மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவுடன் செய்து கொண்ட இராணுவ விநியோக உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் அப்போதைய அமெரிக்கத் தூதுவருக்கும் இடையில் 2007ஆம் ஆண்டு, கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு – சேவைகள் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
பரிமாற்றம் மற்றும் விநியோக பரிமாற்றங்கள், உதவி, மற்றும் எரிபொருள் விநியோக சேவைகளை வழங்குவதற்கு வசதிகளை செய்யும் இந்த உடன்பாடு 10 ஆண்டுகள் செல்லுபடியானது.
இந்த உடன்பாட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படைச் செயலர் ரே மபுஸ் அண்மையில் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது. அமெரிக்காவின் இந்த விருப்பம் உறுதிப்படுத்தப்பட்டது.
ஐதேக ஆட்சியில் இருந்த 2002-2003 காலப்பகுதியில் அமெரிக்கா- சிறிலங்கா இடையில் இந்த உடன்பாட்டை செய்து கொள்வதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதும், இறுதி இணக்கம் காணப்படவில்லை.
2007ஆம் ஆண்டிலேயே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்பாடு செய்து கொள்ளப்பட்டமை விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் உதவிகள் சிறிலங்காவுக்கு கிடைப்பதற்கு வழிவகுத்தது.
இறுதிக்கட்டப் போரின் போது, 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் நான்கு ஆயுதக் கப்பல்கள் ஆழ்கடலில் மூழ்கடிப்பதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவே வழங்கியிருந்தது.
சிறிலங்கா கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்துவதற்கு 30 புஸ்மார்டர் பீரங்கிகளையும் அமெரிக்கா வழங்கியிருந்தது.
அத்துடன், விமான எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்யும் விடுதலைப் புலிகளின் முயற்சிகளையும் அமெரிக்கா தடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.