சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார் என்று புதுடெல்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும், வை.கே.சின்ஹாவின் பணிக்காலம், முடிவடையவுள்ள நிலையில், அவர் பிரித்தானியாவுக்கான இந்தியத் தூதுவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கொழும்புக்கான இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார். இவர் ஏற்கனவே, 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் அரசியல் விவகாரங்களுக்கான கவுன்சிலராகப் பணியாற்றியிருந்தார்.
அனைத்துலக உறவுகள் தொடர்பான பட்டப் பின்படிப்பை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்த தரன்ஜித் சிங் சந்து, 1988ஆம் ஆண்டு இந்திய வெளிவிவகாரச் சேவையில் இணைந்து கொண்டிருந்தார்.
ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1990-92 காலப்பகுதியில், அரசியல் விவகாரங்களுக்கான மூன்றாவது செயலராகவும், வர்த்தக விவகாரங்களுக்கான இரண்டாவது செயலராகவும் பணியாற்றிய இவர், சோவியத் ஒன்றியத்தின் உடைவுக்குப் பின்னர், உக்ரேனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 1992-94 காலப்பகுதியில், அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்களுக்கான தலைமை அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.
அதன் பின்னர் நாடு திரும்பிய அவர், 1994ஆம் ஆண்டு தொடக்கம் 1997 மார்ச் வரை, இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடக விவகாரங்களுக்கான பிரிவில் பணியாற்றினார்.
1997 ஏப்ரல் மாதம் வொசிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில், அரசியல் விவகாரங்களுக்கான முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
2000 டிசெம்பர் தொடக்கம், 2004 செப்ரெம்பர் வரை கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றிய அவர், அதன் பின்னர் புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சில், பங்களாதேஷ், சிறிலங்கா, மாலைதீவு, மியான்மார் விவகாரங்களைக் கவனிக்கும் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2005 ஜூலையில் நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பணியகத்தில் இணைந்து கொண்ட சந்து, 2009 மார்ச் வரை அங்கேயே பணியாற்றினார்.
2009 மார்ச்சில் புதுடெல்லி திரும்பிய அவர், ஐ.நாவுக்கான இணைச்செயலராகவும், பின்னர் நிர்வாகப் பிரிவுக்கான இணைச்செயலராகவும், பணியாற்றினார்.
2011 செப்ரெம்பர் தொடக்கம், 2013 ஜூலை வரை பிராங்போர்ட்டில் கவுன்சில் ஜெனரலாக பணியாற்றிய இவர், 2013 ஜூலை தொடக்கம், வொசிங்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பிரதித் தூதுவராக பணியாற்றி வருகிறார்.
சந்துவின் மனைவியான ரீனட் சந்துவும் இந்திய வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும் ஒரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.