சிறிலங்காவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவரை படைத்தளபதிகளில் ஒருவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா கடற்படையின் 21 ஆவது தளபதியாக, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நேற்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்டார். இவர் ஒரு தமிழரராவார்.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்காவின் தனிநாடு கோரிய தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் உருவான பின்னர், தமிழர்கள் எவரும், முப்படைகளின் தளபதியாக சிறிலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்படவில்லை.
சிறிலங்கா ஆயுதப்படைகளில் சிங்களவர்களே பெரும்பாலும் அங்கம் வகித்திருந்த போதிலும், உயர் அதிகாரிகளாக இருந்த தமிழர்கள் சிலர், முப்படைகளுக்கும் தலைமை தாங்கும் தளபதியாக நியமிக்கப்படக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருந்தாலும், அந்த வாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், 1970 களுக்குப் பின்னர் முதல் முறையாக தமிழரான றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
இவர் சிறிலங்கா கடற்படையின் தளபதியாக பொறுப்பேற்கும் இரண்டாவது தமிழர் ஆவார்.
இதற்கு முன்னர், அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பதவி வகித்திருந்தார்.1960 நொவம்பர் 16ஆம் நாள் தொடக்கம், 1970 ஜூலை 30ஆம் நாள் வரை, சுமார் 10 ஆண்டுகள் அவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக பதவியில் இருந்தார்.
சிறிலங்கா கடற்படையின் தளபதியாக நீண்டகாலம் பதவியில் இருந்தவர் இவரேயாவார்.
அதேவேளை, சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது தளபதியாக, மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு, 1955 பிப்ரவரி 09 தொடக்கம், 1959 டிசம்பர் 31 வரை பணியாற்றியிருந்தார்.
போர் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகளுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக, தமிழரான, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான செய்திக்கு, அனைத்துலக ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளன.
றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, முன்னைய ஆட்சிக்காலத்தில் கோத்தாபய ராஜபக்சவினால், அமெரிக்காவின் முகவர் என்று குற்றம்சாட்டப்பட்டவராவார்.
அரசியல் பழிவாங்கல் அச்சுறுத்தலால் சிறிலங்காவில் இருந்து வெளியேறி, அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருந்தார். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரே அவர் நாடு திரும்பினார் என்பதுது குறிப்பிடத்தக்கது.