குத் திணிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நீக்கப்படும். அகதிகளுக்கு உலக நாடுகள் என்ன நிதி உதவிகளை வழங்குகிறதோ அதையே மாநில அரசும் வழங்கும். திபெத், வங்கதேச அகதிகளைப் போல் விரும்பிய வேலைகளுக்குச் சென்று வரலாம்.
• தமிழக மலைப்பிரதேசச் சுற்றுலாத்தலங்களில், திபெத் அகதிகளுக்கும், வங்கதேச அகதிகளுக்கும் கடைகள் ஒதுக்கப்பட்டிருப்பதைப் போல ஈழ உறவுகளுக்கும் கடைகள் ஒதுக்கித் தரப்படும்.
• அமெரிக்கா. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும் உலகளாவிய அகதிகளுக்குக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்தைப் போட வேண்டும் என்று நாம் தமிழர் அரசு தொடர்ந்து அழுத்தங்கள் கொடுத்துச் செய்து முடிக்கும்.
• தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம், சிறப்பு முகாம்கள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படும். அங்கிருந்து தமிழகம் வரும் ஈழ உறவுகள், முறைப்படி பதிவுகளுக்குப் பிறகு அரசுக் குடியிருப்புகளில் தங்க வைக்கப்படுவார்கள். பிறகு அவர்கள் விரும்பிய இடங்களில் சென்று தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.
ஈழ அகதிகள் மீதான காவல்துறை கெடுபிடிகள் நீக்கப்படும்!
• முகாம் தமிழர்கள் மீது, ‘குற்றத் தடுப்புப் பிரிவு’ (கியூ பிரிவு) காவலர்களின் கண்காணிப்பு, விசாரணை முறைகளும், வருவாய்துறை அதிகாரிகளின் விசாரணை முறைகளும் நீக்கப்படும்.
• கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்திலும் தமிழர்களைப் போல் சம உரிமையுடன் வாழ அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
ஈழ உறவுகளுக்கான நல வாரியம் உருவாக்கப்படும். ஈழத் தமிழர்கள் இங்கே சிறுதொழில் செய்ய, வீடு கட்டிக்கொள்ள, திருமண உதவி பெற என்று பல்வேறு திட்டங்களுக்குத் தனியாக நிதியம் அமைக்கப்பட்டு அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
இதுதவிர கால்நூற்றாண்டு காலமாக சட்டத்தின் பெயரால் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கு
கால்நூற்றாண்டு காலக் கண்ணீர்ரும் கவலையும் துடைக்கப்படும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் ஏழுதமிழர்களையும் நாம் தமிழர் அரசு விடுதலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
‘மாற்றம் என்பது சொல் அல்ல செயல்’ என்ற முழக்கத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு 49 தலைப்புகளில் மாற்றத்திற்கான வழிமுறைகள் 290 பக்கங்களில் விரிவாக குறிப்பிடப்படுள்ளது. ஈழத்தமிழ் உறவுகளுக்கான தீர்வு, ஈழம் எங்கள் இனத்தின் தேசம் என்ற இரு தலைப்புகளில் ஈழத்தமிழர் விடயம் முக்கிய இடம்பெற்றுள்ளது.
இந்த அறிக்கையை கூட சீமான் அவர்களை அரசியல் அச்சுறுத்தலாக கருதுபவர்கள் விமர்சிக்கக்கூடும். இவற்றை வெற்று அறிக்கையாகவும், வாக்குறுதிகளாகவும் கூறுபவர்களால்கூட இவ்விடயங்களை தமது தேர்தல் அறிக்கையில் இடம்பெறவைக்க முடியவில்லை. காற்றோடு கரைந்து போய்விடும் காணல் நீராக இவ்விமர்சனங்களை காலாவதியாக்கி மே-19 இல் புதிய வரலாறு படைக்கப்படும் என்று நம்புவோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’