நீர்க்காகம் கூட்டுப் பயிற்சியின் ஒரு கட்டமாக, சிறிலங்கா இராணுவக் கொமாண்டோக்கள், மத்தல விமான நிலையத்தில் விமானக் கடத்தல் முறியடிப்பு மற்றும் பணயக் கைதிகள் மீட்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.
நேற்று முன்தினம் மத்தல விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த ஒத்திகையில், சிறிலங்கா இராணுவ கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த 48 கொமாண்டோக்கள், ஆறு குழுக்களாகப் பிரிந்து இந்த ஒத்திகைப் பயிற்சியில் பங்கேற்றனர்.
விமானத்துக்குள் இருந்தும், விமான நிலையக் கட்டடத்துக்குள் இருந்தும், பணயக் கைதிகளை மீட்கும் வகையில் இந்த ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
வான்வழியாகத் தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களின் பயிற்சிகள் தனியாகவும், வாகனங்களில் அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தும் கொமாண்டோக்களின் ஒத்திகை தனியாகவும் இடம்பெற்றது.
இதன்போது, விமானக்கடத்தல்காரர்களை கொமாண்டோக்கள் உயிருடன் பிடித்து, பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒத்திகைகளும் நிகழ்த்தப்பட்டன.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.