அடுத்த முறை வீதியில் இறங்கும் போது, வெறும் கையுடன் திரும்பமாட்டோம், தேவையான இடங்களில் ஆதரவாளர்களை நிறுத்தி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வோம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.
கண்டியில் இருந்து கொழும்புக்கு நடத்திய ஜன சட்டன பாதயாத்திரையின் முடிவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நேற்றுமாலை கொழும்பு நகரில் லிப்டன் சதுக்கத்தில் பாதயாத்திரையின் முடிவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
‘1990,இல் முன்னாள் அதிபர் பிரேமதாசவுக்கு எதிராக கதிர்காமத்தில் நான் மேற்கொண்ட பாதயாத்திரையை விடவும் இது பெரியது. சிறிலங்கா வரலாற்றில் மிகப் பெரிய பாதயாத்திரை இது.
பௌத்தபிக்குகளை சிறையில் அடைத்த இந்த அரசாங்கம், போர் வீரர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசுகிறது.
இந்த பாதயாத்திரை ஒரு ஒத்திகை மட்டும் தான்.அடுத்த முறை வீதியில் இறங்கும் போது, வெறும் கையுடன் திரும்பமாட்டோம், தேவையான இடங்களில் ஆதரவாளர்களை நிறுத்தி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வோம்.
கிராம மட்டத்தில் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் மக்களின் ஜனநாயக உரிமையைப் பறித்து, சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
மக்கள் எனக்குப் பின்னால் வரத் தயாராக இருந்தால் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு நானும் தயாராகவே இருக்கிறேன்.
குற்றங்களை இழைத்ததாக என்னைச் சிறையில் அடைத்தாலும் நான் எனது பயணத்தை நிறுத்தமாட்டேன். நான் குற்றங்கள் எதையும் இழைக்கவில்லை.
உலகின் முன்னர் இருந்த பல சர்வாதிகாரிகளுக்கு நேர்ந்த கதியே இந்த இருவருக்கும் ஏற்படும்.
தற்காலிக நன்மைகளை அனுபவிப்பதற்காகவே பல கட்சிகள் தற்போதைய சர்வாதிகார அரசாங்கத்துடன் ஒட்டியிருக்கின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லிப்டன் சதுக்கத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் இரண்டு இலட்சம் பேர் வரை பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த பாதயாத்திரையிலும் 15 இலட்சம் பேர் திரண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.