பாக்கு நீரிணையில் இந்திய-சிறிலங்கா கடற்படைகள் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்த சிறிலங்காவின் யோசனையை இந்தியா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள இணங்கியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்தக் கூட்டு ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வது குறித்த யோசனையை சிறிலங்கா நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது.
எனினும் இந்தியா அதற்கு இணங்கவில்லை. அண்மையில் புதுடெல்லியில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, மீன்பிடி கூட்டுச் செயலணி ஒன்றை அமைக்க இரண்டு நாடுகளும் இணங்கியிருந்தன.
இந்த மீன்பிடி கூட்டுச் செயலணி என்ற விடயத்துக்குள், இரண்டு நாடுகளின் கடற்படைகளும் கூட்டு ரோந்தில் ஈடுவடும் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்து ஆராயும் விடயமும் உள்ளடங்கியுள்ளது.
இந்தக் கூட்டு செயலணியில், இரண்டு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சுக்கள், கடலோரக் காவல்படைகள் மற்றும் கடற்படைகளின் பிரதிநிதிகள் இடம்பெறவுள்ளனர்.
இந்தக் கூட்டு செயலணி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாக்கு நீரிணையில் இந்தியாவுடன் கூட்டு ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா பல பத்தாண்டுகளாகவே முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
எனினும், விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் இந்தியா அதற்கு இணங்கவில்லை.
போர் முடிந்து ஏழு ஆண்டுகளின் பின்னரே சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆராய இந்தியா இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.