அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் முதலாவது, கடற்படைப் பயிற்சி வரும் ஒக்ரோபர் மாதம் திருகோணமலையில் இடம்பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சிறிலங்கா- அமெரிக்க கடற்படைகளுக்கிடையிலான உறவுகளை விரிவாக்கிக் கொள்ளும் வகையில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறும் என்று தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“கடற்படை ஒத்துழைப்புகளை விரிவாக்குவது, அமெரிக்காவின் இன்னொரு முன்னுரிமையாகும்.
முதலாவது அமெரிக்க- சிறிலங்கா கடற்படை பயிற்சி, ‘கப்பலில் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு-2017′ (‘Cooperation Afloat Readiness and Training’ aka ‘CARAT 2017’) என்று அழைக்கப்படும்.
இதில் அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பல்படை பங்கேற்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தக் கடற்படைப் பயிற்சி தொடர்பாக, சிறிலங்கா கடற்படைத் தலைமையக பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத் திசநாயக்க தகவல் வெளியிடுகையில்,
‘ஒக்ரோபர் 2ஆம் நாள் தொடங்கி, ஐந்து நாட்கள் இந்த பயிற்சி இடம்பெறும். இதில் பங்கேற்பதற்காக, அமெரிக்க கடற்படையின் கரையோரப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கொரொனாடோ சிறிலங்கா வரவுள்ளது.
கடலின் மேற்பரப்பு, கடலடி, வான் மற்றும் காட்டுப் போர்முறைகள் தொடர்பான பயிற்சியாக இது திட்டமிடப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.