இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் பல மில்லியன் ரூபாக்களைச் செலவழித்து வீதிகள், பாடசாலைகள், அலுவலகங்கள், வீடுகள், ஆலய வீதிகள், சந்தைகள், பேருந்து தரிப்பிடம் மற்றும் பொது நிறுவனங்களில் மர நடுகைத் திட்டங்களை வல்வெட்டித்துறைப் பகுதியில் நடைமுறைப்படுத்தி வரும் நேரத்தில் பல நூற்றாண்டு கால பழமை வாய்ந்த பச்சைப் பசேலென்று, தூய காற்றை வழங்கிக் கொண்டிருந்த பல மரங்களை வல்வெட்டித்துறை சிதம்பரக்கல்லூரியின் அதிபர் தான் தோன்றித்தனமாக வெட்டி வீழ்த்தியுள்ளார். பசிய மரங்களால் சூழப்பட்டு நாற்புறமும் வகுப்புகளைக் கொண்டிருக்கும் இடத்தில் மாணவர்களின் கற்றல் செயற் பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் விளையாட்டுத்திடல் ஒன்றை அமைப்பதற்காக கல்லூரியின் அதிபர், திரு.எஸ்.குருகுலலிங்கம் ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் கடும் எதிர்ப்பையும் மீறி எவரதும் அனுமதியின்றி ஒரே நாளில் பெக்கோ இயந்திரத்தின் மூலம் அந்தப் பழமை வாய்ந்த மரங்களை வெட்டி வீழ்த்தியிருக்கின்றார்.
இவ்வாறு மரங்கள் யாவுமே வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னர் கல்லூரியின் முகப்பு ஒரு போர்க்களம் போல் காட்சி அளிக்கின்றது. அதிபரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய அடாவடித் தனங்களை எவரும் தடுத்து நிறுத்த முன்வராவிட்டால் தற்பொழுது கல்வியில் பெரும் பின்னடைவைக் கொண்டிருக்கும் கல்லூரி மேலும் பாரிய பின்னடைவுகளைச் சந்தித்து வந்துவிடுமோ எனப் பெற்றோர்களும் ஆசிரியர் களும் மாணவர்களும், மற்றும் கல்லூரியினதும், இயற்கைச் சூழலையும் நேசிக்கும் ஊர்ப்பிரமுகர்களும் அச்சமும், கவலையும் தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரக்கல்லூரியின் மரங்கள் சூழ்ந்த பசுமை நிறைந்த இரு தோற்றங்கள்
மரங்கள் யாவும் வெட்டி வீழ்த்தப்பட்ட பின்னர் கல்லூரியின் இன்றைய தோற்றங்கள்