தமிழ் மாணவர்களின் விஞ்ஞானக் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் எல்லாமே அழிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவையாக எழுந்து மீண்டும் தொண்டைமானாற்றில் அதன் சொந்த இடத்தில் இயங்குவதற்குத் தயாராகி வருகின்றது.
ஆம்….தமிழ் மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்துவதற்காகவும், கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காகவும், விஞ்ஞான உயர்தர வகுப்பு மாணவர்களைப் பொதுப் பரீட்சைகளுக்குத் தயாராக்குவதற்காகவும் தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் 1968 ஆம் ஆண்டு தொண்டைமானாற்றில் நிறுவப்பட்டது. பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில், விஞ்ஞான ஆசிரியராகப் பணியாற்றிய திரு.எம்.அற்புதநாதன் மற்றும் அவரோடு இணைந்து, பணியாற்றிய வல்வெட்டித்துறை சிதம்பரக் கல்லூரியின் முன்னாள் அதிபராக இருந்த திரு.கோ.செல்வவிநாயகம் உட்பட 16 ஆசிரியர்கள் எடுத்த முயற்சியினால், தொண்டைமானாற்றின் அக்கரையில் “தொண்டைமானாறு வெளிக்கள நிலையம்” என்ற பெயரில் யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் அரச காணியில் கட்டப்பட்டது.
இந்நிறுவனத்தின் தூரநோக்காக “கல்வியின் தரத்தை உயர்த்துதல்” என்பதும்,அதன் பணிக்கூற்றாக “கள வேலைகளையும், ஆய்வு வேலைகளை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களின் விசேட ஆற்றல்களை வளர்த்தெடுத்தல்” என்பதன் அடிப்படையில் பாடவிதானத்துடன் இணைந்த வகையில் விஞ்ஞான ஆசிரியர் களுக்கு விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் களப்பயிற்சி என்பவை தொடர்பாக செயலமர்வுகள் நடத்தப்பட்டன.
அன்று “பச்சைக் கட்டடம்” என்று பிரபலமடைந்த இந்தக் கல்வி நிறுவகம் மாணவர்களின் விஞ்ஞான ஆய்வு ஊக்கத்தை வளர்த்தெடுத்த அதே நேரத்தில்,அவர்களது கல்வி அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தி வந்தது. பல மாணவர்களும், ஆசிரியர்களும் தங்கியிருந்து, கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடவும், கடல் வாழ் அங்கிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும், கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் மூலம், மாணவர்களின் புத்தாக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில், சகல வசதிகளையும் கொண்ட உயிரியல், இரசாயனவியல், பௌதிகவியல் விஞ்ஞான ஆய்வு கூடங்கள், விரிவுரை மண்டபம், நூலகம், கட்புல, செவிப்புல மண்டபம் தங்குமிட வசதிகள் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம், பல நூற்றுக் கணக்கான மாணவர்களின் விஞ்ஞான அறிவு மேம்படுத்தப்பட்டது.
1977 ஆம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்; காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் காரணமாகவும், இராணுவ மையங்களைப் பலப்படுத்தும் நோக்கிலும் உருவாக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாகவும், தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் கட்டடங்களும், அதனுள் இருந்த பெறுமதியான கற்றல்-கற்பித்தல் வளங்களும், அரிய உயிரியல் சேமிப்புக்களும், பல ஆயிரக் கணக்கான நூல்களும் எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ற் மாதம் 10 ஆம் திகதியுடன், வெளிக்கள நிலையத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் முடக்கப்பட்டது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் பிரதம குருக்களில் ஒருவரான அகிலேந்திர ஐயர் அவர்களினால் 50 இலட்சம் ரூபா பெறுமதியான காணி அன்பளிப்பாக வழங்கப் பட்டதைத் தொடர்ந்து, மூன்றரைக் கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், ஆய்வு கூடங்கள், கணினி ஆய்வுகூடம், தங்குமிட வசதிகள், கருத்தரங்க அறை, நிர்வாகச் செயலகம் என்பவற்றை உள்ளடக்கியதாக மூன்று மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண மாணவர்களுக்கு மட்டுமல்லாது இலங்கையின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களும் வருகை தந்து தங்கிப் படித்துப்பயன் பெறக்கூடியதாக இருக்கின்றது.
தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம்
வெளிக்கள நிலையத்திற்கான புதிய கட்டிடம் தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் வருடாந்த செயலாளர் அறிக்கை, நிதி அறிக்கை என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து புதிய செயற்குழு தெரிவு செய்யப்பட்டு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் தொண்டைமானாற்றிலேயே இடம்பெறள்ளமை குறிப்பிடத்தக்கது.