Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » நந்திக்கடலுக்கான பாதையா- அதிகாரத்தை அடைவதற்கான பாதையா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

நந்திக்கடலுக்கான பாதையா- அதிகாரத்தை அடைவதற்கான பாதையா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த வாரம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு தற்போதைய அதிபரோ அல்லது பிரதமரோ அல்லது இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அமைச்சர்களோ எவரும் அழைக்கப்படவில்லை.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் மட்டுமே புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழைப் பெற்றிருந்தனர்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தான் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை என்ற நூலை முதன்முதலில் மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கினார். மகிந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில், மேஜர் ஜெனரல் ஒருவர் தான் எழுதிய நூலின் வெளியீட்டு விழாவிற்கு எதிர்க்கட்சியை மட்டும் அழைத்து நூலை வழங்கியிருந்திருந்தால், இவர் மீது ‘புலி’ முத்திரை குத்தப்பட்டிருக்கும். அத்துடன் இவருக்கு வழங்கப்பட்ட மேஜர் ஜெனரல் பதவியும் பறிக்கப்பட்டிருக்கும். இதுமட்டுமல்லாது இவருக்கான ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டிருக்கும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் அவருக்கு ஆதரவளித்த மேஜர் ஜெனரல்களுக்கும் மகிந்த ராஜபக்ச என்ன செய்தாரோ அதுவே குறித்த மேஜர் ஜெனரலுக்கும் நடந்திருக்கும். சரத் பொன்சேகாவும் அவருக்கு ஆதரவளித்த சில மேஜர் ஜெனரல்களும் சிறையில் அடைக்கப்பட்டதுடன் சிலருக்குக் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.

சரத்பொன்சேகா இராணுவத்திலிருக்கும் போது எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடன் தொடர்பைப் பேணியது தவறானது என்பதே மகிந்தவாலும் அவரது சகபாடிகளாலும் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டாகும். பொன்சேகாவின் இந்தச் செயலானது துரோகத்தனமானது என மகிந்த தரப்பால் குற்றம் சுமத்தப்பட்டு இவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் பொன்சேகா தொலைபேசி மூலம் உரையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டது. பொன்சேகாவுடன் தொடர்பைப் பேணியதால் பெரும் எண்ணிக்கையான இராணுவ வீரர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டு இது துரோகச் செயல் எனக் கூறப்பட்டதுடன் இந்த இராணுவ வீரர்கள் இராணுவ நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்பட்டனர். எனினும், மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் தீட்டும் மகிந்த, கோத்தபாய மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொடர்பைப் பேணுவது தவறானது என தற்போதைய அரசாங்கம் எவ்வித குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கவில்லை.

தனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டை மீட்ட வீரமுள்ள ஒரு போர்க் கதாநாயகனாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன விளங்குகிறார். இது தொடர்பில் எவ்வித சந்தேகமுமில்லை. எனினும் மகிந்த மற்றும் கோத்தபாய ஆகியோர் மேஜர் ஜெனரல் குணரத்னவை நந்திக்கடலுக்கான பாதைக்காகப் பயன்படுத்தவில்லை, அவர்கள் மீண்டும் தாம் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ‘அதிகாரத்திற்கான பாதைக்காகவே’ இவரைப் பயன்படுத்தியுள்ளனர்.

மேஜர் ஜெனரல் குணரத்னவின் நூல் வெளியீடானது மைத்திரி-ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான ஒரு இராணுவக் கிளர்ச்சி என்பதைக் காண்பிப்பதற்காக கோத்தபாயவால் பாரியதொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்பதை நூலாசிரியரின் உரையிலிருந்தும் தலைமை உரையிலிருந்தும் அறிய முடிந்தது. தன்னுடன் பணியாற்றிய, பயிற்சி வழங்கிய பல இராணுவ அதிகாரிகளுக்கு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பைத் தான் விடுத்த போதிலும் ஒரேயொரு உயர் இராணுவ அதிகாரியே அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்வானது இராணுவத்தாலேயே ஒழுங்குபடுத்தப்பட்டதாக இராணுவ அதிகாரிகள் கருதியதாகவும் ஆனால் அது அவ்வாறில்லை என அவர்கள் அறிந்தபோது அழைப்பிதழை நிராகரித்ததாகவும் மேஜர் ஜெனரல் குணரத்ன தனது உரையில் குறிப்பிட்டார். அத்துடன் இந்த நிகழ்வில் இராணுவ இசைக்குழுவினர் கலந்து கொள்வார்கள் எனத் தான் கருதியபோதிலும் அதற்கும் அவர்கள் மறுப்புத் தெரிவித்ததாக நூல் வெளியீட்டு நிகழ்வைத் தலைமை தாங்கியவர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு எவ்வித கட்சி வேறுபாடுகளுமின்றி அரசியற் தலைவர்களுக்கு அழைப்பை விடுத்திருந்தால் உயர் இராணுவ அதிகாரிகள் நிச்சயமாக இதில் கலந்திருப்பார்கள். இதேவேளையில், இவர் எந்தவொரு அரசியல்வாதிகளையும் அழைக்காது இராணுவத்துடன் மட்டும் இந்த நிகழ்வை நடத்தியிருந்தால் பெருமளவான இராணுவத்தினர் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருப்பார்கள். இந்த விழாவை இராணுவம் ஒழுங்குபடுத்தி நடத்தியிருக்கும். இராணுவ இசைக்குழுவினரும் கலந்து கொண்டிருப்பார்கள்.

எனினும், மீண்டும் மகிந்த அல்லது கோத்தபாய ஆட்சிக்கு வரும் நோக்கை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்த நூல் வெளியீட்டு விழாவில் இராணுவத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதை மேஜர் ஜெனரல் ஆற்றிய உரையிலிருந்து அறிய முடிந்தது. இந்த நிகழ்விற்கு இராணுவ உயர் அதிகாரிகளை அழைத்து நூல் வெளியீட்டை மேற்கொள்வதன் மூலம் தன்னுடன் இராணுவம் உள்ளது என்பதைக் காண்பிக்கவும் மைத்திரி – ரணில் அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையில் பிளவை ஏற்படுத்துவதற்குமே கோத்தபாய விரும்பினார்.

மகிந்த, கோத்தபாய, பொன்சேகாவிற்கு இடையிலான நட்பானது முறிவடைந்தமை ஒரு கெட்டவாய்ப்பாகும் என மேஜர் ஜெனரல் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நட்பு முறிவடைவதற்கு மகிந்த மற்றும் கோத்தபாய உட்பட்ட ராஜபக்ச குடும்பமே காரணமாகும். போர் வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் தனது இராணுவத் தளபதி பதவியைத் தனக்கு வழங்குமாறு பொன்சேகா மன்றாட்டமாகக் கேட்டபோதும் அதற்கு மகிந்தவும் கோத்தபாயவும் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த அதேவேளையில் தமக்கு எதிராக இராணுவச் சதி நடப்பதாகவும் அதிலிருந்து தம்மைப் பாதுகாக்குமாறும் மகிந்தவும் கோத்தபாயவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தனர். மகிந்த, கோத்தபாய மற்றும் பொன்சேகாவிற்கு இடையிலான நட்புறவு முறிந்து போனமை ஒரு கெட்டவாய்ப்பு என மேஜர் ஜெனரல் குணரத்ன மகிந்த அதிபராக இருந்த காலத்தில் கூறியிருந்தால், பதவிநிலைகள் அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் மேஜர் ஜெனரல் குணரத்ன ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆங்கிலத்தில்  – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்        – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *