சிதம்பராகல்லூரி வடமராட்சி மண்ணில் இருந்தாலும் பூமிப்பந்தில் தனக்கென தனியான முத்திரை பதித்து நிமிர்ந்து நின்ற காலங்களை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. கல்வியிலும் விளையாட்டிலும் தன்முகவரியை உலகறியச் செய்த பெருமைக்குரியது. பல அதிபர்களின் அயராத உழைப்பும் பல ஆசிரியர்களின் வியர்வைத்துளிகளும் இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டு நிட்பதனை மறைக்கமுடியாது.
2015 ஆம் ஆண்டு பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் தேசியம் வரை சென்று இடங்களை தக்கவைத்துக் கொண்டமை பெருமைக்குரியது. 2016 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகளில் மருத்துவ பீடத்திற்கு இரு மாணவர்களும் கணித விஞ்ஞான கலை பிரிவுகளுக்கு மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வது அண்மைய சான்றுகள்.யார் கண்பட்டதோ தெரியவில்லை 2017 ஆம் ஆண்டின் உதயம் மாசு பட்டதாகவே அமைந்தது. அரசியல் சுயலாபத்துக்காகவும் அதிகாரத்தை திணிப்பதற்காகவும் கல்லூரி SDC தீர்மானத்திற்கு எதிராக இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெறும் 20 நிமிடங்களில் கயவர்கள் பிடுங்கி எறிந்தார்கள்.
சிதம்பராக்கல்லூரியின் அதிகாரம் அதிபர் ஆசிரியர்கள் அதற்கும் மேலுள்ள அதிகாரிகள் யாவரினதும் கைமீறியதாக சென்று விட்டதா? என எண்ணத் தோன்றுகின்றது. யார் யாரோ அதிகாரத்தை கையில் எடுத்து விட்டனர். சிதம்பராக்கல்லூரியின் அதிபர்களோ ஆசிரியர்களோ வெறும் மிட்டாய் சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்ப்பார்கள் என்று நினைத்து விட்டார்கள். சிதம்பராக்கல்லூரி ஆசிரியர்கள் குனியென குனிந்து பணியென பணிந்து போக அவர்கள் ஒன்றும் எட்டாம் கட்டைக்கு எழுதப்பட்டவர்கள் அல்லர். பூரண அதிகாரத்துவமுடைய கல்வி நிலையிலும் தொழில் நிலையிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களே உள்ளனர். இவர்களுக்கு பாலர் பாடம் நடத்த வேண்டிய தேவையில்லை.
இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் பிடுங்கி எறியப்பட்டது மன்னிக்கப்பட முடியாத குற்றமே. சிதம்பரகல்லூரிக்கு என்றும் மாறாத வடுவினை ஏற்படுத்தி விட்டது. வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சியை பார்த்து எதிர்க்கட்சிகள் இதுவரை காலமும் நீங்கள் என்ன பிடுங்கினீர்கள்? என்ன பிடுங்கினீர்கள்? என்று கேள்வியெழுப்பியது உண்மையாக இருக்கலாம். அதற்காக மாகாணசபை உறுப்பினர் சிதம்பராக்கல்லூரியில்
வேப்ப மரத்தை பிடுங்கினார்.
இத்தி மரத்தை பிடுங்கினார்.
பலா மரத்தை பிடுங்கினார்.
தென்னை மரத்தை பிடுங்கினார்.
கமுக மரத்தை பிடுங்கினார்.
பூங்கன்றுகளை பிடுங்கினார்.
இப்படி எல்லாவற்றையும் பிடுங்கி எதிர் கட்சியினருக்கு பதில் கொடுத்து சாதனை படைத்துள்ளார்.
கல்லூரியில் உள்நுழைந்து இத்தனையையும் பிடுங்கி முடிக்கு மட்டும் அதிகாரத்துவம் செய்யும் ஜாம்பவான்கள் அதுதான் பழையமாணவர் சங்கம் ஏன் கை கட்டி வேடிக்கை பார்த்து நின்றார்கள்? அவர்களும் மாகாண சபை உறுப்பினரின் அடி வருடிகளா? மரங்கள் பிடுங்கியதன் பிற்பாடு சிதம்பராக்கல்லூரி பற்றி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட போதும் பல முனைகளில் இருந்து கண்டனங்கள் எழுந்த போதும் அதிகாரத்துவம் செய்யும் பழைய மாணவர் சங்கத்தினர் ஏன் இதுவரை ஓர் கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை?
பழைய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். நீங்கள் ஆலோசனைகள் வழங்கலாம், உதவிகள் புரியலாம் அனல் அதிகாரத்தை மட்டும் கையில் எடுக்காதீர்கள். உங்கள் அதிகாரத்தை அடுப்பங்கரையோடு நிறுத்தி விடுங்கள். முறையான தரம் 1 இல் உள்ள அதிபர், சிறப்பான ஆசிரியர்கள் அவர்கள் தங்கள் வேலைகளை திறம்பட செய்ய விடுங்கள் செய்ய விடுங்கள். அவர்களை அவர்கள் மேலதிகாரிகள் வழிகாட்டட்டும். மேற்பார்வை செய்யட்டும்.
சிதம்பர கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின் பிரகாரம் பொதுக்கூட்டம் கூட்ட படாததால் காலாவதியாகி போயுள்ள சங்கத்தின் பொது கூட்டத்தை உடனடியாக கூட்டி அரசியல்வாதிகளை நிர்வாக சபை உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றி, கல்லூரியின் வளங்களை பாதுகாக்கவும் மேலதிக வளங்களை பெற்று கொடுக்கும் பழைய மாணவர்களை நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
சிதம்பர கல்லூரி படசாலை சமுகம்.