விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று ஈழத் தமிழர்களின் தண்டனைக் காலத்தை புரூக்லின் நீதிமன்றம் குறைத்துள்ளது.
2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில், கனேடியத் தமிழர்களான சதாஜன் சராசந்திரன், சகிலால் சபாரத்தினம், திருத்தணிகன் தணிகாசலம் ஆகிய மூவருக்கும், கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இதையடுத்து, மூவரும், தமது தண்டனையைக் குறைக்கக் கோரி, புரூக்லின் சமஸ்டி நீதிமன்றத்தில் 2012ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் புரூக்லின் சட்டமாஅதிபர் பணியகமும், மனுதாரர்களின் சட்டவாளர்களும் இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்தனர்.
இதற்கமைய, மூவர் மீதான ஆயுத பேரக் குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
எனினும், தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கு பொருள் உதவி வழங்கிய குற்றச்சாட்டில், 15 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதற்கமைய, புரூக்லின் நீதிமன்றம், மூவருக்கும் எதிரான 25 ஆண்டு சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளால் குறைத்துள்ளது.
இந்த தண்டனைக் காலம் முடிந்த பின்னர், மூவரும் கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள்.