திருகோணமலை, உவர்மலையில் உள்ள 22 ஆவது டிவிசன் தலைமையகத்தில், சிறிலங்கா இராணுவம் புதிய இராணுவ அருங்காட்சியகம் ஒன்றை திறந்துள்ளது. புதிய இராணுவ அருங்காட்சியகத்தை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா கடந்த 19ஆம் நாள் திறந்து வைத்தார்.
திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கியதான உவர் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி அருங்காட்சியகம், நாட்டிலேயே மிகப் பெரியதாகும்.
இந்த அருங்காட்சியகத்தில், கண்காட்சி பகுதி, காலாட்படை ஆயுதங்கள், கவச வாகனங்கள், ஆட்டிலறி பீரங்கிகள், மற்றும் போர்த்தளபாடங்கள் இடம்பெற்றுள்ளன.
காலனித்துவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடக்கம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வரையில் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.