சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு இரகசிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோத்தாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் உரையாற்றிய போது பகிரங்கமாக அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு என்பன அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
சிறிலங்கா அதிபரின் இந்த உரை, பல்வேறு தரப்புகள் மத்தி்யிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேவிபி மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இதுகுறித்து ஏமாற்றமும் அதிருப்தியும் வெளியிட்டுள்ளன.
சட்டம் ஒழுங்கு அமைச்சை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகி வந்த நிலையில், நேற்றிரவு சிறிலங்கா பிரதமருக்கும் சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான இரகசிய சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்கவும் பங்கேற்றார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சிறிலங்கா அதிபரின் உரை தொடர்பாக கருத்து வெளியிட மறுத்துள்ள நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்தியாலங்கார, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் சிறிலங்கா அதிபருக்கு மகிழ்ச்சி இல்லாவிடின் அதன் மீது அவரால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.