கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீவிபத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகளும், அனைத்துப் பழக்கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின.
நேற்றிரவு 8.30 மணிக்குப் பின்னர், திடீரெனப் பற்றியெரியத் தொடங்கிய தீ, காற்றினால் வேகமாகப் பரவியது.
கிளிநொச்சி பொதுச்சந்தையில் தற்காலிகமாக தகரக் கொட்டகைகளில் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்த புடைவை மற்றும் பழக்கடைகளில் பற்றிய தீயை அணைக்க பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
சிறிலங்கா இராணுவ, காவல்துறை தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு தீயை அணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், 60இற்கும் அதிகமான புடைவைக் கடைகளும், அனைத்துப் பழக்கடைகளும் எரிந்து நாசமாகின.
இதனால், பல கோடி ரூபா பெறுமதியான ஆடைகள் மற்றும் பொருட்கள் நாசமாகின. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.