தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் சிறப்பாக இடம்பெற்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் நோக்கில், தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், பல்வேறு அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளின் பங்களிப்புடன் இந்தப் பேரணி இடம்பெற்றது.
இன்று காலை 9 மணிக்கு யாழ். பல்கலைக்கழக முன்றிலில் இருந்தும், நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்தும் தொடங்கிய பேரணிகள், யாழ். முற்றவெளி மைதானத்தை சென்றடைந்தன.
யாழ். பல்கலைக்கழக முன்றிலில், கொடியை அசைத்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பேரணியை ஆரம்பித்து வைத்தார். அதையடுத்து. முதலமைச்சரும், வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் பேரணியில் பங்கேற்றனர்.
இரண்டு பேரணிகளும் ஒன்றிணைந்து யாழ்.நகரப்பகுதி வழியாக முற்றவெளி மைதானத்தை அடைந்தன. யாழ். நகரப் பகுதி வணிகர்கள் தமது நிறுவனங்களை அடைத்து ஆதரவு வழங்கியிருந்தனர். வங்கிகள் தனியார் நிறுவனங்களும் பூட்டப்பட்டிருந்தன.
பேரணியின் முடிவில் யாழ். முற்றவெளி மைதானத்தில், அமைக்கப்பட்டிருந்த மேடையில், தமிழ் மக்கள் பேரவையின் முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர்.
எழுக தமிழ் எழுச்சிப் பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த பேரணி மற்றும் எழுச்சி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
விடுதலைப் புலிகளின் காலத்துக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மிகப் பெரிய பேரணியாக இது அமைந்திருந்தது.
படங்கள் – சபேஸ்