யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடத்திய மருத்துவ முகாமில், இலங்கைக் குடிமக்களிடம் இருந்து இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக பெறுவதற்கு சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை அனுமதி பெறப்பட்டதா என்று, தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி சன்ன ஜெயசூரிய கருத்து வெளியிடுகையில், புனர்வாழ்வின் போது, முன்னாள் புலிப் போராளிகள் சிலருக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுவது தொடர்பான பரிசோதனைகளுக்காக, சில முன்னாள் போராளிகளிடம் அமெரிக்க மருத்துவர்கள் இரத்த மாதிரிகளை பெற்றதாக சங்கத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
சிகிச்சைக்கு அப்பாற்பட்ட தேவைக்காக தனிநபர்களிடம் இருந்து இரத்த மாதரிகளைப் பெறுவதற்கு நெறி முறை அனுமதி பெறப்பட வேண்டும்.
இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா என்று சிறிலங்கா மருத்துவச் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றிடம் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.