Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » மூன் வோக் நடனம் ஆடுகிறாரா பான் கீ மூன்?

மூன் வோக் நடனம் ஆடுகிறாரா பான் கீ மூன்?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதியுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது யுத்த அனுபவத்தைப் பதிந்துள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்கின்ற நூலை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.

மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவின் நந்திக்கடலுக்கான பாதையானது புலிகள் அமைப்பானது சிறிலங்கா இராணுவத்தால் வெற்றி கொள்ளப்பட்டது தொடர்பாகக் குறிப்பிடும் அதேவேளையில், இலங்கைத் தீவு முழுமையையும் பாதித்த மூன்று பத்தாண்டு கால யுத்தத்தில் பங்குகொண்ட இராணுவ வீரர் ஒருவரின் உணர்வுகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்ற ஒரு நூலாக இது நோக்கப்படுகிறது.

நந்திக்கடலுக்கான பாதை என்கின்ற நூலின் ஆசிரியர் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு இளம் அதிகாரியாக சிறிலங்கா இராணுவத்தில் இணைந்துகொண்டார். இராணுவத்தில் இணைந்த ஆரம்ப காலம் தொடக்கம் 2009ல் முடிவிற்கு வரும்வரை  போரில் பங்குகொண்டதன் மூலம் இவர் மேஜர் ஜெனரல் பதவி நிலையைப் பெற்றுக்கொண்டார்.

1987ல் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது இராணுவத் தாக்குதலான ‘வடமராட்சி நடவடிக்கை’ தொடக்கம் 2009 வரை புலிகளுக்கு எதிராகப் பல்வேறு யுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மறைந்த ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவ, விஜய விமலரட்ன மற்றும் இராணுவத்தின் மூத்த கட்டளைத் தளபதிகள் போன்றவர்களின் தலைமையின் கீழ் ஒப்பரேசன் லிபரேசன் எனப்படும் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடம்பெற்ற போது மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஒரு இளம் இராணுவ அதிகாரியாகச் செயற்பட்டிருந்தார்.

இவர் தற்போது எழுதியுள்ள தனது நூலில் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் இந்தியாவின் தலையீடு மற்றும் சிறிலங்கா இராணுவ நடவடிக்கையிலிருந்து புலிகள் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை இந்தியா வழங்கியமை தொடர்பில் தான் கோபங்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். road-to-nandikal

ஒப்பரேசன் லிபரேசனின் போது இந்திய விமானங்கள் யாழ்ப்பாணத்தில் உணவுப் பொதிகளை வீசியமை தொடர்பில் தான் எரிச்சலுற்றிருந்தாகவும் இந்திய விமானங்களைச் சுட்டுவீழ்த்த வேண்டும் என்கின்ற உணர்வு தன்னுள் மேலோங்கியிருந்தாகவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘வடமராட்சி நடவடிக்கையின்’ போது இந்தியர்கள் இதில் தலையீடு செய்யாதிருந்திருந்தால் நீண்ட காலத்திற்கு முன்னரேயே புலிகள் அமைப்பை சிறிலங்காப் படையினர் ஒழித்திருப்பார்கள் என சில இராணுவ ஆய்வாளர்கள் தற்போதும் நம்புகின்றனர். அரசியல் தலையீடு காரணமாக வடமராட்சி நடவடிக்கை தோல்வியுற்ற போது அப்போது இளம் இராணுவ அதிகாரியாக இருந்த குணரத்ன மற்றும் அவரது சக வீரர்கள் ஆத்திரமடைந்தனர் என்பதற்கான ஒரு சாட்சியமாக நந்திக்கடலுக்கான பாதை காணப்படுகிறது.

எனினும் இளம் இராணுவ அதிகாரியாக இருந்த இவர்கள் பல ஆண்டுகள் போர்க் கள அனுபவங்களின் பின்னர் அனுபவம் மிக்க தளபதிகளாக வரும்வரை புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தனர். இதுவே நந்திக்கடலுக்கான பாதை கூறும் கதையாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் வளர்ச்சி குறிப்பாக சில மேஜர் ஜெனரல்கள் மற்றும் பிரிகேடியர்கள் உருவாகியமையானது புலிகள் அமைப்பைத் தோற்கடித்துப் போரை வெற்றி கொள்வதற்கான ஒரு பலமாக அமைந்தது. போரின் ஆரம்ப கட்டத்தில், சிறிலங்கா இராணுவத்தின் அதியுயர் இராணுவ நிலையானது மேஜர் ஜெனரலாகும். எனினும் போரின் இறுதியில் பல மேஜர் ஜெனரல்கள் உருவாகியிருந்ததுடன், சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு லெப். ஜெனரல் என்கின்ற பதவி வழங்கப்பட்டதுடன் இந்த நாடானது முதலாவது பீல்ட் மார்சலையும் உருவாக்கியிருந்தது.

சிறிலங்கா இராணுவத்திற்கும் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான குறிப்பிடத்தக்க பல்வேறு யுத்த களங்களுக்கான மையமாக வடக்கு மற்றும் கிழக்கு விளங்கியது. தரையில் மட்டுமல்லாது கடல் மற்றும் வானிலும் பாரிய யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

யுத்த கள அனுபவங்கள் தொடர்பாக மட்டுமல்லாது, புலிகள் அமைப்பு மீதான குறிப்பாக அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான தனது அவதானிப்புக்களை குணரத்ன தனது நூலில் பதிவு செய்ததன் மூலம் தனது துறைசார் சிறப்பை மேலும் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் படிக்காதவராக இருந்திருக்கலாம், ஆனால் இவர் தனது அமைப்பில் அதியுயர் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்பியிருந்தார் என குணரத்ன குறிப்பிட்டுள்ளார். ‘இவர் மிகவும் நேசத்திற்குரிய குடும்பத் தலைவர். சிறிலங்கா இராணுவத்தினர்இ பிரபாகரனினதும் அவரது குடும்பத்தினரதும் விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும் 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.

அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள். அவர் ஒரு இந்துவாக இருந்தாலும் கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும் கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது’  என ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் நல்லதொரு இராணுவத் தலைமைத்துவப் பண்பைக் கொண்டிருந்த போதிலும், இவர் ஒருபோதும் பொருத்தமான அரசியல் சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானதாகும். அதாவது இவர் தனது இராணுவத்தைப் பலப்படுத்துவதற்காகவே காலஅவகாசத்தைப் பெற்றிருந்தார். அத்துடன் அரசியற் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு அரசியல் நோக்கையும் இவர் கொண்டிருக்கவில்லை.

நோர்வேயின் அனுசரணையுடன் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்ற போது பிரபாகரனின் நிலைப்பாடு தொடர்பாக புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கம் அதிருப்தியுற்றிருந்தார். இவர் இந்தக் கருத்தை தனது மறைவிற்கு முன்னர் தனக்கு நெருக்கமான சிலரிடம் குறிப்பிட்டிருந்தார்.

ban-ki-moon-vali (3)போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் கடந்தவாரம் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் இரண்டாவது தடவையாக சிறிலங்காவிற்கான தனது உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தனது நூலான நந்திக்கடலுக்கான பாதையை வெளியிட்டிருந்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிய 3,000,000 வரையான தமிழ்ப் பொதுமக்கள் இடைத்தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா பூந்தோட்டம் முகாமையும் ஐ.நா செயலாளர் நாயகம் நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த வாரம் பான்கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்த போது காணாமற் போனோரின் குடும்பங்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தமையானது யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், போருக்குப் பின்னான மனிதாபிமானப் பிரச்சினைகள் தீர்வு காணப்படாத நிலையிலும் உள்ளதையே கோடிட்டுக் காண்பித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாகக் கையாள்வதில் ஐக்கிய நாடுகள் சபையானது தோல்வியுற்றதை பான்கீ மூன் சிறிலங்காவிற்கான தனது பயணத்திற்கு முன்னர் ஒப்புக்கொண்டிருந்தார்.

போருடன் தொடர்புபட்ட பல்வேறு மனிதாபிமான விவகாரங்களை முதன்மைப்படுத்துவதில் ஐ.நா தோல்வியுற்றதை பான்கீ மூன் ஒப்புக்கொண்ட நிலையில், தமக்கு நீதி வழங்கக் கூடிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானமானது நிறைவேற்றப்படும் என்கின்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் வாழும் நிலையில் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ்ப்பாணத்திற்கான பயணமானது ‘மூன் வோக்’ – Moonwalk (நடனவகை) எனக் கருதப்பட முடியும்.

மூன்வோக் என்பது நடனமாடுபவர் தனது முன்புறமாக அசைவது போன்று தோன்றும் அதேவேளையில் அவர் தனக்குப் பின்புறமாக நகரும் நடன வகையாகும். இவ்வாறானதொரு மூன்வோக் நடனத்தை பான்கீ மூனும் ஆடுகிறாரா என்கின்ற சந்தேகம் தோன்றியுள்ளது.

ஆங்கிலத்தில்   – Manekshaw
வழிமூலம்        – Ceylon today
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *