தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாணத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமக்கு எதிரான வழக்குகளை, அனுராதபுர மேல் நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மீண்டும் வழக்குகளை வவுனியாவுக்கு மாற்றக் கோரியும், அனுராதபுர சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
மூன்று வாரங்களாக போராட்டம் நடத்தி வரும் இந்த அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருகின்ற நிலையில், இதுகுறித்து அரசாங்கம் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.
இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், வடக்கில் இன்று முழு அளவிலான அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளை உள்ளடக்கிய 19 தரப்பினரால், இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு, வடக்கில் உள்ள 40இற்கும் மேற்பட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கின் இயல்புநிலை முற்றாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று காலை 9.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுனர் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றும் இன்று நடத்தப்படவுள்ளது.