Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் அவசர வேண்டுகோள்

வல்வெட்டித்துறை வைத்தியசாலையின் அவசர வேண்டுகோள்

வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் உடனடித்தேவைகள்

2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா உட்பட வெளிநாடுகளில் குடியேறியிருந்த எமது மக்கள் தத்தமது இடங்களுக்கு குடியமரத் தொடங்கினர். இது போன்ற இன்னோரன்ன காரணங்களால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு உயரும் நிலை ஏற்பட்டது. இதற்கு எமது பிரதேச வைத்தியசாலையும் விதிவிலக்கல்ல. இது போன்றே யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய வைத்தியசாலைகளினதும் நிலையாகும். இதன் காரணத்தினால் எமது பிரதேச மக்களினது தேவைகளை வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையே பூர்த்தி செய்ய வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. 96 கட்டில்களை கொண்ட எமது பிரதேச வைத்தியசாலைக்கும் இதனைவிடக் குறைந்தளவான கட்டில்களின் தொகையினைக் கொண்ட பிரதேச வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்பு, வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றில் பெரிதளவிலான வேறுபாடுகள் இல்லாமையை காணக்கூடியதாக இருக்கின்றது. எமது பிரதேச வைத்தியசாலை ஆதார வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்படும் பட்சத்தில் வளங்கள், விநியோகங்கள் போன்றவற்றை எமது முயற்சிகளின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவரை எமது பிரதேச மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இப் பகுதி மக்களும் , நோயாளர் நலன்புரிச் சங்கத்தினராகிய நாமும் முன்வர வேண்டிய கடப்பாடுடையவர்களாக உள்ளோம். கீழே குறிப்பிட்டுள்ள தேவைகளை விரைவில் வழங்குவோமானால் எமது பிரதேச மக்கள் தமக்குரிய தேவைகளைச் சிரமமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.

01. ஸ்கானிங் வசதி:- கர்ப்பிணித் தாய்மார்களும் இதர நோயாளர்களும் ஸ்கானிங் செய்து கொள்வதற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்றுவரும் சிரமங்களை அவதானித்து இதற்கான ஸ்கான் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு சங்கம் நடவடிக்கையை மேற்கொண்டு அதனை வழங்கியது. இந்த இயந்திரம் தொடர்ந்து சேவையாற்றுவதில் அடிக்கடி தடங்கல் ஏற்பட்டமையினால் சுகாதாரத்திணைக்களம் புதிய இயந்திர மொன்றை வழங்கியமையை அடுத்து வைத்தியசாலை தொடர்ந்தும் அச்சேவையினை தடங்கலின்றி ஆற்றிவருகின்றது. இருந்தபோதும் இச் சேவையினை மேற்கொள்வதற்கு விசேட வைத்திய நிபுணர் ஒருவரைத் திணைக்களம் அனுப்பிவைக்க முன்வராத காரணத்தினால்; விசேட வைத்திய நிபுணரை இரண்டு கிழமைகளுக்கு ஒரு தடவை வரவழைத்து எமது தேவையை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளோம். இதற்காக அந்த விசேட வைத்திய நிபுணருக்கு ஒரு தடவை வருகை தருவதற்காக ரூபா7000/= வரை செலுத்தி வரும் நாம் ஒரு வருட கொடுப்பனவிற்கு ரூபா175இ000/= வரை பரோபகபரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

02. தைரோயிட் பிரச்சினை உள்ள நோயாளிகள் (Hypothyrodism) வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் 50பேர் வரையான தைரோயிட் பிரச்சனையுள்ள நோயாளிகள் சிகிச்சையினை தொடர்ந்து பெற்றுக் கொண்டு வருகின்றார்கள். இவர்களுக்கான இரத்தப்பரிசோதனையொன்றினை மேற்கொள்வதன் மூலம் இவர்களின் நோய்த்தாக்கம் அதி;கரித்துச்செல்கின்றதா அல்லது குறைவடைகின்றதா என்பதை அவதானித்து இவர்களுக்குச் சிபார்சு செய்யும் மருந்தின் அளவினைக் கூட்டியோ அல்லது குறைத்தோ வழங்கலாம். இதற்கான இரத்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு எமது வைத்தியசாலைக்குத் தேவையான தொழில்நுட்பவியலாளரும், அதற்கான இரசாயன மருந்து வகைகளும் இல்லாதுள்ளது. யாழ் மாவட்டத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையிலும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் மட்டுமே இதற்கான இரத்தப் பரிசோதனையினைச் செய்து கொள்ள முடியும். இவ் வைத்தியசாலைகளிலும் வளங்கள் பற்றாக்குறையாக உள்ளமையினால் எமது நோயாளர்களை அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது. இதன் காரணத்தினால் தனியார் வைத்தியசாலைகளுக்கும், தனியார் ஆய்வு கூடங்களுக்குமே எமது நோயாளர்களை அனுப்பிவைத்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். ஒரு நோயாளியை ஒருதடவையாவது அனுப்பி வைப்பதாயிருந்தால் கூட வருடமொன்றுக்கு ரூபா1300/= ஒரு நோயாளிக்கு செலவு செய்ய வேண்டுமாயின் 50நோயாளிகளுக்கும் ரூபா65000/= வரை தேவையேற்படும்.

03. குடிதண்ணீர் விநியோகம் :- கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வைத்தியசாலைத் தேவைகளுக்கான குடிதண்ணீர் வழங்கப்பட்டமையால் இதற்கேற்றவாறு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்காலம் தேவையான அளவு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றமையாலும், தேவைகள் அதிகரித்தமையாலும் அதற்கேற்றவாறு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது.இதன் பிரகாரம் நோயாளர்களுக்குப் புறம்பாகவும், சமையலறைக்கு புறம்பாகவும், ஊழியர்களுக்கு புறம்பாகவும் இரண்டு தண்ணீர் தாங்கிகளை அமைத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.தாங்கிகள் இரண்டுக்கும் அவற்றிற்கான பைப் லைனை அமைப்பதற்குமென ரூபா100,000/= மதிப்பிடப்பட்டுள்ளது.

04. கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தல் :- அம்புலன்ஸ் வாகனம் தரிப்பிடத்திற்குச் செல்லும் பாதை திறந்த பாதையாக இருப்பதனால் கட்டாக்காலி ஆடு மாடுகளும் எந்நேரத்திலும் நோயாளர்களை பார்வையிடுவதற்கு வருபவர்கள் இந்த பாதையை பாவிப்பதனாலும் இதனை கட்டுப்படுத்துவதற்காகப் பாதையின் தொடக்கத்தில் கேற் ஒன்றை அமைக்க வேண்டியுள்ளது. இந்த வேலையை மேற்கொள்வதற்காக ரூபா50,000/= மதிப்பிடப்பட்டுள்ளது.

05. இதர தேவைகள் :- திணைக்களத்தினால் வழங்கப்படும் அஸ்பிறின், கிளிகிளசைட் (Glyclazide),  அம்ளோடிப்பின் (Amlodipine)  போன்ற மருந்து வகைகளுக்கும் சிலசமயங்களில் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. கிளினிக்கிற்கு வரும் நோயாளர்கள் இவற்றைத் தொடர்ந்து எடுப்பதற்கு ஏற்றவாறு அவற்றையும் நாம் வழங்க ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மேலே குறிப்பிட்ட தேவைகளுக்கும்; இதர அத்தியாவாசிய தேவைகளுக்கும் பரோபகாரிகளிடம் உதவியை எதிர் பார்க்கும் அதேவேளை இத் தேவைகளுக்கு திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ள எம்மாலான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆதலினால், கொடையுள்ளம் கொண்டோரிடமிருந்து இச் சேவைக்கு தங்களால் முடிந்த நிதி உதவியினை அன்புடன் வேண்டி நிற்கின்றோம். ஊரில் நேரடியாக நிதி திரட்டுவதற்கான அனுமதியை எமது நலன்புரிச் சங்கத்தின் உபசெயலாளர் திரு.து.சக்திவேல் அவர்களுக்கு வழங்கியுள்ளோம் என்பதையும் அன்புடன் அறியத் தருகின்றோம்.

வல்வெட்டித்துறை இலங்கை வங்கியில் எமது கணக்கு இலக்கம் – 75910691

…………………                                          ……………..                                           ……………….
தலைவர்                                          செயலாளர்                                      பொருளாளர்
Dr.M.சுரேந்திரன்            திரு.சி.சிவபாலசிங்கம்                திரு.பா.மீனாட்சிசுந்தரம்
(0779604195)                                     (0213219094)                                        (0774704048)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *