பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்புகளை விரிவாக்கிக் கொள்வது தொடர்பாக சிறிலங்காவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தென்கொரியாவின் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்.ஜெனரல் வீ செயுன்கோ, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன மற்றும் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோருடன் நேற்றுமுன்தினம் நடத்திய தனித்தனியான பேச்சுக்களின் பின்னரே இந்த புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்த உடன்பாடு துணையாக இருக்கும் என்றும், சிறிலங்கா படையினருக்கு மேலதிகமான பயிற்சி வாய்ப்புகளை தென்கொரியா வழங்கவுள்ளதாகவும், தென்கொரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தென்கொரிய பாதுகாப்பு படையினருக்கு கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பயிற்சிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும் என்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.