சிறிலங்காவில் நடந்து முடிந்த முடிந்த குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தத்தின் எட்டாவது ஆண்டு கடந்த வெள்ளியன்று நிறைவடைந்தது. இந்த யுத்தத்தின் போது காணாமற் போன உறவுகளை இவர்களின் குடும்பத்தவர்கள் தேடிக்கொண்டிருக்கும் அதேவேளையில் இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் உள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறும் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுமட்டுமல்லாது, சிறிலங்கா கடற்படையினரால் மீனவர்கள் கடலுக்குச் செல்வது தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இந்தத் தடையை நீக்குமாறு கோரியும் தமிழ் மீனவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். போரின் போது தமது கணவன்மாரை இழந்த பெண்கள் தமது குடும்பங்களைப் பராமரிப்பதிலும் ஊனமுற்றோர் எவ்வித தொழிலுமின்றியும் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மக்கள் நிச்சயமற்ற உணர்வுடன் வாழ்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
போரின் போது இறந்த சிறிலங்கா இராணுவ வீரர்களின் குடும்பத்தவர்கள் கடந்த வெள்ளியன்று கொழும்பிலுள்ள யுத்த நினைவாலயத்தில் தமது வணக்கத்தைச் செலுத்தினர். இந்த நிகழ்விற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் வருகை தந்திருந்தார்.
இறுதி யுத்தம் இடம்பெற்ற முன்னாள் போர் வலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்திற்கு அருகில் தமிழ் மக்கள் நினைவு வணக்கம் செலுத்தினர். இதுமட்டுமல்லாது தமிழ் மக்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கின் பல இடங்களிலும் போரின் போது இறந்தவர்களை நினைவு கூர்ந்து வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாவிட்டாலும் கூட வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள தமிழ் மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பலத்தை அதிகரிக்கவுள்ளதாக வெள்ளியன்று வணக்க நிகழ்வில் கலந்து கொண்ட அதிபர் சிறிசேன தெரிவித்திருந்தார்.
‘தேசிய பாதுகாப்பு மீது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளது. எமது முப்படைகளையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எப்போதும் எடுப்போம். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் எமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்’ என அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
போரை வென்றெடுத்த அதிகாரம் மிக்க அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து 2015 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிசேன மீது மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருந்தனர். ‘மகிந்த ராஜபக்ச மீது மக்கள் கொண்டிருந்த கோபத்தை விட தற்போதைய அரசாங்கத்தின் மீதே மக்கள் அதிக கோபம் கொண்டுள்ளனர். ஏனெனில் ராஜபக்ச தமக்காக எந்தவொரு நல்லதையும் செய்வார் என மக்கள் எதிர்பார்க்கவில்லை’ என வடக்கில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகப் பணியாற்றும் ரி.பரந்தாமன் தெரிவித்தார்.
‘சிங்கள பெரும்பான்மை அரசாங்கம் தமக்காக எதையும் தரப்போவதில்லை என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் அவநம்பிக்கைகள் காணப்படுகின்றன’ என பரந்தாமன் தெரிவித்தார்.
போரின் போது காணாமற்போன பல ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தாம் கண்டறிந்து கூறுவதாக தற்போதைய அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் இவற்றை இன்னமும் நிறைவேற்றவில்லை. போரின் இறுதிநாட்களில் தம்மிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத்தினர் கூறியமையாலேயே தாம் தமது உறவுகளை அவர்களிடம் ஒப்படைத்ததாக காணாமற் போனோரின் உறவினர் கூறுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதிலும், அரசாங்கத்தாலும் புலிகள் அமைப்பாலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களை விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறை இதுவரையிலும் அமைக்கப்படவில்லை.
புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்கின்ற குற்றச்சாட்டின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக எவ்வித குற்றங்களும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எவ்வித குற்றங்களுமின்றி சந்தேகத்தின் பேரில் தடுத்து வைப்பதற்கான அனுமதியை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் தற்போதும் நடைமுறையிலுள்ளது. இந்த நாட்டை தமிழ்ப் புலிகளிடமிருந்து பாதுகாத்த சிறிலங்கா இராணுவத்தினருக்கு தண்டனை வழங்குவதற்கு தான் ஒருபோதும் அனுமதியேன் என அடிக்கடி சிறிசேன தெரிவித்து வருகிறார்.
போரின் போது பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலைகள் மீது கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டமை மற்றும் போர் வலயத்திற்குள் அகப்பட்டுத் தவித்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்து போன்றவற்றை வழங்காது தடுத்து வைத்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன. போரின் இறுதிக்கட்டத்தில் மட்டும் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஐ.நா உறுதிப்படுத்தியது.
இதேபோன்று சிறுவர்களை போரில் ஈடுபடுத்தியமை, மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் புலிகள் அமைப்பிற்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
போரின் போது பல்வேறு மீறல்களில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காது தொடர்ந்தும் இவர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது தேசிய பாதுகாப்பு மிக்க நாடாக சிறிலங்காவை மாற்றுவதற்கான எவ்வித முயற்சியையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என அனைத்துலக நெருக்கடிகள் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தினர் தொடர்ந்தும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளமை மற்றும் போர் மீறல்கள் தொடர்பாக எவ்வித விசாரணையும் முன்னெடுக்கப்படாமை போன்றன பல தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை மேலும் பலப்படுத்துவதற்கும் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்களுடன் குழப்பங்களை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிராந்திய சுயாட்சியை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் காலத்தை இழுத்தடிப்பதானது நாட்டில் அமைதியின்மை ஏற்படவும் மோதல்கள் ஏற்படவும் வழிவகுக்கும் எனவும் அனைத்துலக நெருக்கடிகள் குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.