திமுக என்ற கட்சி தமிழர் வரலாறு உள்ளவரை தமிழினத் துரோகத்தின் அடையாளமாகவே நிலைத்து நிற்கும். அதற்கான காரண காரியங்களை திமுக தலைவர் கருணாநிதியும் தற்போதைய செயல் தலைவர் ஸ்டாலினுமே ஆற்றியுள்ளார்கள்.
இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியில் சின்னஞ் சிறு ஊராக இருக்கும் முள்ளிவாய்க்கால் உலக அரங்கில் பேசுபொருளாக்கப்பட்டதன் பின்னணியில் மாபெரும் தமிழ் இன அழிப்பு அரங்கேற்றப்பட்டது.
பயங்கரவாதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் நேரடி குற்றவாளிகளாக சிங்கள பௌத்த பேரினவாத அரசும் அதன் இனவழிப்பு இராணுவமும் அடையாளப்படுத்தப்பட்டாலும் முள்ளிவாய்க்காலில் கொன்று புதைக்கப்பட்ட தமிழர்களின் இரத்தக்கறை இன்னும் பலரின் கைகளில் படிந்துள்ளது என்பதே உண்மையாகும்.
பதவி-குடும்பத்திற்காக இனம் அழிவதை வேடிக்கை பார்த்த கருணாநிதி!
கருணாநிதியின் குடும்ப நலனுக்காகவே நடைபெறவிருந்த மாபெரும் இனவழிப்பு கொடூரம் தெரிந்தே அனுமதிக்கப்பட்டது. அன்றைய நிலையில் இந்திய மத்திய அரசை ஆட்சி செய்துகொண்டிருந்த சோனியா தலைமையிலான காங்கிரசு அரசு திமுகவின் தயவில்தான் இயங்கியதென்பதும் கருணாநிதி குடும்பத்தையும் திமுக கட்சியையும் நிர்மூலமாக்கும் ஊழல் விவகாரம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதன் பின்னணியில் கருணாநிதியின் எதிர்வினைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமையு
திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவி விலகுவதாலோ தன் தலைமையிலான திமுக அரசு ஆட்சியை துறப்பதாலோ போர் நிறுத்தப்படும் என்ற உத்தரவாதம் இருப்பின் உடனடியாக பதவி விலகத் தயாராக இருப்பதாக வார்த்தையளவில் ஏமாற்றிய கருணாநிதியின் துரோகத்தின் உச்சமாக அண்ணா சதுக்கத்தில் நடத்திய உண்ணாவிரத நாடகம் அமைந்திருந்தது.
உண்ணாவிரத நாடகத்தை முடித்து போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக கருணாநிதி கூறிய வார்த்தைகளை நம்பி பதுங்குகுழிகளை விட்டு வெளியே வந்த தமிழர்கள் கொத்துக் கொத்தாக குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டுமொத்த உலகத் தமிழர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, மழை விட்டாலும் தூவானம் பெய்யத்தானே செய்யும் என்று கூறிய மாபாதகன் கருணாநிதியையும் அன்றைய துணை முதல்வராக இருந்து ஆட்சியை கொண்டு நடத்திய ஸ்டாலினையும் எவ்வாறு மன்னிக்க முடியும்…?
கருணாநிதியின் தமிழினத் துரோகத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த பரிசு படுதோல்வி!
தமிழினப்படுகொலைக்கு துணையாய் இருந்து கருணாநிதி செய்த தமிழினத் துரோகம் மற்றும் உலக மகா ஊழல் போன்றவற்றிற்கு தண்டிக்கும் விதமாக தமிழக மக்கள் 2011 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை பரிசளித்திருந்தார்கள். 2016 இலும் அது தொடர்ந்தது. கருணாநிதியை பழிவாங்கும் ஒரே காரணத்திற்காக போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள் என்று குதர்க்கம் பேசிய ஜெயலலிதா அவர்களை முதல்வராக்கினர் தமிழக மக்கள்.
தமிழக மக்களின் கூட்டு மன உணர்வை புரிந்துகொண்டு தனது கடந்த கால செயற்பாட்டின் அடிப்படையிலமைந்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் இறுதிவரை துணையிருந்தார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்.
• சுதந்திர தமிழீழம் குறித்து ஈழத் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
• ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை.
• அது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
• அதுவரை இனப்படுகொலை குற்றவாளியான சிறிலங்காவை எதிரி நாடாக கருதி பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறான தீர்மானங்களை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தானே முன்மொழிந்து உலகளாவில் நாம் முன்னெடுத்துவரும் நீதிக்கான போராட்டத்திற்கு வலிமை சேர்த்திருந்தார் ஜெயலலிதா அவர்கள். ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் வரை சிங்கள இராணுவத்தினர்களை ஏன் சிங்கள விளையாட்டு வீரர்களையே தமிழ்நாட்டிற்குள் பயிற்சிக்காக அனுமதித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டையை குழப்பி ஆட்சியைப் பிடிக்கும் ஸ்டாலினின் சதியின் நீட்சியே ஈழத்தமிழர் ஆதரவு நாடகம்!
முற்றுமுழுதான ஈழ ஆதரவு செயற்பாடில்லாவிடிலும் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென்பதில் இறுதிவரை உறுதியுடன் இருந்திருந்தார் ஜெயலலிதா அவர்கள். அவரது மரணத்தின் பின்னரான தமிழக அரசின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக காணப்படுகிறது.
இந்தப்பின்னணியில் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை சாதகமாக்கி எப்பாடுபட்டேனும் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு சித்துவேலைகளை அரங்கேற்றிவருகின்றார். எதிர்பார்த்த பலாபலனை அவை ஏற்படுத்தாததால் ஈழத்தமிழர் ஆதரவுத் தளத்தை தனக்கு சாதகமாக்க அதிதீவிரமாக முயற்சி செய்துவருகிறார்.
2009 மே-18 இன் பின்னர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 24 அமர்வுகள் நடந்தேறிய நிலையில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டி உலகத் தமிழர்கள் ஓய்வின்றி போராடிவருகையில் கண்டுகொள்ளாது இருந்த ஸ்டாலின், இப்போது நாடுகடந்த தமிழீழ அரசின் ஆண்டு விழாவில் பங்கேற்பதும், ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்துகொள்வதும் அரசியல் ஆதாயத்திற்கே.
இது குறித்து திமுக சார்பில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் இந்த ஆண்டுக்கான ஐ.நா. அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டில் ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திமுகவும், டெசோ அமைப்பும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் ஐ.நா.வில் பதிவாகி அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக திமுக எடுத்து வரும் நிலைப்பாடு உலக அரங்கில் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ள 35வது மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் ஈழ மக்களின் பிரச்சினைகள், விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளாவிய தமிழர்களிடம் எழுந்துள்ளது. அதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
எனவே ஜூன் 12ம் தேதி ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து உலக அரங்கில் ஸ்டாலின் தன் கருத்துகளை முன்வைக்க உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மோசடியாகும்.
அனைத்துலக நாடுகளின் ஆட்சிமன்றங்களின் முன்பாகவும் செனீவா மனித உரிமைகள் பேரவை முன்றலிலும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள் ஓயாது போராடிவரும் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசவே தகுதியில்லாத திமுக மற்றும் டெசோ முன்னெடுப்பை முன்னிறுத்திய இந்த அயோக்கியத்தனத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
திமுக வைச் சேர்ந்த ராதாகிருஸ்ணன் என்பவரின் முயற்சியில் சில புலம்பெயர்வாழ் பச்சோந்திகளின் முண்டுகொடுப்பில் இந்த ஸ்டாலினின் உலக வலம் திட்டமிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகளை நன்கறிந்தவர்களுக்கு தெரியும் இந்த ஜூன் மாத அமர்வின் முக்கியத்துவம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையைப் பொறுத்தவரை ஒரு வருடத்தில் மூன்று அமர்வுகள் நடைபெறுவது வழக்கம். மார்ச் மாதத்தில் நடைபெறும் அமர்வே அதி முக்கிய அமர்வாகவும் காத்திரமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் அமர்வாகவும் முக்கியம் பெறுகிறது. அதற்கடுத்த ஜூன் மாத அமர்வும் செப்டெம்பர் மாத அமர்வும் அடுத்த மார்ச் மாத அமர்வு குறித்த இடைநிலை அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் அமர்வுகளே. எளிய முறையில் சொல்வதானால் எமது ஊர்களில் நடைபெறும் தேநீர் அருந்தி வடை சாப்பிட்டுச் செல்வதற்காகவே ஒழுங்குசெய்யப்படும் கூட்டங்களுக்கு ஒப்பானதே இந்த அமர்வுகள்.
கடந்த மார்ச் மாத அமர்வே உலகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அதி முக்கிய அமர்வாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்புடனும் சம்பந்தன்-சுமந்திரன் மற்றும் சில புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் தமிழினத் துரோகத்தாலும் சிங்கள இனவழிப்புக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் சிறிலங்கா அரசிற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட இருந்ததே அதற்கு காரணமாகும்.
உலகத் தமிழர்களின் அத்தனை முன்னெடுப்புகளையும் மீறி இனவழிப்பு அரசிற்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருந்தார்…? இந்திய அரசின் அயோக்கியத்தனத்தை கண்டிப்பதுடன், நடந்த இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கபடுவதுடன் தமிழர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தும் போராட்டங்களை தமிழகமெங்கும் நடத்தியிருக்கலாமே!
சோனியா தலைமையிலான காங்கிரசு அரசின் அடிச்சுவட்டில் தடம் மாறாது பயணித்துவரும் மோடி தலைமையிலான பாரதிய சனதா அரசின் தமிழினத் துரோகத்திற்கு வழியேற்படுத்தும் விதமாக அமைதியாக இருந்துவிட்டு கூடிக்கலையும் ஜூன் மாத அமர்வில் பங்கேற்பது மிகப்பெரும் மோசடியாகும்.
நாடுகடந்த தமிழீழ அரசின் ஆண்டுவிழாவிலும் துண்டுபோட்ட ஸ்டாலின்!
நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமார் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கடந்த 17 ஆம் திகதி கடிதம் எழுதியுள்ளார். ‘மே 19 முதல் 21 ஆம் திகதி வரை அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசின் 7-ஆவது நேரடி அமர்வில் கலந்துகொள்ள வேண்டும்’ என அதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு ஸ்டாலினின் பங்கேற்பு வலுச்சேர்க்கும் எனவும் தெரிவித்துள்ளதாக திமுக செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பகீர்த்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரச தரப்பில் அது குறித்து வினவியபோது திமுகவின் மோசடி நாடகம் அம்பலமாகியது. அது குறித்து தெரிவிக்கப்பட்டதாவது…
நாடுகடந்த தமிழ அரசின் ஆண்டுவிழா நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பது வழக்கம். அவ்வாறே இம்முறையும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளும் இவ்வாறே திமுகவிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இருந்தும் எமது நிகழ்வில் பங்கேற்காதது மட்டுமன்றி இவ்வாறான அழைப்பு கிடைத்ததாகவும் செய்தியெதுவும் வெளியிடாது கள்ளமௌனம் காத்திருந்தார்கள். இம்முறை மட்டும் எமது அழைப்பை திரிபுபடுத்தி இவ்வாறு செய்தி அறிக்கை விடுத்துள்ளமை பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பினர் இவ்வாறு செய்வார்கள் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று நாடுகடந்த தமிழீழ அரசதரப்பில் விளக்கப்பட்டது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் ஆட்சி-அதிகாரத்தை கைப்பற்ற தவியாய் தவித்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின் நாடுகடந்த தமிழீழ அரசின் ஆண்டுவிழா அழைப்பை கெட்டியாக பற்றிக்கொண்டு அமெரிக்க புறப்பட ஆய்தமாகிவிட்டார் என்பதே உண்மையாகும். திமுகவின் நிலையை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
உலகத் தமிழனத்தின் ஒப்பற்ற தலைவன் ஆகிவிட வேண்டும் என்ற கருணாநிதியின் நிறைவேறாத ஆசையின் வழித்தடத்தில் தனயனான ஸ்டாலினும் பயணத்தை ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடுகளே இவையாகும். கடைசிவரை அது நிராசையாகவே இருக்கும் என்பது தந்தையும் தனையனும் வாங்கி வந்த வரமாகும்.
சிங்கள பௌத்த பேரினவாத பேய்களின் இனவழிப்புப் போரில் கொல்லப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்ட 146,769 தமிழர்களை மறந்து எந்தவொரு தமிழனாலும் வாழமுடியாது. அவர்களது இழப்பிற்கான நீதியை பெறுவதே உலகத் தமிழர்களின் கடமையாகும். அதுவரை நாம் ஓய்ந்துவிட முடியாது.
நாள் குறித்து.. நேரம் தீர்மானித்து.. சுதந்திர தமிழீழத்தின் விடிவிற்காய் தம் உயிர் துறந்த மாவீரர்களின் தியாகச் சுவட்டின் அடியொற்றியே எமது நீதிக்கான நெடும்பயணத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து இராசதந்திரம் என்ற பெயரில் அடிபணிவு அரசியல் செய்தோ, இனத்தை அழித்த, அழிக்கத் துணைநின்ற துரோகிகளுக்கு முண்டுகொடுத்தோ செயற்படுவதென்பது எமது மக்களுக்கும் மாவீரர்களுக்கும் செய்யும் மிகப்பெரும் துரோகமாகு.