வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.
வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது.
இதில் மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் நட்ராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கிலுள்ள உள்ளூர் முதலீட்டாளர்கள், புலம்பெயர்ந்தோர் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
வடக்கில் மீண்டும் முதலீடுகளைச் செய்ய ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு ஆளுனர் அழைப்பு விடுத்திருந்த போதிலும், அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
முன்னதாக, இந்த நிகழ்வில் பங்கேற்க முடியாமைக்கான காரணங்களை விபரித்து வட மாகாண ஆளுர் ரெஜினோல்ட் குரேக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், தம்முடன் கலந்தாலோசிக்காமல் வடமாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் ஆளுனரின் முயற்சிக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
முதலீட்டாளர்களை அழைப்பதற்கு முன்னதாக, வடமாகாண மக்களின் தேவைகள் தொடர்பாக, அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட எம்முடன் கலந்தாலோசனை நடத்தியிருக்க வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு எத்தகைய முதலீடுகள் தேவை என்று ஆய்வு ஒன்றை நடத்தி, அதன் பின்னர், பொருத்தமான முதலீட்டாளர்களை அழைப்பதே சரியான வழிமுறையாகும். ஆளுனர் அவ்வாறு எதுவும் செய்யவில்லை.
கொழும்பில், சிறிலங்கா பிரதமரின் வழிகாட்டலில் நடக்கும் வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்வதால், இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க முடியவில்லை என்று விக்னேஸ்வரன் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள, விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாணசபையை தனிமைப்படுத்தும் அரசியல் நோக்கிலேயே, மத்திய அரசில் உள்ள தேசியக் கட்சிகளின் அரசியல்வாதிகள் இந்த முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.