சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று மாலை ஆரம்பமாகிய இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், நேற்றுமாலை தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர், நேற்று இரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா பிரதமருக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில், அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க ஆகியோரும், இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர், இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.