முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினியின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்” என்ற நூல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி.
ராஜீவ் கொலையின் பின்னணி , வழக்கு விசாரணை , வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு உள்ளிட்டபரபரப்பான தகவல்கள் “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்” என்ற நளினியின் சுயசரிதை நூலில் விபரிக்கப்பட்டுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந்த நூலில், பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள இந்த நூல், நேற்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது.
புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி, முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், நளினியின் தாயார் பத்மாவதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.