யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிகரித்துள்ள வாள்வெட்டு போன்ற சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்த, சிறிலங்கா காவல்துறை முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆவா குழுவை வேருடன் அகற்றும் நோக்கிலேயே, சிறப்பு அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் யாழ். நகரப் பகுதியிலும், குடாநாட்டின் வேறு சில பகுதிகளிலும், வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும், பெற்றோல் குண்டு வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்தே, சிறப்பு அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் ஐந்து மாணவர்கள் கடந்தவாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து பாரிய வாள்கள், கோடரிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.