Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Articals » ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

ஜே.ஆரின் வழியில் புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

பயங்கரவாதத்தை முறியடிப்பதற்காக சிறிலங்காவால் புதிய சட்டம் ஒன்று வரையப்பட்டுள்ள போதிலும், இந்தச் சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விட மிகவும் மோசமானதாக இருக்கலாம் என மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சட்டவாளர்களும் அச்சமடைகின்றனர்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஜனவரி 2015ல் தோற்கடிக்கப்பட்ட பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்தின் முன்னால் முன்வைக்கப்பட்ட முக்கிய சில கோரிக்கைகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். ‘புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், நாங்கள் எல்லோரும் மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது மக்கள் எல்லோரும் அதிருப்தி அடைந்துள்ளனர்’ என மூத்த மனித உரிமைச் சட்டவாளர் கே.எஸ்.இரத்னவேல் தெரிவித்தார்.

தற்போதைய சிறிலங்கா அரசாங்கமும் பாதுகாப்புப் பொறிமுறைகளை நீக்குவதில் விருப்பங் காண்பிக்கவில்லை என இரத்னவேல் குறிப்பிட்டார். ‘அரசாங்கமானது அரசியற் கைதிகளை விடுவிப்பதிலும் ஆர்வங்காண்பிக்கவில்லை. கிட்டத்தட்ட 160 அரசியற் கைதிகள் தற்போது சிறையில் உள்ளனர்’ என சட்டவாளர் இரத்னவேல் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசானது கோட்பாட்டு ரீதியான பாரபட்சங்களையும் புறக்கணிப்புக்களையும் மேற்கொண்ட போது அதனை எதிர்த்து தமிழ் இளையோர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது இந்தப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடனேயே அப்போதைய அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் 1979ல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன - 'பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிதாமகன்'

ஜே.ஆர்.ஜெயவர்த்தன – ‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிதாமகன்’

ஐரிஸ் ஆயுதக் குழுவிற்கு எதிராக பிரித்தானியாவால் பயன்படுத்தப்பட்ட தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கோட்பாடுகள் மற்றும் சட்டத்தை ஒத்ததாக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது 1982ல் நிரந்தரச் சட்டமாக அறிவிக்கப்பட்டது.

மே 2009ல் புலிகள் அமைப்பு சிறிலங்கா இராணுவத்தால் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு சிவில் அமைப்புக்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ‘அரசாங்கத்தால் புலிகள் அமைப்பானது அழிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையிலிருப்பதற்கான தேவையுள்ளதா?’ என இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் சார்பாக வாதிடும் சட்டவாளரான திரு.இரத்னவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனைத்துலக சமூகத்திலிருந்து வழங்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி அதற்குப் பதிலாக புதியதொரு சட்டமொன்றை அமுல்படுத்தும் நோக்குடன் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தால் சட்ட நகல் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்ட நகலானது முன்னைய சட்டம் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த அச்சத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

‘இப்புதிய சட்ட நகலின் அறிமுகவுரையில் ‘பயங்கரவாதப் பேரிடரில்’ அகப்பட்டுத் தவிக்கும் ஏனைய நாடுகள் மற்றும் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதானது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது சட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டது. அதாவது பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கான  பொறுப்பை இந்தச் சட்ட நகலானது அரசியல் நிறுவகங்களிடம் கையளித்துள்ளது என்பதே இதன் கருத்தாகும்’ என சட்டவாளர் இரத்னவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தச் சட்ட நகல் தொடர்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் உரிமை தொடர்பாகவும் சட்டவாளர்கள் தமது அதிருப்திகளை தெரிவித்துள்ளனர். இந்தச் சட்ட நகலில் கூறப்பட்டுள்ள விடயங்களின் பிரகாரம், காவற்துறை அதிகாரிகளிடம் ஒப்புதல் வாக்குமூலங்களை வழங்கும் போது அவை நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட முடியும் எனவும் ஆகவே இது சிக்கலான பிரச்சினை எனவும் சட்டவாளரும் பத்தி எழுத்தாளருமான கிசாலி பின்ரோ- ஜெயவர்த்தனா கூறுகிறார்.

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த அனைத்து இனத்தவர்களும் தடுத்து வைக்கப்படும் போது மிக மோசமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான சாட்சியங்கள் உள்ளன. இதற்கு இப்பயங்கரவாதத் தடுப்புச் சட்டமானது வழிகோலுகிறது’ எனவும் இவர் தெரிவித்தார்.

தற்போது வரையப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட நகலானது ஏற்கனவே நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் போன்றே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்தச் சட்டநகலானது சுதந்திரமான கருத்து வெளிப்படுத்தல் மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கும் எனவும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் றுக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்றே, தற்போது வரையப்பட்டுள்ள புதிய சட்டமூலமும் பலவந்தக் காணாமற்போதல்கள், சித்திரவதைகள், உயிர்ப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உரிமத்தை வழங்குவதாக திரு.பெர்னாண்டோ தெரிவித்தார். இவர் 2014 மார்ச் மாதம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு இரண்டு நாள் விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

‘பொருளாதாரம் மற்றும் சூழல் போன்றவற்றுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் விதமாகத் தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட நகல் வரையப்பட்டுள்ளது. சட்டத்திற்கு முரணான விதத்தில் இந்தச் சட்டமூலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதானது, அரசியல் யாப்பு உரிமை மீறப்படுவதுடன் உச்சநீதிமன்றால் பல பத்தாண்டுகளாக முன்வைக்கப்பட்ட  முற்போக்கான தீர்வுகளுக்கும் இது களங்கத்தை ஏற்படுத்தும்’ என பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

வடக்கில் வாழும் பல நூறாயிரம் குடும்பங்களுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்பது விரும்பத்தகாத நினைவுகளையே வெளிப்படுத்துகிறது. யுத்தம் இடம்பெற்ற ஆண்டுகளில் இச்சட்டமானது பாரபட்சமற்ற வகையில் பயன்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் வாழும் வடக்கிலுள்ள கிராமங்களை சிறிலங்கா இராணுவ வீரர்கள் சூழ்ந்து கொண்டதுடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி இங்கு வாழ்ந்த பெருமளவான மக்களைக் கைதுசெய்தனர் என சட்டவாளர் இரத்னவேல் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் திரும்பி வரவேயில்லை.  1987-89 காலப்பகுதியில் தெற்கில் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின் போது சிங்கள இளைஞர்களைக் கைதுசெய்வதற்காக சிறிலங்கா அரசால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒரு சில தடவைகள் மட்டுமே சிங்களவர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.

எதிர்க்கட்சி அரசியற் கட்சிகள் மீண்டும் மீண்டும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. போருக்குப் பின்னான காலப்பகுதியில், சிறிலங்கா மீதான அனைத்துலக சமூகத்தின் தலையீட்டை அடக்கும் நோக்குடன், இடதுசாரி ஜே.வி.பி கட்சியினர் இச்சட்டத்தை இல்லாதொழிக்குமாறு கோரிக்கை விடுத்துனர். இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ‘கொடுமையான சட்டமான’ பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

தேசிய பாதுகாப்பிற்கான கண்காணிப்பு ஆணைக்குழுவின் பார்வைக்காக புதிய சட்ட வரைபு கையளிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தச் சட்டவரைபானது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும். இரத்னவேல் போன்ற சட்டவாளர்கள் இந்தச் சட்ட வரைபு தொடர்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

‘சிறிலங்கா அரசாங்கமானது தனது பொருளாதாரக் கோட்பாடுகளுக்காக அரசியல் எதிர்ப்பை எதிர்நோக்குகிறது. இந்நிலையில் பயங்கரவாதம் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையைச் சமாளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமானது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் பயன்படுத்தலாம்’ என சட்டவாளர் இரத்னவேல் தெரிவித்தார்.

ஆங்கில மூலம் – MEERA SRINIVASAN
வழிமூலம்         – The hindu
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *