சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தற்போது வாழ்கின்றனர். தாம் தற்போது வாழும் அகதி முகாமானது ஒருபோதும் தமக்கான சொந்த வீடாகாது என்பதை இவர்கள் நன்கறிந்துள்ளனர் .
எனினும் தமது சொந்த இடத்திற்குத் திரும்பிச் சென்று தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது என்பது இவர்களுக்கு பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இவர்களைப் பொறுத்தளவில் தாம் வாழும் அகதி முகாம் மட்டுமே தற்போது இவர்களுக்கான வீடாக உள்ளது.
சிறிலங்காவில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து எட்டாவது ஆண்டு நிறைவு விழா கடந்த மே 18ம் திகதி அன்று நினைவுகூரப்பட்டது.
தான் ஒரு பேராசிரியராக வரவேண்டும் என்ற கனவுடன் தனது 20வது வயதில் சிறிலங்காவை விட்டு வெளியேறி தமிழ்நாட்டின் அகதிமுகாமில் தஞ்சம் புகுந்தவரான எஸ்.மூர்த்திக்கு தற்போது 54 வயது. இவர் நான்கு மகன்களின் தந்தையார். ஆனால் பேராசிரியராக வரவேண்டும் என்கின்ற இவரது கனவு உள்நாட்டு யுத்தத்தால் சிதைவுற்றது.
இவர் தற்போது சென்னையிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் சிறிய பலசரக்குக் கடை ஒன்றை நடத்துகிறார். சிறிலங்காவின் வடக்கிலுள்ள திருகோணமலையிலுள்ள தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான நாளை எதிர்பார்த்து நாதன் காத்திருக்கிறார்.
‘கடவுச்சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன். இந்த முகாமில் 25 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து விட்டேன். சிறிய கடையையும் நடாத்தி வருகிறேன். இந்நிலையில் எனது சொந்த இடத்திற்குத் திரும்பிச் செல்லும் போது அங்கு அனைத்தையும் இலகுவாகப் பெற்றுவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அங்கு சிறந்த வாழ்வொன்றை நான் வாழ்வதற்கு பல இடர்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்’ என தொட்டிலில் படுத்திருந்த தனது ஒரு வயதுப் பேரனை நித்திரையாக்கியவாறு நாதன் தெரிவித்தார்.
‘திருகோணமலையிலுள்ள எனது கிராமத்தில் 1980களில் 55 குடும்பங்களுக்கும் மேலிருந்தன. தற்போது அங்கு மூன்று குடும்பங்கள் மட்டுமே உள்ளன. இந்தக் கடையை நான் அங்கு நடத்தினால் என்னால் போதியளவு வருமானத்தைச் சம்பாதிக்க முடியாது’ என அவர் தெரிவித்தார்.
அந்த முகாமில் வசிக்கும் 60 வயதான பெண்மணியான ஜி.லக்ஸ்மி தனது சொந்த ஊரான மன்னாருக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். ‘எனது மூத்த மகள் கடந்த ஆண்டு ஊருக்குச் சென்றிருந்தார். ஆனால் அவரால் அங்கிருக்க முடியாததால் மீண்டும் இரண்டு மாதத்தில் இங்கு வந்துவிட்டார். எனது இளைய மகள் இந்த மாதம் தனது கணவரின் இடத்திற்குச் செல்லவுள்ளார்’ என லக்ஸ்மி தெரிவித்தார்.
‘இங்கிருக்கும் தற்போதைய தலைமுறையினர் சிறிலங்காவிலிருந்து வெளியேறிய போது சிறுவர்களாகவே இருந்தனர். அல்லது சிலர் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாகவும் உள்ளனர். உண்மையில் அவர்களின் சொந்த நாடாக இந்தியாவே உள்ள போதிலும் அவர்களும் அகதிகள் என்றே அழைக்கப்படுகின்றனர்’ என போரின் இறுதிக்கட்டத்தில் நாட்டிலிருந்து வெளியேறி தமிழ்நாட்டு அகதி முகாமில் அடைக்கலம் புகுந்த 35 வயதான ஆண் ஒருவர் தெரிவித்தார்.
‘நான் ஒருபோதும் சிறிலங்காவில் இருந்ததில்லை. நானும் எனது சகோதரியும் தமிழ்நாட்டு அகதிமுகாமிலேயே பிறந்து வளர்ந்தோம். இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததால் அங்கு திரும்பிச் செல்லவேண்டும் என எமது பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் கல்லூரிக் கல்வியை இங்கு நிறைவுசெய்ய வேண்டும். தொழில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு முகாமிற்கு வெளியே சென்று வசிக்க விரும்புகிறேன்’ என 19 வயதான மாணவி பி.ஜென்சி தெரிவித்தார்.
தற்போது தமிழ்நாட்டு அரசாங்கத்தால் நடத்தப்படும் 107 அகதி முகாம்களில் 64,208 ஈழத்தமிழர்களும், முகாங்களுக்கு வெளியே குறைந்தது 40,000 வரையான ஈழத்தமிழர்களும் வாழ்வதாக ஈழத்தமிழ் அகதிகளுக்கான புனர்வாழ்வு நிறுவனத்தில் தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் புள்ளிவிபரத்தின் படி, அகதி முகாங்களில் வாழும் ஈழத்தமிழர்களில் 40 சதவீதத்தினர் தமது சொந்த நாடான இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புகின்றனர்.
எனினும், தமிழ்நாட்டில் இவர்கள் நீண்டகாலம் தங்கியிருந்தவர்கள் என்ற வகையில் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்லும் போது அங்கு இவர்கள் தமக்கான உடைமைகள், அடிப்படைச் சேவைகள், தமக்கான அடையாளம், தொழில்வாய்ப்பு போன்றவற்றை மீளவும் பெற்றுக்கொள்ள முடியுமா என கேள்வியெழுப்புகின்றனர்.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் என்பது மக்களின் மனங்களில் மாறாத நினைவுகளாக உள்ளன. மே 18 ஐ உலகில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ‘துக்கநாளாகக்’ கொண்டாட வேண்டும் என அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.
இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் உள்ள புனித போல் தேவாலயத்திற்கு அருகில் எந்தவொரு நினைவு வணக்க நிகழ்வுகளும் நடத்தப்படக் கூடாது என 14 நாள் தடையுத்தரவை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அறிவித்திருந்தார். இவ்வாறான நிகழ்வுகள் ‘நாட்டின் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்’ என்ற அடிப்படையிலேயே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போது 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டது.
போரின் போது தனது அனைத்து ஆவணங்களையும் தொலைத்தமையாலும் நிதி நெருக்கடி உள்ளதாலும் தன்னால் தனது சொந்த இடத்தில் வாழ்வதில் இடரை எதிர்நோக்குவதாக தமிழ்நாட்டு அகதி முகாமிலிருந்து அண்மையில் வன்னியிலுள்ள தனது சொந்த வீட்டிற்குத் திரும்பிச் சென்ற 42 வயதான தமிழர் ஒருவர் தெரிவித்தார். இவர் தனது சொந்த இடத்தில் வாழ்வதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால் மீண்டும் கும்மிடிப்பூண்டி அகதி முகாமிற்குத் திரும்பிச் சென்றுள்ளார். ‘நாங்கள் ஒரு தடவை அகதி ஆகியதால் எப்போதும் அகதிகளாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்’ என இவர் தெரிவித்தார்.
‘நாங்கள் யுத்தத்தால் இடம்பெயர்ந்ததன் பின்னர் எமது அடையாளங்களை இழந்தோம். நாங்கள் இதனை எவ்வளவு தூரம் தேடிய போதிலும் இதனை எம்மால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதனை நாங்கள் இங்கோ அல்லது சிறிலங்காவிலோ திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது’ என பெயர் வெளியிட விரும்பாத ஈழத்தமிழர் தெரிவித்தார்.