Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Important News » செல்லுபடியற்ற இந்திய நாணயத்தாள்களை சிறிலங்காவில் மாற்றுவது எப்படி?

செல்லுபடியற்ற இந்திய நாணயத்தாள்களை சிறிலங்காவில் மாற்றுவது எப்படி?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 500 ரூபா, 1000 ரூபா நாணயத்தாள்களை செல்லுபடியற்றவையாக அறிவித்ததையடுத்து, சிறிலங்காவில் இந்த நாணயத் தாள்களை வைத்திருக்கும் பெருமளவானோர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த 9ஆம் நாள் தொடக்கம் இந்த நாணயத்தாள்கள் செல்லுபடியற்றவை என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்காவில் உள்ள வெளிநாட்டு நாணயமாற்று நிலையங்களில், 500, 1000 ரூபா இந்திய நாணயத் தாள்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

பழைய நாணயத் தாள்களை மாற்றிக் கொள்வதற்கு இந்திய அரசாங்கம் டிசெம்பர் 30ஆம் நாள் வரை காலஅவகாசம் வழங்கியுள்ளது.

இந்தியாவுக்கு அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் மற்றும் வியாபாரிகள் 500, 1000 ரூபா இந்திய நாணயத் தாள்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் வைத்துள்ள இந்த நாணயத் தாள்களை சிறிலங்காவில் மாற்றிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா நாணயமாற்று சங்கம் கூறுகையில், பெரும்பாலான வெளிநாட்டு நாணயமாற்று செயற்பாடுகள் நாளாந்த நாணயமாற்றுப் பெறுமதியிலேயே இடம்பெறும் என்றும், இந்த முகவர்களுக்கு இந்தியாவில் வங்கிக் கணக்கு இல்லாததால், அவர்கள் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்ட இந்திய நாணயத்தாள்களை மாற்றிக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் உள்ள 70 வீதமான சிறிய நாணயமாற்று முகவர்கள், இந்திய நாணயத்தாள்களை வாங்கி விற்கும் செயற்பாடுகளையே மேற்கொண்டு வந்தனர். அவர்கள் செல்லுபடியற்ற நாணயத் தாள்களை வாங்கினால், அதனை விற்க முடியாது என்பதால், நட்டமடைவார்கள் என்றும் அந்தச் சங்கம் கூறியுள்ளது.

இந்த நிலையில், செல்லுபடியற்ற இந்திய நாணயத் தாள்களை மாற்றுவது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக ஊடகப் பிரிவில் பணியாற்றும் அதிகாரியான நிதின் விளக்கமளித்துள்ளார்.

“சாதாரணமாக ஒரவர் 25 ஆயிரம் இந்திய ரூபாவுக்கும் அதிகமான இந்திய நாணயத்தாள்களை நாட்டுக்கு வெளியே கொண்டு செல்ல முடியாது.

செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நாணயத்தாள்களை இங்குள்ள மக்கள் எவரேனும் வைத்திருந்தால், அந்த தாள்களை மீண்டும் இந்தியாவுக்குச் செல்லும் போது மாற்றிக் கொள்ளலாம்.

இல்லாவிடின், இந்தியாவில் உள்ள நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு அனுப்பி அதனை மாற்றிக் கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய நாணயத்தாள்களை சிறிலங்காவுக்குள் மாற்றுவது தொடர்பாக தமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்று சிறிலங்காவின் நாணய மாற்று கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது சிறிலங்கா மத்திய வங்கியினால் 14 நாடுகளின் நாணயங்களே கண்காணிக்கப்படுகின்றன. அதில் இந்திய நாணயம் பட்டியலிடப்படவில்லை. எனவே, இந்திய நாணய பரிமாற்று வர்த்தகம் சிறிலங்காவில் சட்டரீதியானதல்ல.

அத்துடன் இந்திய நாணயத்தை சிறிலங்காவுக்கு எடுத்துவருவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை” என்று நாணயமாற்று கட்டுப்பாட்டாளர் ரி.எம்.ஜே.வை.பி.பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *