Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Important News » அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா இடையே உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா இடையே உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது.

நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

முன்பு போலவே, இந்த உடன்பாட்டுக்கு அமையவும், ஒவ்வொருவரும் பரிசீலிக்கப்படுவார்கள்- யாருக்கு உதவி தேவை, யாருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும், நாடு திருப்பி அனுப்புவது சாத்தியமா, நியாயமானதா என்று எல்லாமே, ஆராயப்படும். அங்கு எந்த மாற்றமும் இடம்பெறாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் சுமார் 50 ஆயிரம் இலங்கையர்கள் குறிப்பாக தமிழர்கள் அடைக்கலம் தேடியுள்ளனர். இவர்களின் பல ஆயிரக்கணக்கானோர் இன்னமும் அகதிகள் என்ற நிலையிலேயே உள்ளனர் என்பதும், நாடு திருப்பி அனுப்பப்படும் சூழலில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

swiss-lanka-agrement

அதேவேளை, மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த சுவிஸ் அமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகா நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்று வட மாகாண முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

அப்போது அகதிகளை நாடு கடத்துவது தற்போது ஆபத்தானது என்று சுவிஸ் அமைச்சரிடம் தான் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் பல்வேறு மீள்குடியேற்ற புனர்வாழ்வுத் திட்டங்களையும், சுவிஸ் அமைச்சர் பார்வையிட்டிருந்தார்.

இன்று அவர் சிறிலங்கா அதிபருடன் ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *