முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த அமெரிக்கத் தூதுவர் இணங்கிய போதிலும், யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்திய அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள், முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளை நடத்த மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் விசஊசி போடப்பட்டதால், அடுத்தடுத்து மரணமாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தநிலையில், ஒப்பரேசன் பசுபிக் எஞ்சல் என்ற பெயரில், யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்த வந்த அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் மூலம், முன்னாள் போராளிகளைப் பரிசோதனை செய்ய அமெரிக்க உதவ வேண்டும் என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பிடம் கோரியிருந்தார்.
மருத்துவ முகாம் நடத்துவதற்காக கடந்த 16ஆம் நாள் அமெரிக்கப் படையினருடன் வந்த அமெரிக்க விமானப்படையின் சி-130 விமானத்தில் கொழும்பில் இருந்து பலாலிக்குப் பயணம் மேற்கொண்ட போது, அமெரிக்கத் தூதுவரிடம் முதலமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
அதற்கு முன்னாள் போராளிகளை தெரிவு செய்து அனுப்பினால், பரிசோதனைகளை நடத்தலாம் என்று அமெரிக்கத் தூதுவர் பதிலளித்திருந்தார்.
இதையடுத்து, தாம் இடைக்காட்டில் நடந்த மருத்துவ முகாமுக்கு ஒரு தொகுதி முன்னாள் போராளிகளை அழைத்துச் சென்ற போது, அங்கு பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான கருவிகள் இல்லை என்று கூறி அமெரிக்க மருத்துவக் குழுவினர் திருப்பி அனுப்பி விட்டதாக வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.