சிறிலங்காவில் சீனாவின் பங்கு தொடர்பாக எழுப்பப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ள சீனத் தூதுவர் , சிறிலங்காவில் சீன அரசு மறைமுக நிகழ்ச்சி நிரல் எதையும் கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் நேற்று ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஆசிரியர்களின் குழுவொன்றைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன் போது கருத்து வெளியிட்ட அவர், “சிறிலங்காவில் பல்வேறு திட்டங்களிலும் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. எந்த திட்டத்துக்காகவும், இலஞ்சம் வழங்கப்படவில்லை.
சீனா தொடர்பாகவும், சிறிலங்காவில் சீனாவின் பங்கு தொடர்பாகவும், சிறிலங்கா மக்களும், ஊடகங்களும் தவறான பார்வையைக் கொண்டிருக்கின்றன.
சிறிலங்காவின் அபிவிருத்திக்கும், இயற்கை அனர்த்தங்களின் போதுமே சீனா உதவ முன்வந்துள்ளது.
எந்த நாட்டின் உள்நாட்டு அரசியல் விவகாரங்களிலும், சீனா தலையிடுவதில்லை. அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்துடன் தான் இணைந்து செயற்படும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே, சிறிலங்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டை அபிவிருத்தி செய்யவும், சீனா இணைந்து பணியாற்றுகிறது.
சீன நிறுவனம் தொடர்புபட்டுள்ள துறைமுக நகரத் திட்டத்தில் எந்த நாடும் இணைந்து பணியாற்ற முடியும்.
துறைமுக நகரத் திட்டம், புதிய அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டு, மீள ஆரம்பிக்கப்பட்டது வரையான காலத்தில் சீன நிறுவனத்துக்கு 140 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டது.
பொருளாதார ஒத்துழைப்பை நாம் அரசியல்மயப்படுத்த விரும்பவில்லை.
சிறிலங்கா நிலையான கொள்கையை கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய அரசாங்கமும் ஆட்சிக்கு வரும் போதும், அதில் மாற்றங்கள் ஏற்படக் கூடாது.
நிலையான கொள்கையைக் கடைப்பிடிக்காவிடின், சிறிலங்கா வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும்.
சிறிலங்காவுக்கு அதிக வட்டி வீதத்தில் சீனா கடன் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.
இதுபற்றி சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் கலந்துரையாடினேன். சிறிலங்காவுக்கு இது மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றால், நிதிக்காக சீனாவை நோக்கி திரும்பியிருக்க வேண்டிய தேவை இல்லை.
சிறிலங்கா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு நாங்கள் 2 வீத வட்டியில் தான் கடன் கொடுக்கிறோம். ஏனைய நாடுகளைப் போன்று 5 வீதமோ அதற்கு அதிகமான வட்டியிலோ கடன் கொடுக்கவில்லை.
கொழும்பில் உள்ள சீன தூதரகத்திடம் பல்வேறு சமூக அமைப்புகள் நிதி உதவி கோருகின்றன. நிதி வழங்கப்படும் போது அது இலஞ்சமாக மற்றவர்களால் பார்க்கப்படும்.
சிறிலங்காவில் சீனா தவறு எதையும் செய்யவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.