முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புதிதாக அமைத்துத் தருமாறு முல்லைத்தீவு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். போரினாலும் ஆழிப்பேரலையினாலும் பெரும் அழிவுகளைக் கண்ட வட்டுவாகல் பாலம் மீள்குடியேற்றத்தின் பின்னர் மக்களினால் புதிதாக அமைத்துத் தரும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த மழை காலங்களில் பெருமளவு வெள்ளம் வட்டுவாகல் பாலத்தினை மூடிப்பாய்ந்து இப்பாலம் உடைப்பெடுக்கும் அபாயத்தினை எதிர்கொண்டுள்ள போதிலும் பலத்த சேதங்களுடன் இப்பாலம் தற்போதும் காணப்படுகின்றது. மாவட்டச் செயலக விபரங்களின் படி இப்பாலத்தினை புதிதாக அமைப்பதற்கு ரூபா.1000 மில்லியன் நிதி தேவைப்படுமென மதிப்பீடுகள் செய்யப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த வேலைகளும் தொடங்கப்படவில்லை. இனிவரும் மழை காலத்திலும் பெரும் வெள்ளம் வட்டுவாகல் பாலத்தினை மூடிப்பாய்ந்து கடலினைச் சென்றடையக் கூடிய நாள் நெருங்கி வருவதால் வட்டுவாகல் பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு மக்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று 19.09.2016 கரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் வட்டுவாகல் பாலத்தினை உருவாக்குங்கள் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.