சிறிலங்காவில் சிங்கள பௌத்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இங்கு வாழும் ஏனைய இன மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில், ஜேர்மனி அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட, தொழிற்பயிற்சி நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் நாள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நாங்கள் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளைக் கொண்டே மக்கள் இந்த அரசாங்கத்தை அமைத்தனர்.

நாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். இதனை விரும்பாதவர்கள் சிலர் பல இயக்கங்களை உருவாக்குகின்றனர் என்பது எனக்குத் தெரியும். இந்தப் புதிய இயக்கங்கள் எல்லாம் எதற்கு?

maithri-kilinochchi open

எனினும், நான் எடுத்து வைத்த அடிகளில் ஒன்றைக்கூட பின்வைக்கமாட்டேன்.

இந்த நாட்டில் சிங்கள – பெளத்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் நாட்டில் வாழும் ஏனைய மக்களின் பிரச்சினைகளை சரியாக தெரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

இந்த நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டியவர்கள் நாமே. இவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது எங்களுக்குத் தெரியும்.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து நான் கவலைப்படுகிறேன். இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது.

நல்லிணக்கம் என்பது ஒற்றைச் சொல்லாக இருந்தாலும் அதை செயற்படுத்துவது மிகக் கடினம். ஆனால் எப்படியாவது அதனை செய்து முடிப்போம். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் மகிந்த சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே ஆகியோரும் கலந்து கொண்டனர்.