வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது .
கடந்த இரு கட்டுரைகளில் பாகிஸ்தானும் மியான்மரும் சீன தலையீட்டையும் மேலைத்தேய அழுத்தத்தையும் கையாழும் தன்மைகள் குறித்து ஆராயப்பட்டது. இந்த வரிசையிலே சிறிலங்கா குறித்த ஆய்வு இங்கே தரப்படுகிறது — புதினப்பலகைக்காக லோகன் பரமசாமி*
அமெரிக்க தலைமையிலான தாராள பொருளாதார கொள்கை போக்கை கொண்ட மேற்கு நாடுகளும் யப்பானும் இணைந்து,யப்பானில் இடம் பெற்ற ஏழு பெரிய நாடுகளுக்கான மாநாட்டில், சீன கப்பல் மற்றும் வான் வர்த்தக போக்குவரத்து பாதையில் அமைந்துள்ள வியட்நாம், லாவோஸ், இந்தோனேசியா, பங்களாதேசம் ஆகியவற்றுடன் சிறிலங்காவும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர அனைத்துலக வியூக ஒழுங்கை உருவாக்கும் பொருட்டு இந்நாடுகள் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு இருந்தன.
கொழும்பு பத்திரிகைகள் இந்த மாநாட்டில் சிறிலங்கா அதிபர் பங்குபற்றியது பெருவெற்றியாக காட்டிஇருந்தன. தமிழினம் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டில் அனைத்துலக சமூகத்தில் சிறிலங்கா அரசு தனித்து விடப்பட்டு விடுமோ என்ற அச்சம் தற்போதைய அரசாங்கத்திற்கு இருந்து வந்தபோதும் இராசதந்திர நகர்வுகளுக்காக வெளிக்காட்டி கொண்டு செயற்படாத தன்மையை பேணிவந்திருந்தது.
தற்போதைய பொருளாதார இராசதந்திர உலக அமைவு சீனாவுக்கும் வலிய தாராள பொருளாதார நாடுகளுக்குமிடையிலான மென்மையான பனிப்போரில் இருக்கிறது. இதனை எவ்வாறு தமக்கு சாதகமாக்குவது என்பதை சிறிலங்கா நன்கு பட்டறிந்துள்ளது.
வலிய நாடுகளின் கூட்டத்தொடரில் சிறிலங்கா வின் நடவடிக்கைகளை உலக பொதுவுடைமை சார்ந்த இணையத்தள கட்டுரை ஒன்று, சிறிலங்கா பிச்சைப்பாத்திரம் ஏந்தும் இராசதந்திரத்தை என்றும் கை விடப்போவதில்லை என்று சுட்டிகாட்டி உள்ளது. இக்கட்டுரையில் சிறிலங்கா மேலும் உதவிகளை பெறுவதிலேயே மிகவும் கரிசனை காட்டி வருவதாக அதிபர் சிறிசேனவின் பேச்சை மேற்கோள்காட்டப்பட்டிருந்தது.
இந்த கூட்டத் தொடரில் பங்குபற்றிய பின்பு நாடு திரும்பிய சிறிலங்கா அதிபருக்கு சீன அரச தலைவர் மீண்டும் தமது நாட்டிற்கு வரும்படி அழைப்பு விட்டிருப்பது சிறிலங்கா இராசதந்திரத்தின் வெற்றியாகவே கொழும்பு பத்திரிகைகள் இன்னமும் சித்திரிக்கின்றன.
“நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன” என்று கூறுவது போல் கடன்வாங்கும் தந்திரத்தில் எதிரிகள் மத்தியில் பேரம் பேசுவதில் சிறந்த பரிச்சயம் பெற்ற நிலையை சிறிலங்கா தலைவர்கள் போர்த்துக்கீசியர் காலத்திற்கும் முன்பிருந்தே மேலைத்தேய நாடுகளை கையாளும் அனுபவம் பெற்றவர்கள் என்பதை இங்கே மறந்து விடக்கூடாது.
1500களில் உள்நாட்டு அரசர்கள் மத்தியில் இடம் பெற்று வந்த பயமுறுத்தல்கள் காரணமாக போத்துக்கீசியருடன் பேரம் பேசிய சிங்கள தலைமைகள் போத்துக்கீசியரிடம்இருந்து தப்புவதற்காக ஒல்லாந்தரிடம் பேரம் பேசினர். பின்பு, ஒல்லாந்தரின் பயமுறுத்தல்களில் இருந்து விடுபட ஆங்கிலேயரிடம் சரணடைந்தனர். ஒவ்வொரு மேலைத்தேய அழுத்தங்களிலும் இருந்து தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு உள்நாட்டு கலகக்காரர்களை தமக்கு சாதக காரணிகளாக பயன்படுத்தியும் வந்தனர் என்பது மறுக்க முடியாத உன்மையாகவே தெரிகிறது.
இவ்வாறு பரிச்சயம் பெற்ற சிங்களத்தலைமை இன்று சீனாவுடனும் மேலைத்தேய நாடுகளுடனும் பேரம் பேசி இன்றைய பூகோள அரசியல் கொள்கை தத்துவ நிலைகளுக்கு அப்பால் தனது பொருளாதார பின்தங்கல்களில் இருந்து தக்கவைத்து கொள்ளும் இராசதந்திரத்தை கையாள்கிறது.
சிறிய நாடுகளுக்கு பொருளாதார வலிமைமிக்க நாடுகள் கடன் வழங்குவதும் பின்பு அந்தக் கடன் தொகையையே தமது தேவைகளுக்க ஏற்ப சிறிய நாடுகளை இணங்கச் செய்யும் வகையில் ஆயுதமாக பயன்படுத்துவதும், இதற்குத் துணையாக அனைத்துலக நாணய நிதியம் போன்ற அமைப்புகளை உயயோகிப்பதாகவும் பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பொதுஉடைமை தொழிலாளர் பத்திரிகை கட்டுரை வெளியிட்டிருந்தது.
TheFinancial Times பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரையோ புதிய தாராள கொள்கையை வலியுறுத்தி அனைத்துலக நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதி, வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிடையே அதிகரித்த சமூக ஏற்றத்தாழ்வை உருவாக்கி உள்ளதாக அனைத்துலக நாணய நிதியத்தின் பொருளியல் விமர்சகர்கள் மத்தியில் கருத்துருவாகி இருப்பதாக கூறுகிறது.
எது எவ்வாறு இருப்பினும், சிறிலங்காவுக்கு கடன் வழங்கிய நாடுகள் பொதுவாக ஏதோ ஒரு நலனை அடிப்படையாக கொண்டே கடன் வழங்கி உள்ளன. தமது நலன்களை பேணும் பொருட்டே இராசதந்திர மரியாதைகளை பகிர்ந்து கொள்வது வழக்கம்.
இதிலே சீனா செய்த உதவிகள் ஒப்பீட்டளவில் மிகப்பாரியது என இந்திய ஆய்வாளர்களே தெரிவித்துள்ளனர். 2014ஆம் ஆண்டு வரையில் சிறிலங்காவுக்கான சீன நேரடி முதலீடு 405 மில்லியன் அமெரிக்க டொலரை தாண்டிவிட்டது. அதேகாலப்பகுதியில் சிறிலங்காவுக்கான இந்திய உதவி 4.3 மில்லியன் அமெரிக்க டொலரை மாத்திரமே எட்டி இருந்தது என்பது அவர்கள் கணிப்பாகும். இதற்கும் மேலாக எட்டு பில்லியன் டொலர் மென்கடன்கள் பீஜிங்கினால் கொடுக்கப்பட்டுள்ளது என்பது இந்திய ஆய்வாளர்களின் பார்வையில் உள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அவர்கள் அண்மையில் சமுத்திர வழி பட்டு பாதை திட்டத்தின் கீழ் சிறிலங்காவை கடற்போக்குவரத்து சுழற்சி மையமாக மாற்றுவதற்கு ஏற்றவகையில் சீன திட்டங்கள் வகுக்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கினார். இது இந்திய, மேலைநாட்டு கூட்டு கொள்கையான புதிய தாராள கொள்கையை பின்பற்றும் நாடுகளின் வரிசையிலிருந்து சிறிலங்கா நழுவுவதான பார்வை ஒன்று உள்ளது.
அனைத்துலக உறவிலே பேரம் பேசும் இராசதந்திரம் இன்றுவரை மிக முக்கிய நிலையில் உள்ளது. போத்துக்கீசியர் காலத்திலிருந்தே மேலை நாட்டவருடன் பேரம் பேசும் இராசதந்திரத்திலே பரிச்சயமான சிறிலங்கா பேரம் பேசும் இராசதந்திரத்திலே ஒருவருடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்று நன்கு அறிந்து நிலைமையை கையாளும் தன்மையை கொண்டது. சிறிலங்கா அதிகாரிகள் மேலைத்தேய பலத்தை மென்மையான இராசதந்திரத்தால் முறியடிக்கும் பாங்கு இன்று வரை மேலை நாடுகளால் உணர்ந்து கொள்ளப்படாலும் அவர்களுடைய அனைத்துலக இராசதந்திர ஒழுங்காற்ற முறைகளாலேயே வரையறுக்கப்படும் நிலையில் இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
இன்று பெரிய நாடுகளின் கூட்டத்தில் பங்குபற்றி பெற்று கொண்ட கடன் உத்தரவாதங்களை தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யிஅவர்கள் கொழும்பு வந்து கப்பல் தள சுழற்சி மையமாக்கும் உத்தரவாதம் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகார இராசாங்க பதில் அதிகாரி ரொம் மலினோவ்ஸ்கி அவர்கள் கொழும்பு வந்தார்.
வல்லரசுகள் தமது நலன்களை பேணுவதில் இங்கே பொருளாதாரம், மனித உரிமை, இவை இரண்டையும் ஆயுமாக பயன்படுத்த முற்படுகின்றன. மேலைத்தேயம் மனித உரிமையையும், சீனா பொருளாதார உதவிகளையும் முதன்மையான வைத்து பேரம் பேசுகின்றது. இவை இரண்டையும் சமாளித்து சிறிலங்கா அரசை தக்கவைத்தல். இராசதந்திர நகர்வை உருவாக்குதல் என்ற மட்டத்திலான பேரம் பேசல்களே சிறிலங்கா அமைச்சர்களுக்கும் அனைத்துலக பிரதிநிதிகளுக்குமிடையில் இடம் பெறுகிறது.
வல்லரசுகளை சமாளிப்பதுவும் பேரம் பேசல்களும் உருவாக்கக் கூடிய பலாபலன்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்க வல்லது என்பதை இந்த கட்டுரை எடுத்து காட்ட முற்படுகிறது.
ஆனால் முன்பு போல் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது ஆறு மாதகாலத்திற்கு ஒரு முறையோ என்று அல்லாது, இன்று தொடர்ச்சியான மிகவும் இறுக்கமான நேர இடைவெளிகளில் அதிகாரிகளின் பயணங்களும் அமைச்சர்களின் பயணங்களும் கொழும்பு நோக்கி இடம் பெற்ற வண்ணம் உள்ளன. சிறிலங்காவின் ஆழமான உறவு யாருடன் என்பதற்கு அப்பால் சீன கடல்வழிப் பட்டுபாதையின் உறுதித்தன்மையும் அதனை முடக்கும் வழிவகைகளுக்கும் இடையில் பூகோள வர்த்தக ஆதிக்கத்தின் மையப்பகுதி யார் கையில் என்ற போட்டியில் இருபகுதிக்கும் ஆன போர்க்களமாக சிறிலங்கா மாறிவிடுமோ என்ற கேள்வியும் உள்ளது.
இந்த போர்க்களத்தின் பயனாக சிறிலங்காவை இராசதந்திர முறையில் மிரட்டியும், கடன் தொகைகள் மூலம் மகிழ்ச்சி ஊட்டியும் இடம்பெறும் நகர்வுகள் மூலம் பணிய வைக்க முடியாத நிலையில் சிறிலங்காவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பதுவும்எதிர் கொள்ளக் கூடிய விடயமாக உள்ளது. நிரந்தரமாக இந்திய-மேற்கு தரப்புகளால் சிறிலங்காவை தமது பக்கத்திற்கு வற்புறுத்த முடியாவிட்டாலும், சீனாவுடன் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை அல்லது நிரந்தர கப்பற்தள வாய்ப்பு உரிமைகளை பெற்றுக் கொள்ளதக்க வகையிலான உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து சிறிலங்காவை தடுப்பதில் மிகவும் கரிசனை காட்டப்படும் என்பதில் ஐயமில்லை.
அண்மைய சந்திப்பில் அமெரிக்கத்தரப்பு அதிகாரி மலினோவஸ்கி அவர்கள் சனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் குறித்தும் போர்க்குற்றச்சாட்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைய அறிக்கைக்கு ஏற்ப இசைந்து செல்வது குறித்தும் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைகளை உறுதிப்படுத்தல், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தல் என சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தும் அநியாயங்கள் அனைத்தையும் வரிசையாக எடுத்து கூறி இருந்தமை அரசை மிரட்டும் இராசதந்திரம் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
அதேகூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமர வீர தனது பேச்சில் அமெரிக்க அதிகாரிகளுக்குமுன் திருகோணமலையின் முக்கியத்துவம் குறித்து பேசுவதிலும் அவர்கள் சுற்றிப்பார்ப்பதையும் எடுத்து கூறிஇருந்தார். இது அமெரிக்காவினை பேரம் பேசலுக்கு இழுக்கும் தந்திரமாகவும் காணலாம். நிலைமையை நகர்த்தக் கூடிய இறுக்கமான நெம்புகோல் பொறிக்குள் இன்னமும் அடங்கவில்லை என்பதையே இது காட்டுகிறது. தற்பொழுது அமெரிக்க வெளியுறவு நிகழ்வுகள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு வாசிங்டனில் சமர்ப்பிக்கப்பட்டு சிறிலங்கா குறித்த அடுத்த நடவடிக்கை வரை காத்திருக்கிறது.
சிறிலங்கா அரசியல் கலாச்சாரத்தில் மேலைத்தேய உறவை சமாளித்தலே பெரும் சவாலாக எடுத்து கையாளப்படுகிறது. இனி வரும் காலங்களில் சீனாவுடன் பாதுகாப்பு உட்பட அதிக உறவு நிலைகளை வளர்த்து கொள்ள வேண்டி வரும் என்ற எண்ணப்பாடு ஏற்கனவே இராசதந்திர சங்கேத மொழிகள் மூலம் தெரிவிக்க ஆரம்பித்தாகி விட்டது. இதில் ஒன்று விரைவில் வர இருக்கும் சீன -சிறிலங்கா உறவின் அறுபதாவது வயது கொண்டாட்டம் ஆகும்.
வெளிவிவகார அமைச்சர் சமர வீர மிக அண்மையில் சிங்கப்பூரில் இடம்பெற்ற தெற்காசிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் மாநாட்டு பேச்சில் இந்து சமுத்திர பிராந்தியத்தில் அனைத்துலக நியதிகளுக்கு ஏற்ப வல்லரசுகளை கட்டுப்படுத்தும் கட்டமைப்பு ஒன்றின் தேவையை சுட்டிகாட்டி உள்ளார்.
அத்துடன் இந்துசமுத்திர கடற்பிராந்தியத்தில் விரைவான அரசியல் பொருளாதார மூலோபாய மாற்றங்களை எதிர் கொள்ள இந்த வலயத்தில் இருக்கும் நாடுகளும் வல்லரசுகளும் தயாராக இருக்கும் படியும் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியா எதிர்பார்க்க முடியாத வேகமான வளர்ச்சியை கண்டு வருவதாகவும், அரசுகளின் ஆதிக்க நிலையைத் தக்க வைத்து கொள்ளவும் ஆதிக்க உரிமைகளை பகிர்ந்து கொள்ளவும் பொதுக்கட்டமைப்பு ஒன்று சமாதானமான அபிவிருத்திக்கு தேவையானது என்றும் கூறி இருந்தார்.
அதேவேளை சிறிலங்கா பிரதமர் விக்கிரமசிங்கே அவர்களின் கருத்தை வெளியிட்ட Pakistan observer தினத்தாள் சிறிலங்காவில் சீன கடற்கடை மீள் எரிபொருள் நிரப்புவதற்கு விரைவில் அனுமதி அளிக்கும் என்று தெரிவித்திருந்தது. கடற்சட்டங்களை ஏற்று நடக்கும் எந்த கப்பலும் கொழும்புக்கு வருவதில் பிரச்சினை இல்லை என்று கூறியதாக Pakistan observer செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக அனைத்துலக இராசதந்திர வரைமுறைகளை அமுல்படுத்தும் நாடுகள் இருக்கும் வரை சிறிலங்கா தனது இராசதந்திர கையாளுகை மூலம் வல்லரசுகளை சமாளித்து கொள்ளும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
மேற்கு நாடுகளின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் கொழும்பு தலைமை ஏற்கனவே இரு கூறுகளாக அமைக்கப்பட்டு கையாளப்படும் என்பதை காணக்கூடியதாக உள்ளது. மேலைத்தேயம் உள்நாட்டில் வேறு எந்த திசையிலும் (மொழி ரீதியான வேறுபாட்டிற்குள்ளோ மதரீதியான வேறுபாட்டிற்குள்ளோ) தலையிடாத வகையில் ஏற்கனவே இருக்கும் பிரதமர், சனாதிபதி பிரிவினையை கொண்டு மேலை நாடுகளையும் சீனாவையும் சமாளிக்கும் தன்மையை கொழும்பு உருவாக்கி உள்ளது.
எதிர் வர இருக்கும் பிரச்சினைகளில் இனஅழிப்பு குற்றச்சாட்டு கொழும்புக்கு என்றும் ஒரு பின்தங்கலாக உள்ளது. எந்த இராசதந்திர நகர்வுக்கும் எதிராக இனஅழிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதை அது விரும்பவில்லை. இதற்கு எதிராக நகர்வதெனில் அனைத்துலக நாடுகளை தனது வாதங்களை ஏற்று கொள்ள வைப்பது. உள்நாட்டில் தமிழ் சமுதாயத்தை அரசுக்கு துணை செய்ய தூண்டும் வகையில் திசை திருப்புவது. புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் வாதங்களை செயலிழந்து நீர்த்துப்போக செய்வது ஆகிய விடயங்கள் முக்கிய கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்துலக நாடுகளை கொழும்பின் விவாதங்களை ஏற்றுக்கொள்ள வைத்தல் என்ற வகையில் வெளிநாட்டு அரச, அரசசார்பற்ற அமைப்புகளின் இராசதந்திரிகளை கௌரவிப்பது முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகிறது என்பது, இவ்விடயம் கொழும்பு செய்தித்தாள்களில் வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் கூறக்கூடியதாக உள்ளது.
பச்சையாக இனஅழிப்பு விடயங்களை எடுத்து விளக்குவதை தவிர்த்து, நேரடி முதலீட்டு வாய்ப்புகளை விளக்குவது, வர்த்தக உடன்படிக்கைகளை உருவாக்கிக் கொள்வது என்பன முக்கிய பங்கு வகிக்கிறது.
மனித உரிமை விவகாரங்களில் நேரடியாக இடம்பெறக்கூடிய அமைப்புகளின் ஆலோசனைகளைப் பெற்று கொள்வது, ஆய்வுகள் செய்வது என காலம் தாழ்த்தும் பொறிமுறைக்குள் கொண்டு செல்வது என்பன இவற்றுள் மேலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
உள்நாட்டு மக்களை நன்கொடைகள் மூலமும் வீட்டு கடன் வசதிகள் மூலமும், அல்லதுநெருக்கடிகள் மூலமும் பதவிகள் மூலமும் சலுகைகளை உருவாக்குவதுடன், சிறிலங்கா தேசத்திற்கு கடமைப்பாடு உடையவர்கள் என்ற உணர்வை மனோயியல் ரீதியாக ஏற்படுத்துவது. உள்நாட்டில் குறிப்பாக தமிழ் சமுதாயத்தை கவனத்தில் கொண்டு கொழும்பு அரசுக்கு இந்த நகர்வுகள் முக்கியமானதாகும்.
ஒரு அரசை ஏற்றுக் கொள்வது என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஆளும் உரிமை பெற்ற அரசை மக்கள் மனதளவில் உடன்பாடு கொண்டவர்களாக மாற்றுதல் மிக முக்கியமானதாகும். குறிப்பிட்ட ஒரு அரசின்சட்டஒழுங்கை பின்பற்றுவர்களும் அதன் பாதுகாப்பில் அன்றாட வாழ்க்கையை நடத்தும் உரிமைபெற்றவர்களும், அரசிடம் உதவிகள் பெற்றுக் கொள்பவர்களும், என எல்லோரும் மனதளவான ஏற்றுகொள்ளும் பிரசைகளுக்குள் அடங்குவர்.
இந்த வகையில் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை ஏற்று வாழ்கின்றனர் என உலகிற்கு காட்டி கொள்வதில் இன அழிப்பு விவகாரத்தை சாதாரண குற்றசெயலாக மாற்றவதற்கு இலகுவாக அமையும். வல்லரசுகளை சமாளிப்பதற்கு சாதாரண பிரசைகள் அன்றாட வாழ்க்கையை நாடிநிற்க வைப்பது முக முக்கியமானதாக நகர்வாக கொழும்பு அரசு கொண்டுள்ளது.
இதில் ஒரு படி மேலாக மக்களை வரி செலுத்த வைப்பது இந்த மனதார ஏற்றல் தத்துவத்தில் அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது. இது வரை காலமும் தமது உள்ளுராட்சி மன்ற அலுவல்களுக்கு மட்டும் வரி செலுத்தி வந்த மக்கள் இனி வருமான வரியும் செலுத்தக்கூடிய நிலைக்கு எடுத்து செல்வது அரசின் தேவையாகபடுகிறது.
பொருளாதார சுற்றோட்ட புள்ளி விபரத் தரவுகளின் படி நாட்டின் எப்பகுதி அதிக அளவில் கொள்வனவு சக்தியும் நுகர்ச்சியும் கொண்டுள்ளதோ அப்பகுதியில் இறுக்கமான வரிஅறவீட்டு முயற்சிகள் அமலாக்கப்படலாம் என்பது எதிர்பார்க்கக் கூடியதாக உள்ளது. அதிக வரி கொண்டுள்ள பிரதேசங்களை விட்டு மக்களை வெளியேற்றுவதன் மூலம் இனங்களை இணைந்து வாழும் தன்மையை உருவாக்க முடியும் என்பது அரச உள்நாட்டு நிர்வாக பொறிமுறையாகும்.
வல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது.
அடுத்து புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இன்று சிறிலங்கா அரசின் கடிவாளமில்லாத குதிரைகள் போல இருப்பது ஒருசில இடங்களில் மிகவும் அபாயகரமானவர்களாக கருதப்படுகின்றனர். பேரம் பேசும் போக்கில் சிறிலங்காவின் இன்றைய நிலையில் புலம் பெயர்நாடுகளில் வாழும் தமிழ் அமைப்புகளின் செயற்பாடுகளை முன்னிறுத்தி கொழும்பு திட்டங்கள் வகுக்குமானால் தமிழ் அமைப்புகள் அபாய நிலைகளை எதிர் நோக்கலாம்.
அதேவேளை சிறிலங்கா எந்த ஒரு வல்லரசுகளூடாகவும் அழுத்தங்கள் ஏற்படுமிடத்து உள்நாட்டு கலவரக்காரர்களை காரணம் காட்டி வல்லரசுகளின் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தன்மையையும் கொண்டது. இதற்கு மதவாதத்தை, முக்கியமாக பௌத்த மதவாதத்தை, ஆயுதமாக பயன்படுத்தும் தன்மையையும் கொண்டது.
இதற்கு நல்ல ஒரு உதாரணமாக இனஅழிப்பிற்கு எதிராக அனைத்துலக விசாரணையை தடுப்பதில் பௌத்த மதத்தின் பங்களிப்பை குறிப்பிடலாம், இதர தேசிய இனங்களுக்கு உரிமைகள் வழங்குவது பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கு தகாதது எனும் மனநிலையை சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டியதில் பௌத்த மதத்திற்கு பெரும் பங்கு உண்டு. மதவாதம் என்பது இதர பாகிஸ்தான், பர்மா போன்ற நாடுகளைப்போல் சிறிலங்காவிலும் சமூக அளவில் படர்ந்துள்ளது. அவ்வப்போது இதனை ஆட்சியாளர்கள் மேலை நாடுகளுடனான பேரம் பேசலுக்கு துணையாக பயன்படுத்துகின்றனர்.
ஆக வல்லரசுகளை சமாளித்தல் என்ற போக்கில் பாகிஸ்தான், பர்மா , சிறிலங்கா ஆகிய மூன்று நாடுகளும் பல்வேறு விடயங்களில் ஒரே தன்மையான போக்கை கொண்டன.
இந்த வகையில் பொது பண்புகள் மற்றும் வேறுபாடுகள் குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம். அத்துடன் சிங்கப்பூர் போல சிறிலங்கா சீனாவுடனும் மேற்குலகுடனும் ஒரே நேரத்தில் இராசதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமா- முடியாதா என்பது குறித்தும் பார்க்கலாம்.
– லோகன் பரமசாமி
*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk