யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் கொலை தொடர்பாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்களின் படுகொலைக்கு நியாயம் கோரி, வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நண்பகல் நடந்த இந்தச் சந்திப்பில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டார்.
மாணவர்கள் கொலை தொடர்பாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கும் அதனைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கும் காலஅவகாசம் தேவைப்படுவதாகவும், இந்த வாரத்தினுள் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் சிறிலங்கா அதிபர் இந்தச் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அத்துடன் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அரசாங்கத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருடன் நடத்திய பேச்சு முழுமையாகத் திருப்தியளிக்கும் வகையில் அமையாத போதும், அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை ஏனைய மாணவர்களுக்கு அறிவித்து அவர்கள் ஏற்றுக்கொண்டால், மீண்டும் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடவிருப்பதாக யாழ் பல்கலைக்கழக கலைபீட மாணவர் ஒன்றியத் தலைவர் ரஜீவன் கூறினார்.