இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான், நேற்று சிறிலங்கா பிரதமர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
நேற்று முன்தினம் கொழும்பு வந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, நேற்று முழுநாளும் சிறிலங்கா அரசாங்க மற்றும் பாதுகாப்புத் துறைப் பிரமுகர்களைச் சந்திப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசிய அவர், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, ஆகியோரையும் சந்தித்தார்.
மேலும் சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தலைமையகம், முப்படைகளின் தலைமையகம் ஆகியவற்றுக்கும், சென்று, தலைமைத் தளபதிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.