சல்லிக்கட்டு போட்டி மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் இளையோர் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். திருச்சியிலும் பல்லாயிரக் கணக்கான இளையோர் போராடி வருகிறார்கள்.
திருச்சியில் போராடிவரும் இளையோருக்கு ஆதரவாக திருச்சி வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களும் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். அத்துடன் தம்மாலான உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சியில் ஆறாவது நாளாக போராட்டத்தை நடத்தி வரும் இளையோருக்கு திருச்சி வாழ் ஈழத் தமிழ் மக்களால் உணவு வழங்க திட்டமிடப்பட்டு நேற்று இரவு முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இரவிரவாக ஈழத் தமிழ் இளைஞர்கள் சேர்ந்து தமதிடத்தில் தயார் செய்யப்பட்ட உணைவை போராட்ட இடத்திற்கு எடுத்துச் சென்று வழங்கவிருந்த சூழ்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை முனைப்புகளை மேற்கொண்டது.
இதனால் தமிழக நிலமை பரபரப்பாகியது. அவ்வாறே திருச்சியிலும் போராட்டக்காரர்களை அகற்றுவதற்கான நெருக்கடிகளை தமிழ்நாடு காவல்துறையினர் மேற்கொண்டிருந்தார்கள். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறை தீவிரமாக இறங்கியதையடுத்து வீடுகளுக்கு சென்றிருந்த இளையோர் மற்றும் மாணவர்கள் அவசர அவசரமாக ஒன்று கூடினார்கள்.
காலையில் மிகவும் குறைந்தளவேயான எண்ணிக்கையில் இருந்த போராட்ட காரர்களை சுற்றிவளைத்து முற்றுகையை இறுக்கிய காவல்துறை மேலும் மாணவர்கள் ஒன்றிணைவதை தடுத்தார்கள். இதனால் விதிகளில் ஆங்காங்கே மாணவர்கள் மறியலில் ஈடுபட்டார்கள்.
இதற்கிடையே எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகாமையில் இருந்த போராட்ட காரர்களை வலுகட்டாயமாக வெளியேற்றியது காவல்துறை. இதனையடுத்து ஆவேசமாகிய மாணவர்கள் அருகாமையில் இருந்த திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் அதிரடியாக உள்நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறை சுதாரிப்பதற்குள் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒன்றுகூடியிருந்தார்கள். நீதிமன்ற வளாகம் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடமல்ல என்பதால் உடனடியாக மாணவர்களை வெளியேற்றுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கறிஞர்கள் மாணவர்களுக்கு ஆதரவாக இருந்து அசம்பாவிதங்கள் ஏற்படாது பார்த்துக் கொண்டார்கள்.
இதற்கிடையே திருச்சி வாழ் ஈழத் தமிழ் இளைஞர்களால் தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரம் பேருக்கு தேவையான வெண் பொங்கல் மற்றும் சாம்பார் எடுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. நீதிமன்ற வாயிலில் நின்ற காவல்துறையினர் மாணவர்களுக்கான உணவு குடிநீர் என்பன வெளியில் இருந்து கிடைப்பதை தடுத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து உள்ளிருந்த மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் உதவியுடன் மாற்றுப் பாதையில் உணவு எடுத்துச் செல்லப்பட்டு போராட்டகாரர்களுக்கு வழங்கப்பட்டது. காலை முதல் உணவோ குடிநீரோ ஏதுமின்றி போராடிவந்தவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக ஈழத் தமிழ் மக்கள் சார்பில் வழங்கப்பட்ட உணவு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.