Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » Important News » போராட்ட வடிவங்கள் மாறலாம்; போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை’ என்று ‘எழுக தமிழ்’ பேரணியில் ஒன்றுகூடி உலகுக்கு உணர்த்துவோம்! – செந்தமிழன் சீமான்!

போராட்ட வடிவங்கள் மாறலாம்; போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை’ என்று ‘எழுக தமிழ்’ பேரணியில் ஒன்றுகூடி உலகுக்கு உணர்த்துவோம்! – செந்தமிழன் சீமான்!

போராட்ட வடிவங்கள் மாறலாம்; போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை’ என்று ‘எழுக தமிழ்’ பேரணியில் ஒன்றுகூடி உலகுக்கு உணர்த்துவோம்! – செந்தமிழன் சீமான்!

தமிழர் எழுச்சி வீழ்வதெல்லாம் எழுவதற்காக! விதைகள் விழுந்ததெல்லாம் முளைப்பதற்காக! இன விருட்சத்தின் இலையுதிர் காலம் ஒளிந்திருக்கிறது. இனி துளிர்ப்பதற்கான நேரம். இனத்தின் அழிவு கொடுங்கனவென உறைந்திருக்க உயிர்த்தலில் துளிர்க்கிறது தமிழினம். நம் விழிகள் முன்னே விழுந்தவர்கள் நம் ஆன்மாவில் இலட்சியங்களாய் எழுகிறார்கள். புதிய திசை வழியில் புதிய வேகத்தோடு அழிந்த வனமாய் நம்மினம்.

உரிமைகள் மறுக்கப்பட்ட நாம் ஓர் உயிரென மதிக்கப்படாமல் மிதிக்கப்பட்ட மண்ணிலிருந்து கண்கள் முழுக்க வழிகிற உதிரக்கண்ணீரோடு அணியாகி நிற்கிறோம். பற்றியெரிந்த பனைமரங்களும் குருதி வழிந்த செங்காந்தள் மலர்களும் துளிர்த்தே ஆக வேண்டும் அழிவின் இழிவு துடைக்க! வலிகள் மிகுந்த இறந்த காலம் வழிகள் அமைத்துக்கொடுக்க விடுதலையின் நிழல் மெல்லப் படியட்டும் நம் இலட்சியப்பாதையில். முன்னே போங்கள்! முன்னேறிப் போங்கள்! தடைகள் தகர்க்க! விடைகள் பிறக்க!

எதுவும் முடிவும் அல்ல! இறுதித்தமிழன் உள்ளவரை சாத்தியப்பட்டே கொண்டிருக்கும் விடுதலைக்கான விடிவு. கரம்கோர்த்து நிற்போம். புதிய நம்பிக்கைகளோடு கற்ற பாடங்களோடு இன்னும் வேகமாய், இன்னும் விவேகமாய், வீழ்ந்த வீழ்ச்சியிலிருந்து தொடங்கட்டும் தமிழர் எழுச்சி.

நமது முகமுமாய் முகவரியாய் ஆற்றலாய் அறிவாய் எல்லாமுமாக இருக்கிற நம் தேசியத் தலைவரின் ‘வீழ்வதல்ல தோல்வி! வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி!’ என்ற கூற்றுக்கிணங்க வீறுகொண்டு எழுவோம்!

‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா
மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா!’ எனும் புரட்சிப் பாவலனின் புரட்சிவரிகளை நெஞ்சிலேந்துவோம்!

‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!! என்று முழக்கத்தோடு, ‘போராட்ட வடிவங்கள் மாறலாம்; போராட்ட இலட்சியங்கள் மாறப்போவதில்லை’ என்று ‘எழுக தமிழ்!’ பேரணியில் ஒன்றுகூடி உலகுக்கு உணர்த்துவோம்!

மானமும் வீரமும் உயிரென்று வாழ்ந்த மறவர் கூட்டம் “வீழ்வோமென்று நினைத்தாயோ!!!”

இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!

நாம் தமிழர்!

-செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *