சீனாவின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டம், நிதி நகரம் என்ற பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை, மீண்டும் புதிய உடன்பாடு ஒன்றுக்கு அமைய ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் புதிய உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.
இதில், துறைமுக நகரத் திட்டம் என்பதற்குப் பதிலாக, நிதி நகரம் என்று பெயர் மாற்றம் இடம்பெறவுள்ளது.
இது முற்றிலும் ஒரு நிதி கேந்திரமாகவே இருக்கும் என்றும், எனவே, நிதி நகரம் என்ற பெயரிடப்படுவதே பொருத்தமானது என்றும், கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் பணியாற்றும் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.