புதிதாக கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் விதிகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வரவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியூசிலாந்தில் தெரிவித்திருந்தார்.
அத்துடன், விரைவில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக, தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் என்று ஏற்கனவே அமைச்சர் சுவாமிநாதனும் தகவல் வெளியிட்டிருந்தார்.
இதுகுறித்து நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புதிதாகக் கொண்டு வரப்படவுள்ள சட்டம் பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.