சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச இன்று மீண்டும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாகவே அவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணைக்காக இன்று காலை பசில் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ச நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.

கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்சவை கடுவெல நீதிமன்றத்தில் முன்னிறுத்திய போது, அவரை எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கோட்டே நீதிவான் லங்கா ஜெயரத்ன முன்பாக நாமல் ராஜபக்ச முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான மூவரின் ஆள்பிணையிலும் செல்ல நீதிவான் உத்தரவிட்டார்.