Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரிக்கை

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரை நீக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரிக்கை

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்கி விட்டு வேறொருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்ட, சார்ஜன்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, அடையாள அணிவகுப்பில் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்தே இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

பிரிகேடியர் சுரேஸ் சாலியுடன், சார்ஜன்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, மிக நெருக்கமாகப் பணியாற்றியிருந்தார்.

லசந்த படுகொலையுடன் தொடர்புடைய சார்ஜ்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, மற்றும் லான்ஸ் கோப்ரல் கந்தேகெதர பியவன்ச ஆகியோரை, தமது தனிப்பட்ட அதிகாரிகளாக வைத்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் பாதுகாத்து வந்ததாக பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரிகேடியர் சுரேஸ் சாலி, தற்காலிக கேணலாக நியமிக்கப்பட்ட குறுகிய காலத்துக்குள், 2013ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலராக இருந்த  கோத்தாபய ராஜபக்சவினால், பிரிகேடியராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

2009ஆம் ஆண்டு மேஜர் தரத்தில் இருந்த சுரேஸ் சாலி, முன்னைய ஆட்சியாளர்களுக்கு  நெருக்கமானவராக இருந்ததன் மூலம், அந்த ஆட்சியின் முடிவில் பிரிகேடியராகப் பதவி உயர்வு பெற்றுக் கொண்டமை, மூத்த இராணுவ அதிகாரிகளைப் பின்தள்ளிக் கொண்டு, கட்டளைச் சங்கிலியில் முன்னிலை பெற்றிருந்தார்.

இதனால் இராணுவத்தின் நம்பகத்தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு, இராணுவப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, புலனாய்வுப் பிரிவுக்கு வெளியில் உள்ள ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும், சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *