அணிசேரா நாடுகளின் அமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்கவுள்ளார்.
வெனிசுவேலாவில் வரும் 13ஆம் நாள் தொடக்கம், 18ஆம் நாள் வரை அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபரின் சார்பாக, அமைச்சர் மகிந்த சமரசிங்கவே சிறப்பு உரை நிகழ்த்தவுள்ளார்.
அதேவேளை, இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் குழுவொன்றும் பங்கேற்கவுள்ளது.
அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளதாக, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்த போதிலும், சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமையேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
120 நாடுகள் அங்கம் வகிக்கும் உலகின் இரண்டாவது பெரிய அமைப்பான அணிசேரா நாடுகளின் அமைப்பின்,17 கண்காணிப்பு நாடுகளும், 10 கண்காணிப்பு அமைப்புகளும் அங்கம் வகிக்கின்றன.