நல்லோர் ஒருவர் உளரெனில் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யுமாம் மழை..
சிதம்பரா கணிதப் போட்டிப் பரீட்சை 2017 என்னும் பெயரில் நடைபெறும் சிதம்பரா கணிதப் பெருவிழா இன்று கனடா முதல் ஐரோப்பா தொடங்கி தாயகத்தை தழுவி அவுஸ்திரேலியா, நியூசிலாந்துவரை கொடிகட்டி பறக்கிறது.
தாயகத்தில் மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் என்று சுமார் 32 மேற்பட்ட பாடசாலைகளில் மாணவர்கள் இந்தப் போட்டிப் பரீட்சைக்காக இப்போது குழுமியுள்ளனர்.
அனைத்துப் பாடசாலைகளுக்கும் நேரடியாக சென்று மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்திக்கும் ரியூப்தமிழ் ஊடகப்பிரிவினர் பெரு மகிழ்ச்சியும் உற்சாகமும் கரைபுரண்டு ஓடுவதாக தெரிவிக்கிறார்கள்.
கடன் – தனி இன்றி கண்ணியமாக வாழ்வதற்கு கணிதத்தைக் கற்க வேண்டாமா..? கணிதம் என்பது பாடம் அல்ல ஒரு மகத்தான வாழ்வியற்கலை.. டிமன்சியா போன்ற பெரும் மறதி நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும் கற்பகதரு..
இங்கிலாந்தில் மட்டும் 27 சென்டர்களில் இந்தப் போட்டி பரீட்சை நடைபெறுகிறது பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள், இவர்களில் கணித மேதைகள் யார் பரிசளிப்பு விழா பெரும் திருவிழாவாக இலங்கையிலும், ஐரோப்பாவிலும் நடைபெற இருக்கிறது.
கணித மேதை ராமனுஜர் போல நம்மிடையேயும் மேதைகள் மறைந்திருக்கலாம் அவர்களை வெளிக் கொண்டுவரும் உன்னதத் தேடலாக இந்தப் பரீட்சை நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.
நாளைய மகத்தான கணிதப் பேறறிஞன் எங்கிருக்கிறான் ஒளியடிக்கிறது பரீட்சை..
இந்த விதை முதன் முதலில் தூவப்பட்டது இங்கிலாந்தில் என்பது கவனிக்கத்தக்கது அங்கு ஆரம்பித்து பல்லாயிரம் மாணவர்களை ஒன்றிணைத்து உலகத்தை திரும்பிப்பார்க்க வைத்த இந்தப் போட்டிப்பாPட்சை இப்போது கணிதத்தின் பெருக்கல் விதியாம் வர்க்கமூலம் போல உலகம் முழுவதும் பெருகிச்செல்கிறது.
சிதம்பரா என்றால் என்ன..
உலகப்புகழ் பெற்ற தமிழ் தலைவர்களை உருவாக்கிய வல்வெட்டித்துறை நகரில் உள்ள பாடசாலையே சிதம்பராவாகும், இந்தப் பாடசாலையை கட்டியவர் சிதம்பரப்பிள்ளை என்ற கொடைவள்ளலாகும், அதை அவருக்குப் பின் முன்னெடுத்தவர் தையல்பாகர் முதல் அதிபர் அருட்சுந்தரம் வரை பல மேதைகளாகும்.
இப்போது நூற்றாண்டு கடந்து சாதனை படைக்கும் இந்தப் பாடசாலை அக்காலத்தே ஆங்கிலப்பாடசாலை என்று அழைக்கப்பட்டது தமிழகத்தில் இருந்து வண்ணமாமலை ஐயங்கார் போன்ற ஆங்கில இலக்கிய மேதைகள் அதிபர்களாக இருந்து உன்னதம் கொடுத்த பாடசாலையாகும்.
அதேவேளை இந்தப் பாடசாலையில் அக்காலத்தே சுந்தரமூர்த்தி, மகாலிங்கம், அற்புதநாதன், சத்தியமூர்த்தி போன்ற கணித மேதைகள் ஆசியர்களாக இருந்து எண்ணற்ற கணிதப் பேராசான்களை உருவாக்கினார்கள்.
இவர்கள் தூவிய விதைகள் வீண்போகவில்லை இவர்களால் உருவாக்கப்பட்ட கணித ஆசிரியர்கள் இலங்கையின் கல்விச் சேவையில் மிகச்சிறந்த ஆசிரியர்களாக வலம் வந்தார்கள், விளைவு அது சிதம்பரா கணிதப்போட்டியாக உருவெடுத்தது.
அக்காலத்தே வடமராட்சியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் இங்கு குவிந்தார்கள் சுமார் 1500 பேருக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
மூன்று தடவைகள் தொடர்ந்து அகில இலங்கையின் சாரணருக்கான ஜனாதிபதி கேடயத்தை வென்று வடமாகாணத்தில் உதைபந்தாட்டம், கரபந்தாட்ட கேடயங்களை வென்று அகில இலங்கை கேடயங்களை வைத்து விளையாடிய அரிய பாடசாலை.
இந்தப்பாடசாலையின் பெயரில் இப்படியொரு நிகழ்வு நடப்பது காலம் கொடுத்த வரமாகும்.
இந்தப் பரீட்சையினால் கிடைக்கப்போகும் சமுதாய நன்மை என்ன..
தாயக மாணவர்களை சர்வதேசங்களில் வாழும் புலம் பெயர் தமிழ் மாணவர்களுடன் கணிதத்தில் மோத வைக்கிறது, சர்வதேச தரத்துடன் தாயக மாணவர்கள் போட்டியிட்டு இதுவரை குடத்தில் விளக்குகளாக இருந்த நிலை மாறி சர்வதேச அளவில் குன்றின்மேல் தீபங்களாக எழுச்சி பெற இது உதவுமல்லவா..?
இப்போது பூமிப்பந்தில் நாடுகள் என்ற கோட்பாடு மறைந்து உலகம் என்ற கொள்கை மலர்வதால் எதிர்கால விஞ்ஞான அறிவியல் உலகத்தை வெற்றி கொள்ள கணித அறிவு அவசியம், அதை சர்வதேச மயப்படுத்த வேண்டும்.
பூனைக்கு மணி கட்டுவது யார்… கட்டியிருக்கிறார்கள் சிதம்பரா கணிதப்போட்டியை நடத்தும் பெருமக்கள், இதற்கு பேராதரவு கொடுக்க வேண்டியது நமது கடமையாகும்.
போருக்கு பிந்திய தாயகத்தை எப்படி அபிவிருத்தி செய்யலாம், பணத்தைக் கொடுக்கலாம் பொருட்களை கொடுக்கலாம், மீன் பிடிக்க தூண்டிலைக் கொடுக்கலாம் என்று பலபட சிந்திக்கிறோம் இப்போது அறிவைக் கொடுக்கலாம் என்ற எழுச்சி ஏற்பட்டுள்ளது.
அறிவே அற்றம் (அழிவு) காக்கும் கருவி என்கிறார் வள்ளுவர்.. அதை விதைப்பதுதான் எத்தனை பெரிய புண்ணியம்..
எண்ணும் எழுத்தும் கண்ணனெனத் தகும் என்பது ஒரு பழமொழி..
கல்வியே கண் என்பது சிதம்பராவின் முதுமொழி..
கண் போன்றதே கணிதம்.. அன்று கல்வியை கண்ணென்று போற்றியதால் காலம் கணிதத்தைக் கொடுத்தது சிதம்பராவிற்கு என்பதுதான் எத்தனை பெரிய உண்மை..
அக்காலத்தே எண் கணிதம் என்றார்கள்.. எண் என்றால் எண்ணம்.. கண்ணில் இருந்து பிறப்பது கணிதம்… எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பதுதான் எத்தனை பெரிய இன்பம்..
சற்று முன்னர் யாழ். குடாநாட்டில் இருந்து ரியூப்தமிழ் ஊடகப்பிரிவு அனுப்பிய சுடு சுடு புகைப்படங்கள்..
அலைகள் 04.03.2017 சனி மதியம்